Friday 27 February 2015

பாடல் - 12

பலன் - மனம் த்யானத்தில் நிலை பெறும்

கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பத்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகலிரவா
நண்ணியது உன்னை நயந்தோர், அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே

பொருள்:

அன்னையே, அபிராமியே, புவி - உலகம் ஏழினையும் படைத்தவளே, நான் எப்போதும் நினைத்திருப்பது உன் புகழே. நான் கற்பது உன் நாமத்தினையே. பக்தி செய்வது உன் இரு திருப்பாதங்களையே. இரவும், பகலும் சேர்ந்திருப்பது உன் அடியார்களுடனேயே. இவ்வாறு நான் இருப்பதற்கு என்ன புண்ணியம் செய்தேனோ? - என்று பட்டர் உருகி பாடுகிறார்.

இதிலும் சத்சங்கத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது.

பாடல் (ராகம் - ஜகன் மோகினி, தாளம் - கண்ட சாபு) கேட்க:


Check this out on Chirbit

Wednesday 25 February 2015

பாடல் - 11

பலன்: இல்வாழ்க்கை இன்பமாய் அமையும்

ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும் 
தான் அந்தமான, சரணாரவிந்தம் - தவள நிறக் 
கானம் தன் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே 

பொருள்:
அன்னை அபிராமி அனந்த வடிவினள். எனது அறிவாகவும் திகழ்பவள். எங்கும் நிறைந்திருக்கும் அமுதமானவள். நிலம், நீர் நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் எனும் ஐம்பெரும் பூதங்களால் ஆன வடிவுடையவள். நான்கு மறையின் முடிவும் அவளே. அப்படிப்பட்ட அன்னையின் பாத கமலங்கள், திருவெண்காட்டில் நடனம் புரியும் நடராஜ பெருமானின் தலையின் மேல்  உள்ளது,

தவள நிற கானம் - வெள்ளை நிற காடு  - வெண்காடு

சிதம்பரத்தில் நடனம் புரியும் முன்பு, பெருமான், திருவெண்காட்டில் நடனம் புரிந்ததாக புராணம் கூறுகின்றது. திருவெண்காடு, ஆதி சிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. அங்குள்ள நடராஜ திருமேனியும் பெருமை வாய்ந்தது.

சிவனின் இருப்பிடம் சுடுகாடு என்று கூறுவார். சுடுகாட்டில் சம்பல் நிறைய இருக்கும் அல்லவா? சம்பல் வெள்ளை நிறம். திரு வெண்ணீர் என்று சாம்பலாகிய விபூதிக்கு மற்றொரு பெயர். அதனால் சாம்பல் நிரம்பிய காடு வெண் காடு என்று பெயர் பெற்றது போலும்.

இறப்பிற்கு பின் உடல் வெந்து போகும் காடு ஆதலால் வெங்காடு, திரிந்து வெண்காடு என்று ஆகியிருக்கலாம்.

பாடல் (ராகம் - சஹானா, தாளம் - கண்ட சாபு) கேட்க:


Check this out on Chirbit

Wednesday 18 February 2015

பாடல் - 10

பலன்: மோக்ஷம் பெற்று தரும்

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் - எழுதா மறையின்
ஒன்றே, அரும்பொருளே , அருளே , உமையே, இமயத்து
அன்றும் பிறந்தவளே, அழியா முக்தி ஆனந்தமே

பொருள்:

இமயத்தின் புதல்வியே,  எழுதப்படாத (காதால் கேட்கப்பட்டு வழி வழியாய் வந்த) வேதமே, அதன் பொருளே, அருளே வடிவான உமையே, நான், நின்றாலும், அமர்ந்தாலும், படுத்தாலும், நடந்தாலும், என்றும் நினைப்பது உன்னையே. வணங்குவதும் உன் மலர் பாதங்களையே. இதனால் எனக்கு  கிடைக்கப்போவது முக்தி. அதுவே என்றும் அழியாத பரமானந்தம்.

அம்பாளை ஹிமகிரி தனயே, ஹிமகிரி புத்ரி, ஹிமாச்சல தனயே, ஹிமாத்ரி சுதே, என்றெல்லாம் பெரியோர்கள் கீர்த்தனம் செய்துள்ளார்கள்.

காதால் கேட்டு வழி வழியாய் வந்ததால், வேதத்திற்கு ஸ்ருதி  என்று பெயர்.

இதே போல, சௌந்தர்ய லஹரி, 27-வது ஸ்லோகத்தில், ஸ்ரீ பகவத்பாதாள் கூறுகிறார்:

ஜபோ ஜல்ப சில்பம், சகலம் அபி முத்ரா விரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமனம்,  அசன அத்யாஹுத்ய விதி:
ப்ரணாம சம்வேஷ:, சுகம் அகிலம் ஆத்மார்ப்பன த்ருஷா
ஸபர்யா பர்யா: தவ பவது யன்மே விலஸிதம்

அதாவது, நமது ஆத்மாவை அம்பாளுக்கு அர்ப்பணம் செய்துவிட்டால், நமக்கு ஜீவன் முக்தி கிடைக்கும். அப்படி செய்வதால், நாம் பேசும் பேச்சு, அம்பாளை வர்ணிக்கும் ஸ்லோகங்களாக கருதப்படும். கைகளால் செய்யும் வேலைகள், அம்பாள் வழிபாட்டில் உள்ள 10 முத்ரைகளாகும். நாம் நடக்கும் நடை, அம்பாளை வலம் வருவதாக மாறும். நாம் உண்ணும் உணவு, அம்பாளை குறித்து யாகம் நடத்த உபயோகமாகும் ஆஹுதியாக போற்றப்படும். நாம் படுத்துக்கொள்வது, அம்பாளுக்கு செய்யும் நமஸ்காரமாக கருதப்படும். நாம் என்ன செயல் செய்தாலும், அது அம்பாள் வழிபாடாக மாறும். இவையே ஆத்மநிவேதனம் எனப்படும் 9 வகை பக்தி ஒன்றின் சிறப்பு.

பாடல் (ராகம் - உமாபரணம், தாளம் - ஆதி, திஸ்ர நடை) கேட்க:


Check this out on Chirbit

Friday 13 February 2015

பாடல் - 9

பலன்: அனைத்தும் வசமாகும்

கருத்தன எந்தை தன் கண்ணன வண்ண கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கை சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே

பொருள்:
என் தந்தை சிவபெருமானின் கருத்திலும், கண்ணிலும் என்றும் நிலைத்து இருப்பது, தங்க குன்றுகள் போன்ற நின் திரு மார்பகங்கள்.

அதிலிருந்து வந்த அன்புததும்பிய அந்த முலை பாலினை, நீ அழுத பிள்ளைக்கு (சீர்காழியில், ஞானசம்பந்தருக்கு) கொடுத்தாய். உடனே அப்பிள்ளை பாடல்கள் பல புனைந்தது. அத்தகைய அருளை வழங்கியது, நின் முலைப்பால்.

உன் அன்பு அளவே இல்லாதது. அதனால் உனது மார்பகங்கள் பாரமாய் இருக்கிறது. அத்தகைய மார்பும், அதில் நீ அணியும் ஆரமும் (மாலை), உன் சிவந்த கையில் இருக்கும் வில்லும், அம்பும், உன் சிவந்த இதழில் தவழும் குறுநகையும், மொத்தத்தில் நீயும் வந்து என் முன் நிற்பாயாக.

அம்பாளின் முலைப்பால், சரஸ்வதி கடாக்ஷத்தை அளிக்கும் என்று சௌந்தர்ய லஹரியில் ஸ்ரீ ஆதி சங்கரர் கூறியுள்ளார்.

ஸ்லோகம் - 75
தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி சாரஸ்வத மிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு; ஆஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரௌடானா மஜினி கமனீய: கவயிதா

மலை அரசன் பெண்ணே, உன் முலைப்பால் உனது  இதயத்திலிருந்து உதித்த
அம்ருத ப்ரவாஹம் என கருதுகிறேன். சரஸ்வதியே இவ்வுரு கொண்டு வந்தாள். ஏனென்றால், அப்பாலை அருந்தி, தென்னாட்டில் பிறந்த குழந்தை ஒன்று பாடல்கள் பல பாடி, கவிகளில் தலை சிறந்தவனாக ஆயிற்று.

பாடல் (ராகம் - தர்பார், தாளம் - ஆதி திஸ்ர நடை) கேட்க:


Check this out on Chirbit

பாடல் - 8

பலன்: பற்றுகள் நீங்கும், பக்தி பெருகும்

சுந்தரி, எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்தரி, சிந்தூர வண்ணத்தினாள், மகிடன் தலை மேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள், மலர்தாள் என் கருத்தனவே

பொருள்:
சுந்தரி - அழகி
எந்தை - என் தந்தை - சிவா பெருமான் (அபிராமி பட்டர், சிவனை தன் தந்தை என்று கூறுகிறார்)
துணைவி - மனைவி

அதாவது, அன்னை அபிராமி, பேரழகு கொண்டவள்.
அவள் என் தந்தை சிவனின் மனைவி.
எனது பாசத்தொடர்கள் அனைத்தையும் வந்து அரித்து விடுவாள் - அரித்து என்றால், அழித்து என்று பொருள் கொள்ள வேண்டும்.
சிந்தூர நிறத்தினாள்.
அகந்தை நிறைந்த மகிடனின்  (மஹிஷாசுரன்) தலை மேல் நின்று, அவனை (அவன் கர்வத்தை) அழித்தவள்.
நீல நிற சரீரம் கொண்டவள். அதனால் நீலி என்று அழைக்கப்பெற்றவள்.
அழிவே இல்லாத கன்னிகை (கன்னியா குமரி அம்மன்).
பிரம்ம கபாலத்தை தன் மலர்க்கரங்களில் ஏந்தியவள். (பரம சிவன், பிரம்மனின் கர்வத்தை அழிப்பதற்காக, பிரம்மனின் 5 தலைகளில், ஒரு தலையை கொய்தார். அதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தால், அந்த கபாலம், அவர் கையை விட்டு வெளி வராமல், சிவனின் கையிலேயே ஒட்டிக்கொண்டது. அம்பாள் காசியில் அன்னபூரணியாக அந்த கபாலத்தில் அன்னம் இட்ட பிறகு, சிவனின் கையை விட்டு வெளிவந்தது. அதை அம்பாள் தன் கையில் ஏந்தி தன்னுள் சேர்த்துக்கொண்டாள்.)

அவளது மலர்த்தாளே (பாதங்கள்) என்றும் என் சிந்தையில் இருக்கும்.

ஆலயங்களில், துர்கை, மகிடன் தலை மேல் நிற்பதை காணலாம்.

பாடல் (ராகம் - கதனகுதூகலம், தளம் - ஆதி, திஸ்ர நடை) கேட்க:


Check this out on Chirbit

Tuesday 10 February 2015

பாடல் - 7

பலன்: பெரும் துன்பம் யாவும் நீங்கும்

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய், கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய், சிந்தூரானன சுந்தரியே

பொருள்:

கமலாலயன் - தாமரையில் உதித்தவன் - பிரம்மன்
மதியுறு வேணி மகிழ்நன் - மதி - சந்திரன் (பிறை சந்திரன்). வேணி - வீணை உடையவள். பிறை சந்திரனை அணிந்தவள் - சரஸ்வதி.

பிரம்மனை கமலாலயன், மதியுறு வேணி மகிழ்நன் என்று பட்டர் கூறுகிறார்.

மால் - விஷ்ணு

அதாவது, பிரம்மனும், விஷ்ணுவும் வணங்கி, என்றும் துதிக்கும் சிவந்த பாதங்களை உடையவளே, சிந்தூர திலகம் நெற்றியில் அணிந்த அழகியே, அபிராமியே, (ததி - தயிர்) - தயிரை கடையும் மத்து போல, இவ்வுலகில் பிறப்பு - இறப்பு என்று என் ஆவி சுழலாமல் முக்திக்கு வழி வகுப்பாய்.

சௌந்தர்ய லஹரியில் ஆச்சர்யாள் தேவியின் பாத தூளியின் மகிமையை அவித்யனாம் என தொடங்கும் 3 வது ஸ்லோகத்தில்,

"ஜன்ம ஜலதௌ நிமக்னானம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி"  என்று கூறியுள்ளார்.

அதாவது, சம்சாரம் என்னும் கடலில் மூழ்கியவனுக்கு அம்பாளின் பாத தூளி, வராஹத்தின் கோரை பற்கள் போல். வராஹ மூர்த்தி எப்படி, பூமி பிராட்டியை ஆழ் கடலிலிருந்து தன் கோரைப் பற்களால் தூக்கி நிறுத்தினாரோ அதுபோல அம்பாளின்  பாத தூளியனது, சம்சார கடலில் மூழ்கி தத்தளிப்பவரை தூக்கி விடும்.

சம்சார சக்கரத்திலிருந்து என்னை விடுவிப்பாய் என்பதே இந்த பாடலின் சாரம்.

பாடல் (ராகம் - முகாரி, தாளம் - ஆதி, திஸ்ர நடை) கேட்க:


Check this out on Chirbit

Friday 6 February 2015

பாடல் - 6

பலன்: மந்திர சித்தி அளிக்கும்

சென்னியது உன் பொன் திருவடி தாமரை, சிந்தை உள்ளே
மன்னியது உன் திரு மந்திரம், சிந்தூர வண்ண பெண்ணே,
முன்னிய நின் அடியாருடன் கூடி, முறைமுறையே
பன்னியது என்றும் உந்தன் பரம ஆகம பத்ததியே

பொருள்:
சிந்தூர வண்ணம் - சிவப்பு  நிறம்
சிவந்த வண்ணம் கொண்ட பெண்ணே, அபிராமியே, உன் திருவடிகளே தாமரை. அதனை என்றும் என் தலையிலேயே இருத்தி விடு. என்றும் என் சிந்தையில் நிலைக்கொண்டிருப்பது உனது திருமந்திரம். நான் இனி கலந்து பழகப்போவது, என்றும் உன் பெருமையை பேசும் நின் அடியார்களுடன். உனது மேலான ஆகம நெறிகளையே நாளும் நான் மேற்கொள்ளப்போகிறேன்.

அன்னையின் திருவடிகள், வேதங்களின் தலை போன்றதான உபநிடதங்களின் உச்சியில் விளங்குவதாக சௌந்தர்ய லஹரியில் ஸ்ரீ ஆதி சங்கரர் வர்ணிக்கிறார்.

ச்ருதீநாம் மூர்த்தானோ தததி தவ யௌ சேகரதயா
மம அபி ஏதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ
யயோ: பாத்யம் பாத: பசுபதி ஜடாஜூட தடினீ
யயோர் லாக்ஷா லக்ஷ்மீ: அருண ஹரி சூடாமணி ருசி:

ச்ருதீநாம் மூர்த்தானோ - ச்ருதி - வேதம், மூர்த்தான: - தலை
அதாவது, சங்கரர் கேட்டுக்கொள்கிறார், "தேவி, உனது எந்த பாதங்களை, வேதத்தின் தலை போன்றதான உபநிடதங்கள் தங்கள் தலையில் தரிக்கின்றனவோ அந்த பாதங்களை ஏன் தலையிலும் கூட தயவு கூர்ந்து வைத்தருள்வாய். உன் பாதங்களுக்கு அளிக்கப்பட தீர்த்தம், பசுபதி, சிவனின் ஜடையில் உள்ள கங்கை. அவற்றிற்கு வைக்கப்பட்ட நலங்கு, விஷ்ணுவின் க்ரீடத்தில் உள்ள மாணிக்கத்தின் ஒளி."

நாம் முன்னர் பார்த்ததுபோல், (பாடல் 4 ல்) சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள் யாவரும் தங்கள் சிரத்தை அம்பாளின் பாதத்தில் வைத்து வணங்குகிறார்கள் என்பதற்கு ஏற்ப இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது.

மேலும் சங்கரர், மிகவும் அடக்கத்தோடு, "என் தலை மேலும் பாதங்களை  வைக்கக்கூடாதா?" என்று கேட்கிறார். நேரடியாக தனக்கு தான் தரவேண்டும் என்று வாதாட வில்லை. இது அவரின் அடக்கத்தை (வினயத்தை) காட்டுகிறது.

பாடல் (ராகம் - யதுகுல காம்போஜி, தாளம் - ஆதி [திஸ்ர நடை]) கேட்க:

Check this out on Chirbit


Wednesday 4 February 2015

பாடல் - 5

பலன்: மனக்கவலைகள் அகலும்

பொருந்திய முப்புரை செப்புரை செய்யும், புணர் முலையாள்
வருந்திய வஞ்சி மருங்குல், மனோன்மணி, வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை, அம்புயம் மேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே

பொருள்:
முப்புரை - முத்தொழில் (படைத்தல், காத்தல், அழித்தல்)
அன்னையே, உனக்கென்றே பொருத்தமான முத்தொழில்களை செம்மையாக செய்பவள் நீ. அவ்வாறு செய்வதால் மிகுந்த நிறைவுடன் இருக்கிறாய். கருணைமிக்கவள் நீ ஆதலால், உனது மார்பகங்கள் பெரியதாக உள்ளது. உனது இடையோ கொடி போல சிறியது, மெல்லியது. பருத்த முலைகளை (பெரிய மார்பகங்கள்) உனது மெல்லிய இடையினால் தாங்க முடியவில்லை. அதனால் வருந்துவது போல் இருக்கிறது.

(இதனை லலிதா சஹஸ்ரநாமத்தில் - "ஸ்தன பார தலன் மத்ய பட்ட பந்த வலித்ரயா" என்று கூறப்படுகிறது. அதாவது, ஸ்தனம் - மார்பு, அதன் பாரத்திலிருந்து மெல்லிய இடையை (மத்ய - இடை) காக்க அங்கே மூன்று கோடுகள் உள்ளது).

அவள், சிவனின் மனதிற்கு இனியவள். ஆதலால் மனோன்மணி.

சடைமுடி தரித்தவரான சிவபெருமான், தேவ - அசுரர்கள் பாற்கடல் கடையும் போது வெளிகிளம்பிய ஆலகால விஷத்தை அருந்தினார். அந்த நஞ்சு அவரை ஒன்றும் பண்ணாமல் இதுநாள் வரை தன் கழுத்தில் வைத்து வாழ்ந்து வருகிறார். இது எப்படி சாத்யம்? நம் அன்னை அந்த நஞ்சினை அமுதாக மாற்றிவிட்டாள்.

அம்புயம் - அம்புஜம் என்பதின் திரிபு. தாமரை.

தாமரை மேல் அமர்ந்திருப்பவள் அன்னை அபிராமி. அதன் இதழ்களை விட மிருதுவானஅவளது பாதத்தை,தன் தலை மீது வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார் அபிராமி பட்டர்.

அம்பாளின் முலை சிறப்பை பற்றி கூறும் சில ஸ்தலங்கள்:
அம்பாள், திருவிடைமருதூரில் ப்ரஹத்குசாம்பிகை (பெரிய முலை அம்மன்) என்றும், திருவீழிமிழலையில் சுந்தரகுசாம்பிகை (அழகிய முலை அம்மன்)  அல்லது ப்ரஹத்சுந்தரகுசாம்பிகை (அழகிய மாமுலை அம்மன்) என்றும், திருவண்ணமலையில் அபீதகுசாம்பிகை (உண்ணாமுலை அம்மன்) என்றும் அழைக்கபடுகிறாள்.

