Monday, 30 November 2015

பாடல் - 95

பலன்: நன்றும் தீதும் ஒன்றே என்று கருதும் மனோபாவம் பெறுவோம். சமதர்ஷனம் (equanimity) கிடைக்கும்

நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம், எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன், அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே

பொருள்:
அபிராமி, அழியா குணக்குன்று. த்ரிகுணாம்பா என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அழைக்கிறது. மூன்று குணங்களுக்கும் (சத்வம், ரஜஸ், தமஸ்) தலைவி என்று பொருள். குணத்ரய விபாவினி என்று தேவி மாஹத்மியத்தில், முதல் அத்தியாயம் மது கைடப வத வர்ணனையில், அம்பாளை பிரம்மா புகழ்கிறார்.

இமவான் பெற்ற கோமளம் - மலையரசன் ஹிமவான் பெற்ற அழகிய செல்வம். ஹைமவதி என்று அம்பாளுக்கு ஒரு நாமம். ஹேமம், ஹைமம் என்றால் தங்கம். இமயம் - தங்கம் போன்ற உயர்ந்த மலை.

அருட்கடல் - அருள் நிறைந்த கடல் அம்பாள்.

அன்னையே, அழியா குணக்குன்றே, அருட்கடலே, மலையரசன் பெற்ற அழகிய செல்வமே, எனக்கென்று ஒன்றும் வைத்துக்கொள்ளாது, எல்லாம் உன்னுடையது என்று ஆக்கிவிட்டேன். அதனால், நன்மையோ தீமையோ எதுவும் என்னை ஒன்றும் செய்யாது. இரண்டிற்கும் வேறுபாடு அறியாதவனாகி விட்டேன். விருப்பு வெறுப்பு அற்றவனானேன். உனக்கே பரம் என்று என்னை ஆக்கினேன். என்று பட்டர் பாடுகிறார்.

நமக்கும் இப்படி பட்ட சம தரிசனம் கிடைக்கட்டும்.

பகவத் கீதையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "எவன் என்னுள் அனைத்தையும், அனைத்திலும் என்னையும் காண்கிறானோ, அவன் எப்போதும் என் அருகிலேயே இருக்கிறான். என்னை விட்டு விலகுவதே இல்லை." என்று கூறுகிறார். அதுபோல் அனைத்தும் இறைவனுடையது என்ற எண்ணம் நமக்கு இருந்தால், உலகத்தில் துன்பம் என்பதே கிடையாது. என்றும் இன்பமே. ஆனந்தமே.

பாடல் (ராகம்-நாதநாமக்ரியா, தாளம் - --விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

Thursday, 26 November 2015

பாடல் - 94

பலன்: மன நோய் அகலும்

விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
*சுரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே

பொருள்:

அபிராமி அம்மையை விரும்பித் தொழும் அடியவர்கள்:
1. அவர்களின்
  • கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகும்  
  • மெய் சிலிர்க்கும்
 2. அவர்களிடத்தே:
  • ஆனந்தம் மட்டுமே ததும்பும் 
3. அவர்கள்;
  • தன்னையே மறந்து, தேனில் மனம் களிப்புறும் வண்டுப்போல் மகிழ்வுற்றிருப்பார்கள்.
  • மொழி தடுமாறி, அன்னையை எவ்வாறு வர்ணிப்பது என்று தவிப்பார்கள். 
ஆனந்தத்தில் வார்த்தைகள் வருவது கடினம் அல்லவா?
இவ்வாறு பக்தியால் பித்தர்களை போல் அலைவார்கள். இப்படிப்பட்ட பேரானந்த நிலை தமக்கு கிடைக்க வேண்டும் என்றால், அபிராமியிடம் தஞ்சம் அடைய வேண்டும்.

*சுரும்பின் களித்து - சுரும்பு (தேன்). சில இடங்களில் கரும்பின் களித்து என்று வருகிறது. கரும்பும் இனிமை, தேனும் இனிமை. எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். முன்பு கூறியது போல், அம்பாளுக்கு சுரும்பார் குழலி என்று ஒரு பெயர். அப்படியானால் தேன் போல இனிய கூந்தலை உடையவள் என்று பொருள்.

பாடல் (ராகம் - புன்னாகவராளி, தாளம் - --விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 25 November 2015

பாடல் - 93

பலன்: உண்மை நிலையினை அறிவோம்

நகையே இது, இந்த ஞாலமெல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ் முலை, மானே முது கண் முடிவுயில், அந்த,
வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

பொருள்:

இந்த உலகினை பெற்ற நாயகி அபிராமியின் முலைகள், தாமரை மொட்டு போன்றவை. அவள் கருணை ததும்பும் முதிர்ந்த* கண்கள், மானின் அழகிய கண்கள் போன்றவை. பிறப்பு இறப்பு இல்லாதவள். அதனால், முதலும்  முடிவும் இல்லாதவள் நம் அன்னை.

அவளை இப்படியெல்லாம் கவித்துவம் கொண்டு வர்ணிப்பது, சரியல்ல. ஏனென்றால் மான், தாமரை இவை எல்லாம் மிகவும் சிறியவை. சாமானியமானவை. அவற்றைக்கொண்டு மலைமகளான அன்னையை வர்ணிப்பது அவளின் பெருமையை குறைப்பதாகும். அது தனக்கு சிரிப்பை உண்டாக்குகிறது என்று பட்டர் கூறுகிறார்.

* முதிர்ந்த - அன்னை எல்லோருக்கும் பெரியவள். அதனால் அவள் கண்கள் முதிர்ந்தவை. அனைத்தையும் அறிந்த அனுபவம் மிக்க கண்கள் என்பதால், முதிர்ந்த கண்கள் என்று கூறுகிறார்.

பாடல் (ராகம்-பந்துவராளி, தாளம் - --விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

Thursday, 19 November 2015

பாடல் - 92

பலன்: ஒரு கொள்கையில் பிடிப்பு உண்டாகும்

பத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உந்தன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய்,  இனி, யான் ஒருவர்
மதத்தே மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்,
முதல் தேவர் மூவரும், யாவரும் போற்றும் முகிழ் நகையே!

பொருள்:

முதல் தேவர் மூவரும் - மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன்

மும்மூர்த்திகள், மற்ற தேவர்கள் யாவரும் போற்றும், அழகிய நகையுடைய அன்னை அபிராமியே,  உன்னை பற்றிய ஞானத்தினை பெறுவதற்கே என் சித்தம் விரும்பும்படி வைத்தாய். என் மனம், என்றும் உன் பாதத்தை பற்றுவதிலேயே சிந்திக்கும்படி செய்தாய். என்னை உன் அடிமையாக ஆக்கிக் கொண்டாய். இனி, வேறொரு சமயத்தே நாட்டம் கொள்ள மாட்டேன். அந்த சமயத்தோர் செல்லும் வழியிலும் செல்ல மாட்டேன்.

பாடல் (ராகம் - சுத்த சாவேரி, தாளம் - --விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

Saturday, 14 November 2015

பாடல் - 91

பலன்: உயர்ந்த பதவி கிடைக்கும்

மெல்லிய நுண் இடை மின் அனையாளை, விரிசடையோன்
புல்லிய மென் முலைப், பொன் அனையாளை, புகழ்ந்து, மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே

பொருள்:

மின்னல் போன்ற மெல்லிய இடையினை உடையவள்.
விரிந்த சடை முடி உடைய சிவபெருமானோடு சேர்ந்து இருப்பவள். மெல்லிய முலை உடையவள்.
பொன் போல், ஒளி மிகுந்தவள்.

இப்படி பட்ட அபிராமியை, வேதம் சொன்னவாறு வணங்கும் அடியார்களை வணங்கும் அடியவர்கள் (அடியார்க்கு அடியார்) பெரும் பேறு என்னவென்றால்: பல இசைக்கருவிகள் முழங்க, இந்திரனின் வெள்ளை நிற யானையின் மேல் அமர்ந்து, பலரும் தொழ வலம் வருவார்கள்.

பாடல் (ராகம்-சுநாத வினோதினி, தாளம் - --விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 11 November 2015

பாடல் - 90

பலன்: குறைகள் நீங்கும். பிரிந்தவர் கூடுவர்.

வருந்தாவகை என் மனத்தாமரையினில் வந்து புகுந்து
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்கு
பொருந்தாதது ஒரு பொருள் இல்லை. - விண் மேவும் புலவருக்கு
விருந்தாக, வேலை மருந்தானதை, நல்கும் மெல்லியலே.

பொருள்:

விண் மேவும் புலவருக்கு விருந்தாக, வேலை மருந்தானதை, நல்கும் மெல்லியலே -

விஷ்ணு விண்மேவும் புலவருக்கு (தேவர்களுக்கு) விருந்தாக பாற்கடலில் தோன்றிய அமுதத்தை பகிர்ந்து அளித்தார். அதற்கு உறுதுணையாக இருந்தவள், மெல்லிய இடையுடைய நம் அன்னை அபிராமி. இவ்வாறு பட்டர் கூறுவதற்கு காரணங்கள் இரண்டு.

