Wednesday, 4 February 2015

பாடல் - 5

பலன்: மனக்கவலைகள் அகலும்

பொருந்திய முப்புரை செப்புரை செய்யும், புணர் முலையாள்
வருந்திய வஞ்சி மருங்குல், மனோன்மணி, வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை, அம்புயம் மேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே

பொருள்:
முப்புரை - முத்தொழில் (படைத்தல், காத்தல், அழித்தல்)
அன்னையே, உனக்கென்றே பொருத்தமான முத்தொழில்களை செம்மையாக செய்பவள் நீ. அவ்வாறு செய்வதால் மிகுந்த நிறைவுடன் இருக்கிறாய். கருணைமிக்கவள் நீ ஆதலால், உனது மார்பகங்கள் பெரியதாக உள்ளது. உனது இடையோ கொடி போல சிறியது, மெல்லியது. பருத்த முலைகளை (பெரிய மார்பகங்கள்) உனது மெல்லிய இடையினால் தாங்க முடியவில்லை. அதனால் வருந்துவது போல் இருக்கிறது.

(இதனை லலிதா சஹஸ்ரநாமத்தில் - "ஸ்தன பார தலன் மத்ய பட்ட பந்த வலித்ரயா" என்று கூறப்படுகிறது. அதாவது, ஸ்தனம் - மார்பு, அதன் பாரத்திலிருந்து மெல்லிய இடையை (மத்ய - இடை) காக்க அங்கே மூன்று கோடுகள் உள்ளது).

அவள், சிவனின் மனதிற்கு இனியவள். ஆதலால் மனோன்மணி.

சடைமுடி தரித்தவரான சிவபெருமான், தேவ - அசுரர்கள் பாற்கடல் கடையும் போது வெளிகிளம்பிய ஆலகால விஷத்தை அருந்தினார். அந்த நஞ்சு அவரை ஒன்றும் பண்ணாமல் இதுநாள் வரை தன் கழுத்தில் வைத்து வாழ்ந்து வருகிறார். இது எப்படி சாத்யம்? நம் அன்னை அந்த நஞ்சினை அமுதாக மாற்றிவிட்டாள்.

அம்புயம் - அம்புஜம் என்பதின் திரிபு. தாமரை.

தாமரை மேல் அமர்ந்திருப்பவள் அன்னை அபிராமி. அதன் இதழ்களை விட மிருதுவானஅவளது பாதத்தை,தன் தலை மீது வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார் அபிராமி பட்டர்.

அம்பாளின் முலை சிறப்பை பற்றி கூறும் சில ஸ்தலங்கள்:
அம்பாள், திருவிடைமருதூரில் ப்ரஹத்குசாம்பிகை (பெரிய முலை அம்மன்) என்றும், திருவீழிமிழலையில் சுந்தரகுசாம்பிகை (அழகிய முலை அம்மன்)  அல்லது ப்ரஹத்சுந்தரகுசாம்பிகை (அழகிய மாமுலை அம்மன்) என்றும், திருவண்ணமலையில் அபீதகுசாம்பிகை (உண்ணாமுலை அம்மன்) என்றும் அழைக்கபடுகிறாள்.

குசம் - முலை, மார்பு
ப்ரஹத் - பெரிய
சுந்தர - அழகிய
அபீத - உண்ணாத

உண்ணாமுலை என்றால் அம்பாளின் புதல்வர்கள் கணபதி, ஸ்கந்தன், ஸாஸ்தா ஆகியோர், அவளின் முலைப்பாலினை அருந்தியது கிடையாது. ஒருவராலும் பாலினை (ஸ்தூலமாக) உண்ணப்படாத முலை உள்ளவள். எனவே இப்பெயர்.

அம்பாளின் தாடங்க மகிமை:
சௌந்தர்ய லஹரியில், 28-வது ஸ்லோகம்.

"சுதாம் அப்யாஸ்வாத்ய ப்ரதிபய ஜரா ம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விஷ்வே விதி சதமகாத்யா திவிஷத
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத காலகலனா
ந சம்போஸ் தன் மூலம் தவ ஜனனி தாடங்க மஹிமா"

அதாவது அமுதினை உண்ட தேவர்கள் யாவரும் பிரளய காலத்தில் அழிவுறுகிரார்கள். ஆனால் ஆலகால விஷத்தினை அருந்தியும், சிவனுக்கு அழிவு என்பது இல்லை. இது எப்படி? உனது தாடங்கதினால்தான். நீ அணிந்துகொண்டிருக்கும் தாடங்கம் (தோடு) உன் மணாளனை காக்கிறது.

பாடல் (ராகம் - ஸ்ரீ, தாளம் - ஆதி) கேட்க:


Check this out on Chirbit




No comments:

Post a Comment