குசம் - முலை, மார்பு
ப்ரஹத் - பெரிய
சுந்தர - அழகிய
அபீத - உண்ணாத

உண்ணாமுலை என்றால் அம்பாளின் புதல்வர்கள் கணபதி, ஸ்கந்தன், ஸாஸ்தா ஆகியோர், அவளின் முலைப்பாலினை அருந்தியது கிடையாது. ஒருவராலும் பாலினை (ஸ்தூலமாக) உண்ணப்படாத முலை உள்ளவள். எனவே இப்பெயர்.

அம்பாளின் தாடங்க மகிமை:
சௌந்தர்ய லஹரியில், 28-வது ஸ்லோகம்.

"சுதாம் அப்யாஸ்வாத்ய ப்ரதிபய ஜரா ம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விஷ்வே விதி சதமகாத்யா திவிஷத
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத காலகலனா
ந சம்போஸ் தன் மூலம் தவ ஜனனி தாடங்க மஹிமா"

அதாவது அமுதினை உண்ட தேவர்கள் யாவரும் பிரளய காலத்தில் அழிவுறுகிரார்கள். ஆனால் ஆலகால விஷத்தினை அருந்தியும், சிவனுக்கு அழிவு என்பது இல்லை. இது எப்படி? உனது தாடங்கதினால்தான். நீ அணிந்துகொண்டிருக்கும் தாடங்கம் (தோடு) உன் மணாளனை காக்கிறது.

பாடல் (ராகம் - ஸ்ரீ, தாளம் - ஆதி) கேட்க:


Check this out on Chirbit




Tuesday 3 February 2015

பாடல் - 4

பலன்: உயர்பதவிகள் கிடைக்கும்

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார்சடை மேல் 
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த 
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

பொருள்:

அனைவரும் (மனிதர், தேவர், முனிவர்) தங்கள் தலையை அபிராமியின் பாதத்தில் வைத்து வணங்குகின்றனர். அன்னையின் பாதம் சிவப்பாக இருக்கிறது. சேவடி என்றல் சிவந்த அடி (பாதம்). பட்டர் கேட்டுக்கொள்வது என்னவென்றால், "அன்னையே, கொன்றை பூ மாலை அணிந்த சடை முடி உடையவரும், குளிர்ந்த கிரணங்கள் வீசும் சந்திரனையும், பாம்பினையும், கங்கையினையும் அந்த சடைமுடியில் தரித்தவருமான சிவபெருமானும், நீயும் எப்போதும் என் சிந்தனையில் நிலைத்திருக்கவேண்டும்".

பகீரதன் என்னும் அசுரன், ஆகாயத்திலிருந்து மிகவும் முயற்சி செய்து, கங்கையை இந்த பூமிக்கு கொண்டுவந்தான். (அதனால் நாம் கஷ்டப்பட்டு செய்யும் முயற்சியை, பகீரத பிரயத்னம் என்கிறோம்). அந்த பிரவாஹத்தை சற்று தாங்கி பிடித்து பின் பூமியில் ஓட விடவேண்டும் என்று பிரம்மா கூறினார். அப்படியே பூமியில் விழுந்தால், அந்த வேகத்தை பூமியால் தாங்கமுடியாது என்பதால், சிவன் தனது ஜடையில் கங்கையை தாங்கி முடிந்தார். பின்னர் அந்த நதி, சம வேகத்தில் ஓடியது. பகீரதனால், பூமிக்கு கொண்டுவரப்பட்டதால், கங்கைக்கு பாகீரதி, பகீரதி என்ற பெயர்களும் உண்டு.