1. பாற்கடலை தேவர்கள், அசுரர்கள் இருவரும் கடையும்போது, முதலில் தோன்றியது ஆலகால விஷம். அதனை சிவபெருமான் உண்டார். விஷத்தை உண்டால் மாய்ந்து விடுவோம். எனினும் அவர் தைரியமாக உண்டார். எப்படி?

அபிராமியின் மாங்கல்ய பலத்தின் மேல் அவர்க்கு உள்ள நம்பிக்கையால். தன் மனைவியின் (அபிராமி அன்னை) தாடங்கங்கள், தான் கட்டிய திரு மாங்கல்யம் இவ்விரண்டும் அன்னையிடம் இருக்கும் வரை தனக்கு ஒரு ஆபத்தும் நேராது என்ற தைரியம்.

அதேபோல், அவர் உண்டதும் அன்னை பார்வதி, விரைந்து சென்று தன் கணவரின் கழுத்தை அழுத்தி பிடித்தாள். அதனால் விஷம் உள்ளே செல்லாமல், வெளியிலும் வராமல், சிவனின் கழுத்திலேயே  நின்றது. அந்த இடம் நீலமாக மாறியது. அவர் நீலகண்டன் ஆனார்.

விஷம் உள்ளே சென்றிருந்தால் சிவன் மாண்டிருப்பார். வெளியே வந்தால் உயிர்கள் அனைத்தும் (நாம்) மாண்டிருக்கும்.

2. திருக்கடையூரில் அபிராமியின் துணைவர் அம்ருத கடேஸ்வரர். அமுதீசர் என்று அபிராமி பட்டர் அபிராமி அம்மை பதிகத்தில் பாடியுள்ளார். "அமுதீசர் ஒருபாகம் அகலாத சுக பாணி அருள்வாமி அபிராமியே!" என்று ஒவ்வொரு பாடலின் முடிவிலும் வரும். பிரளய காலத்தில், நீரில் எல்லாம் மூழ்க, அமிர்தம் ஒரு கடத்தில் (குடம்) மிதந்து வந்து இந்த கடையூரில் நின்றது. அதனை தன் கையில் ஏந்தி விஷ்ணுவிடம் கொடுத்தவர் நம் பெருமான் சிவன். அதனால் அவர் இத்தலத்தில் அம்ருத கடேஸ்வரர்.

இவ்வாறு தேவர்களுக்கு அமுதம் கிடைக்க காரணமான அபிராமி அன்னை, அடியவன் தன் (பட்டர்) மனத்தாமரையில் வந்து புகுந்தாள். தனது பழைய இருப்பிடம் அதுவே (அடியார்களின் மனம்) என்று உரிமையோடு வந்து அமர்ந்தாள். அன்னையே வந்துவிட்டாள். அதனால் இனி அடியவர்களுக்கு கிடைக்க வேண்டிய பொருள் வேறெதுவும் இல்லை. தான் இனி வருத்தப்பட வேண்டியது இல்லை. ஏனெனில் தனது பிறப்பு இறப்புகளை அன்னை அறுத்தெறிந்துவிட்டாள்.

பாடல் (ராகம் - சிந்து பைரவி, தாளம் - --விருத்தம்--) கேட்க:


Check this out on Chirbit

பாடல் - 89

பலன்: அன்னையின் நினைவு என்றும் நம் சிந்தையில் நிலைத்திருக்கும்

சிறக்கும் கமலத் திருவே, நின் சேவடி சென்னி வைக்கத்,
துறக்கம் தரும் நின் துணைவரும், நீயும், துரியம் அற்ற
உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று, அறிவு
மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே.

பொருள்:

சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் செல்வமே, அபிராமியே, என் உடலுக்கும் உயிருக்கும் தொடர்பு இன்றி, அறிவு மறதி மிகுந்திருக்கும் சமயத்தில் (மூப்பு) உன் பாதம் என் தலை மீது இருக்க வேண்டும். மேலும் அடியார்களுக்கு மோன நிலையினை தரும் உன் துணைவர் சிவபெருமானும், நீயும் என் முன்னே வந்து, எனக்கு மோன நிலையினை (சமாதி) தர வேண்டும்.

பாடல் (ராகம்-லதாங்கி, தாளம்- --விருத்தம்--) கேட்க:


Check this out on Chirbit

Friday, 6 November 2015

பாடல் - 88

பலன்: அபிராமியிடம் சரணடைவோம்

பரம் என்று உன்னை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத்தகாது - தரியலர் தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில், அயன்
சிரம் ஒன்று செற்ற கையான், இடப்பாகம் சிறந்தவளே

பொருள்:

தரியலர் - அசுரர், புரம் - ஊர் (திரிபுரம்)
அசுரர்களின் இடமான திரிபுரத்தினை, அன்று மேருமலையினை வில்லாக கொண்டு, அதிலிருந்து அம்பு எய்தி அழித்தவரும், அயன் - பிரம்மாவின் 5 தலைகளுள் ஒன்றினை கொய்தவருமான சிவபெருமானின், இடப்பாகத்தில் சிறப்பாக வீற்றிருக்கும் அபிராமி அன்னையே, நீயே பரம் என்று உன்னை சரணடைந்தேன். ஒன்றும் அறியாதவன் நான். தமியேன் - எளியவன். என்னை உன் பக்தர்களுக்குள் தரமற்றவன் என்று ஒதுக்கிவைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது சரியல்ல.

பாடல் (ராகம் - தர்மவதி, தாளம் - விருத்தம் --) கேட்க:


Check this out on Chirbit

Tuesday, 3 November 2015

பாடல் - 87

பலன்: செய்ய முடியாதவற்றை சிறப்பாக செய்து முடித்து புகழ் பெறுவோம்

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திரு மூர்த்தி, எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளி நின்றதால், விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை, அண்டமெல்லாம்
பழிக்கும் படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே

பொருள்:

மன்மதன், சிவபெருமான் மீது மலர் அம்புகளை, தனது கரும்பு வில்லிலிருந்து எய்தியதால், அவரின் தவம் கலைந்தது. அதனால் சினம் கொண்டு, மன்மதனை தன் நெற்றிக்கண்ணினால் எரித்தார் சிவபெருமான். தனது தவம் ஒருவராலும் அழிக்கப்பட முடியாதது என்று பறை சாற்றினார். அப்படி ஒரு உணர்ச்சியின்றி இருந்த சிவபெருமானின், அழிக்க முடியா தவத்தை, கலைத்து, உலகம் அவரை பழிக்குமாறு, அவரின் ஒரு பாகத்தில் அம்பாள் சென்று அமர்ந்தாள்.

அவள் பரம்பொருளுக்கு பரம்பொருள்.அவளே பராபரை என்று பட்டர் இங்கு பாடுகிறார். அப்படிப்பட்ட பராபரை, சிவனுக்கு மட்டும் அகப்படுபவள்.

வேறு எவராலும் சொல்லால் வர்ணிக்கப்பட முடியாத திரு உருவம் உடையவள். வேறெவர் மனத்திலும் அகப்படாதவள், தனது விழிக்கு தெரிந்தாள். தான் செய்யும் செயலில் இருந்தாள். எளியவனான தன்னிடம் இவ்வளவு கருணை கொண்டமைக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்று உருகி பாடுகிறார் அபிராமி பட்டர்.

பாடல் (ராகம்-சிவசக்தி, தாளம் - விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

Sunday, 1 November 2015

பாடல் - 86

பலன்: பயம் நீங்கும்

மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட, நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்த கப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும் போது, வெளி நில் கண்டாய்,
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.

பொருள்;

பால், தேன், வெல்லப்பாகு இவற்றின் இனிப்பினைப் போன்ற இனிய குரல் உடைய அபிராமியே, கப்பு வேல் -> கூறிய வேலினை, காலன் என் மேல் எறியும் போது, நீ என்முன் வந்து "பயப்படாதே" என்று கூறுவாயாக. உனது சங்கு வளையல்கள் அணிந்த கைகளையும், பாதங்களையும், மால்(விஷ்ணு), அயன்(பிரம்மா), மறை (வேதங்கள்), வானவர் (தேவர்கள்) ஆகியோர் தேடி, காண்பதற்கு முயற்சித்தனர். எனினும் அவர்களால் காண முடியவில்லை. அவ்வாறு இருக்க, பக்தனான என்முன் நீ வர வேண்டும்.

சூடகக் கை - சங்கு வளையல்கள் அணிந்த கைகள்.  சூடகம் - சங்கு

பாடல் (ராகம் - மாண்டு, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit