Friday 30 January 2015

பாடல் - 2

பலன்: பிரிந்தவர் ஒன்று சேர்வர்

துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர் பூங் 
கணையும் கருப்பு சிலையும் மென் பாசாங்குசமும் கையில் 
அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே

பொருள்:
அபிராமியே எனது துணை, நான் தொழும் தெய்வம், என்னை பெற்ற தாய். அவளே வேதம், அதன் கிளை, வேர் அனைத்தும். தன் 4 கரங்களில், மலர்களால் ஆன அம்பு, கரும்பினால் ஆன வில், மென்மையான பாசம் (கயிறு) [இதிலும் மென்மை. அன்னையின் கருணை. சொற்ப விஷயங்களில் பற்று வைக்காதே, என பக்தனை மெல்லிய கயிற்றினால் கட்டுகிறாள்.], அங்குசம் ஆகியவற்றை கொண்டுள்ள திரிபுரசுந்தரி என்று அன்னை அபிராமியை அறிந்து கொண்டேன்.

லலிதா சஹஸ்ரநாமத்தில்

  1. ராகஸ்வரூப பாஷாட்யா (ராகம் -பற்று , அம்பாள் மீது  பற்று  வரவேண்டும் என்பதற்காக அந்த பற்று வடிவாய் கயிற்றை வைத்துள்ளாள். அதை பக்தன் மீது செலுத்தி கட்டினால், அவனுக்கு அம்பாளை தவிர வேறொன்றும் தெரியாது.]
  2. க்ரோதாங்கார அங்குஷோஜ்வலா [குரோதம் -கோபம், அதனை அறுப்பதற்கு, அங்குசம்.]
  3. மனோரூபேக்ஷு கோதண்டா [மனம் எனபது கரும்பு வில் போன்றது.]
  4. பஞ்ச தன்மாத்ர சாயகா [சப்த (சத்தம்), ஸ்பர்ஷ (தொடு உணர்வு), ரூப (பார்வை), ரச (ருசி), கந்தம்(வாசனை) ஆகிய 5 உணர்வுகள் ] 
என்று வருகிறது.

மன்மதனிடமும் கரும்பு வில், மலர் அம்பு  இருக்கிறது. அதனால் காமம் (ஆசை) உண்டாகுகிறது. ஆனால்  அன்னையிடம் இருக்கும் கரும்பு வில், மலர் அம்பு ஆகியவை நமக்கு காம ஜெயம் (ஆசையினை அடக்குதல் - வைராக்யம்) தருகிறது.

பாடல் - ராகம் கௌளை, தாளம் ஆதி



Check this out on Chirbit

பாடல் - 1

பலன்: ஞானமும் நல்வித்தையும் அளிக்கும்

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கொடி குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழித்துணையே

பொருள்:
அன்னையின் நிறம் இளம் சிவப்பு. அருணா என்ற பெயரே, இதனை குறிக்கிறது. அருண வர்ணம் என்றால், இளம் சிவப்பு. சூரியன் உதிக்கும் போது வானில் தோன்றும் சிவப்பு, அருண வர்ணம். அந்த சிவந்த நிறத்தில், உச்சித்திலகம் வைத்துள்ளாள் அன்னை. மனிதர்கள் பெரிதும் மதிக்கும் மணியான மாணிக்கம், மாதுளம் மொட்டு, இவை போன்ற சிவந்த மேனியாள் நம் அன்னை அபிராமி. சிவந்த தாமரையில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மி தேவி பேரழகு கொண்டவள். அந்த லக்ஷ்மி தேவியே துதிக்கும் அளவிற்கு அழகி, நம் அபிராமி. கொடி மின்னல், குங்குமம் போன்ற சிவந்த நிறம் கொண்டவளான அபிராமி அன்னையே எனது துணை ஆவாள்.

உதயத் பானு சஹாஸ்ராபா - 1000 உதய சூரியர்களை போன்ற பிரகாசம் கொண்டவள் என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ர  நாமம் கூறுகிறது.

ஆதி சங்கரர், தனது மீனாக்ஷி பஞ்சரத்ன ஸ்தோத்ரத்தில், முதல் ஸ்லோகத்தில் - உத்யத் பானு ஸஹஸ்ர கோடி ஸத்ருஷாம்  என்று அம்பாளை ஆயிரம் கோடி உதய சூரியர்களை போன்ற ஒளி உடையவள் என்று அழைக்கிறார்.

அபிராமி என்றாலே, அழகி என்று அர்த்தம்.

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் - 44 இல், சங்கரர், அம்பாளின் வகிட்டின் மகிமையை கூறியுள்ளார்.

தனோது க்ஷேமம் நஸ்தவ வதன சௌந்தர்ய லஹரீ
பரீவாஹஸ்ரோத: ஸரணிரிவ  ஸீமந்த ஸரணி 
வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபலகபரீ பார திமிர
த்விஷாம் ப்ருந்தைர் பந்தீக்ருதமிவ நவீனார்க்க கிரணம் 

ஸீமந்த ஸரணி - வகிட்டின் ரேகை
வஹந்தீ ஸிந்தூரம் - தரிக்கும் குங்குமம்
நவீனார்க்க கிரணம் - உதய சூரியனின் ஒளி

அம்பாள் தன் வகிட்டில் தரிக்கும் குங்குமம், உதய சூரியனின் ஒளி. இதுவே உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் என்று பட்டர் கூறுகிறார்.


பாடல் - ராகம் - நாட்டை, தாளம் - ஆதி



Check this out on Chirbit

Thursday 29 January 2015

அபிராமி அந்தாதி - பிள்ளையார் காப்பு

தாரமர் கொன்றையும் செண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரர் தம்பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தை உள்ளே
காரமர் மேனி கணபதியே நிற்கக் கட்டுரையே

பொருள்:

கொன்றை, செண்பகம் முதிலிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையினை அணியும் தில்லை ஊரர் (நடராஜர்) அவரின் ஒரு பாகமான உமையின் மைந்தனே, கணபதியே, சிறந்ததான இந்த அபிராமி அந்தாதி எப்போதும் என் நினைவில் இருக்க வேண்டும்.  அன்னை அபிராமி ஏழுலகையும் பெற்றவள். கணபதியை, அபிராமி பட்டர், கரிய மேகங்களை போல் அழகுடையவர் என்றும் இதில் கூறியுள்ளார்.

பாடல் கேட்க (ராகம் - சௌராஷ்ட்ரம் , தாளம் - ஆதி):