Friday, 13 February 2015

பாடல் - 8

பலன்: பற்றுகள் நீங்கும், பக்தி பெருகும்

சுந்தரி, எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்தரி, சிந்தூர வண்ணத்தினாள், மகிடன் தலை மேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள், மலர்தாள் என் கருத்தனவே

பொருள்:
சுந்தரி - அழகி
எந்தை - என் தந்தை - சிவா பெருமான் (அபிராமி பட்டர், சிவனை தன் தந்தை என்று கூறுகிறார்)
துணைவி - மனைவி

அதாவது, அன்னை அபிராமி, பேரழகு கொண்டவள்.
அவள் என் தந்தை சிவனின் மனைவி.
எனது பாசத்தொடர்கள் அனைத்தையும் வந்து அரித்து விடுவாள் - அரித்து என்றால், அழித்து என்று பொருள் கொள்ள வேண்டும்.
சிந்தூர நிறத்தினாள்.
அகந்தை நிறைந்த மகிடனின்  (மஹிஷாசுரன்) தலை மேல் நின்று, அவனை (அவன் கர்வத்தை) அழித்தவள்.
நீல நிற சரீரம் கொண்டவள். அதனால் நீலி என்று அழைக்கப்பெற்றவள்.
அழிவே இல்லாத கன்னிகை (கன்னியா குமரி அம்மன்).
பிரம்ம கபாலத்தை தன் மலர்க்கரங்களில் ஏந்தியவள். (பரம சிவன், பிரம்மனின் கர்வத்தை அழிப்பதற்காக, பிரம்மனின் 5 தலைகளில், ஒரு தலையை கொய்தார். அதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தால், அந்த கபாலம், அவர் கையை விட்டு வெளி வராமல், சிவனின் கையிலேயே ஒட்டிக்கொண்டது. அம்பாள் காசியில் அன்னபூரணியாக அந்த கபாலத்தில் அன்னம் இட்ட பிறகு, சிவனின் கையை விட்டு வெளிவந்தது. அதை அம்பாள் தன் கையில் ஏந்தி தன்னுள் சேர்த்துக்கொண்டாள்.)

அவளது மலர்த்தாளே (பாதங்கள்) என்றும் என் சிந்தையில் இருக்கும்.

ஆலயங்களில், துர்கை, மகிடன் தலை மேல் நிற்பதை காணலாம்.

பாடல் (ராகம் - கதனகுதூகலம், தளம் - ஆதி, திஸ்ர நடை) கேட்க:


Check this out on Chirbit

No comments:

Post a Comment