இன்னொரு விதமாக கூறுவது, திருமால், த்ரிவிக்ரம அவதாரம் செய்தபோது (மகாபலியிடம், மூன்றடி மண் கேட்டு வாமனனாய் நின்று, பின் த்ரிவிக்ரம ரூபம் (விஸ்வரூபம்) கொண்டு முதல் அடி வானை அளந்தபோது இந்த அண்டத்தின் மேல் ஓடு உடைந்து, சத்யலோகத்தில் த்ரிவிக்ரமனின் கட்டைவிரல் நகம் பட்டது. அதற்கு ப்ரஹ்மா தனது கமண்டல நீரால், அபிஷேகம் செய்தார். அதிலிருந்து புறப்பட்ட நீர் தான் கங்கை நதி.

லலிதா சஹஸ்ரநாமத்தில், "ஹரிப்ரஹ்மேந்தர சேவிதா" என்று ஒரு நாமம் வரும். அதாவது ஹரி (விஷ்ணு), பிரம்மா, இந்திரன் ஆகியோரால் வணங்கப்படுபவள் என்று பொருள்.

சௌந்தர்ய லஹரி, முதல் ஸ்லோகத்தில், "அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதிபிரபி" என்று வரும். ஹரி, ஹரன் (சிவன்), விரிஞ்சி (ப்ரஹ்மா) முதலியவர்களால், ஆராதிக்கப்படுபவள் என்று பொருள். இந்த சௌந்தர்ய லஹரியில், மும்மூர்த்திகளும் தங்கள் சிரஸை (தலை) அம்பாளின்  பாதத்தில் வைத்து வழிபடுகிறார்கள் என்று வரும். அதனால், அம்பாளின் பாதத்தை பூஜை செய்தால், மும்மூர்த்திகளின் சிரஸிற்கு பூஜை செய்த பலன்.

பாடல் (ராகம் - வராளி, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

Sunday 1 February 2015

பாடல் - 3

பலன்: குடும்பக் கவலைகள் தீரும்

அறிந்தேன், எவரும் அறியா மறையை அறிந்துகொண்டு,
செறிந்தேன் நினது திருவடிக்கே திருவே, வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே

பொருள்:
அபிராமியே, இதுநாள் வரை, எனது பழவினைகள் காரணமாக, உன் பெருமையை எண்ணி துதிக்கும் உனது அன்பர்களின் சங்கத்தை நாடவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் நரகத்தினுள் விழுந்து கொண்டிருந்தேன்.

இங்கு நரகம் என்பது மனித சொந்தம் கலந்த  சம்சார கடலை குறிக்கிறது. அதாவது அன்னையை துதிக்காத மனிதர்கள், நரகத்திற்கு மிகவும் வேண்டியவர்கள், உறவுக்காரர்கள் என்று கொள்ள வேண்டும்.

அனால் இப்போது எவரும் அறியாத மறையினை (வேதத்தை) அறிந்து கொண்டு, அன்னையான உன்னை (அபிராமியை), அவளின் திருவடியை அடைந்தேன். அன்னையே வேதம் என்று கொள்க.

சத்சங்கம் என்பது ஒருவனுக்கு மிகவும் முக்கியம். அதுவே முக்தி அளிக்க வல்லது. இதனை ஆதி சங்கரர் தனது  பஜகோவிந்தத்தில் (மோஹ முத்கரா ஸ்லோகம் என்றுதான் இதற்கு முதலில் பெயர். அதாவது, மோஹத்தை தகர்க்கக்கூடியவை), சத்சங்கத்தை பற்றி

சத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி

என்று கூறியுள்ளார் . அதாவது, சத்சங்கம் கிடைத்தால், அவனுக்கு வேறு சங்கம் தேவையில்லை. மோஹம் அறுபடுகிறது. பின் நிலையான தத்வத்தை நாடுகிறான். அதுவே அவனுக்கு முக்தி அளிக்கிறது.

பாடல் (ராகம் - ஆரபி, தாளம் - ஆதி) கேட்க:


Check this out on Chirbit