Tuesday, 3 February 2015

பாடல் - 4

பலன்: உயர்பதவிகள் கிடைக்கும்

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடி கோமளமே கொன்றை வார்சடை மேல் 
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த 
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

பொருள்:

அனைவரும் (மனிதர், தேவர், முனிவர்) தங்கள் தலையை அபிராமியின் பாதத்தில் வைத்து வணங்குகின்றனர். அன்னையின் பாதம் சிவப்பாக இருக்கிறது. சேவடி என்றல் சிவந்த அடி (பாதம்). பட்டர் கேட்டுக்கொள்வது என்னவென்றால், "அன்னையே, கொன்றை பூ மாலை அணிந்த சடை முடி உடையவரும், குளிர்ந்த கிரணங்கள் வீசும் சந்திரனையும், பாம்பினையும், கங்கையினையும் அந்த சடைமுடியில் தரித்தவருமான சிவபெருமானும், நீயும் எப்போதும் என் சிந்தனையில் நிலைத்திருக்கவேண்டும்".

பகீரதன் என்னும் அசுரன், ஆகாயத்திலிருந்து மிகவும் முயற்சி செய்து, கங்கையை இந்த பூமிக்கு கொண்டுவந்தான். (அதனால் நாம் கஷ்டப்பட்டு செய்யும் முயற்சியை, பகீரத பிரயத்னம் என்கிறோம்). அந்த பிரவாஹத்தை சற்று தாங்கி பிடித்து பின் பூமியில் ஓட விடவேண்டும் என்று பிரம்மா கூறினார். அப்படியே பூமியில் விழுந்தால், அந்த வேகத்தை பூமியால் தாங்கமுடியாது என்பதால், சிவன் தனது ஜடையில் கங்கையை தாங்கி முடிந்தார். பின்னர் அந்த நதி, சம வேகத்தில் ஓடியது. பகீரதனால், பூமிக்கு கொண்டுவரப்பட்டதால், கங்கைக்கு பாகீரதி, பகீரதி என்ற பெயர்களும் உண்டு.

இன்னொரு விதமாக கூறுவது, திருமால், த்ரிவிக்ரம அவதாரம் செய்தபோது (மகாபலியிடம், மூன்றடி மண் கேட்டு வாமனனாய் நின்று, பின் த்ரிவிக்ரம ரூபம் (விஸ்வரூபம்) கொண்டு முதல் அடி வானை அளந்தபோது இந்த அண்டத்தின் மேல் ஓடு உடைந்து, சத்யலோகத்தில் த்ரிவிக்ரமனின் கட்டைவிரல் நகம் பட்டது. அதற்கு ப்ரஹ்மா தனது கமண்டல நீரால், அபிஷேகம் செய்தார். அதிலிருந்து புறப்பட்ட நீர் தான் கங்கை நதி.

லலிதா சஹஸ்ரநாமத்தில், "ஹரிப்ரஹ்மேந்தர சேவிதா" என்று ஒரு நாமம் வரும். அதாவது ஹரி (விஷ்ணு), பிரம்மா, இந்திரன் ஆகியோரால் வணங்கப்படுபவள் என்று பொருள்.

சௌந்தர்ய லஹரி, முதல் ஸ்லோகத்தில், "அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதிபிரபி" என்று வரும். ஹரி, ஹரன் (சிவன்), விரிஞ்சி (ப்ரஹ்மா) முதலியவர்களால், ஆராதிக்கப்படுபவள் என்று பொருள். இந்த சௌந்தர்ய லஹரியில், மும்மூர்த்திகளும் தங்கள் சிரஸை (தலை) அம்பாளின்  பாதத்தில் வைத்து வழிபடுகிறார்கள் என்று வரும். அதனால், அம்பாளின் பாதத்தை பூஜை செய்தால், மும்மூர்த்திகளின் சிரஸிற்கு பூஜை செய்த பலன்.

பாடல் (ராகம் - வராளி, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment