Friday, 6 February 2015

பாடல் - 6

பலன்: மந்திர சித்தி அளிக்கும்

சென்னியது உன் பொன் திருவடி தாமரை, சிந்தை உள்ளே
மன்னியது உன் திரு மந்திரம், சிந்தூர வண்ண பெண்ணே,
முன்னிய நின் அடியாருடன் கூடி, முறைமுறையே
பன்னியது என்றும் உந்தன் பரம ஆகம பத்ததியே

பொருள்:
சிந்தூர வண்ணம் - சிவப்பு  நிறம்
சிவந்த வண்ணம் கொண்ட பெண்ணே, அபிராமியே, உன் திருவடிகளே தாமரை. அதனை என்றும் என் தலையிலேயே இருத்தி விடு. என்றும் என் சிந்தையில் நிலைக்கொண்டிருப்பது உனது திருமந்திரம். நான் இனி கலந்து பழகப்போவது, என்றும் உன் பெருமையை பேசும் நின் அடியார்களுடன். உனது மேலான ஆகம நெறிகளையே நாளும் நான் மேற்கொள்ளப்போகிறேன்.

அன்னையின் திருவடிகள், வேதங்களின் தலை போன்றதான உபநிடதங்களின் உச்சியில் விளங்குவதாக சௌந்தர்ய லஹரியில் ஸ்ரீ ஆதி சங்கரர் வர்ணிக்கிறார்.

ச்ருதீநாம் மூர்த்தானோ தததி தவ யௌ சேகரதயா
மம அபி ஏதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ
யயோ: பாத்யம் பாத: பசுபதி ஜடாஜூட தடினீ
யயோர் லாக்ஷா லக்ஷ்மீ: அருண ஹரி சூடாமணி ருசி:

ச்ருதீநாம் மூர்த்தானோ - ச்ருதி - வேதம், மூர்த்தான: - தலை
அதாவது, சங்கரர் கேட்டுக்கொள்கிறார், "தேவி, உனது எந்த பாதங்களை, வேதத்தின் தலை போன்றதான உபநிடதங்கள் தங்கள் தலையில் தரிக்கின்றனவோ அந்த பாதங்களை ஏன் தலையிலும் கூட தயவு கூர்ந்து வைத்தருள்வாய். உன் பாதங்களுக்கு அளிக்கப்பட தீர்த்தம், பசுபதி, சிவனின் ஜடையில் உள்ள கங்கை. அவற்றிற்கு வைக்கப்பட்ட நலங்கு, விஷ்ணுவின் க்ரீடத்தில் உள்ள மாணிக்கத்தின் ஒளி."

நாம் முன்னர் பார்த்ததுபோல், (பாடல் 4 ல்) சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள் யாவரும் தங்கள் சிரத்தை அம்பாளின் பாதத்தில் வைத்து வணங்குகிறார்கள் என்பதற்கு ஏற்ப இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது.

மேலும் சங்கரர், மிகவும் அடக்கத்தோடு, "என் தலை மேலும் பாதங்களை  வைக்கக்கூடாதா?" என்று கேட்கிறார். நேரடியாக தனக்கு தான் தரவேண்டும் என்று வாதாட வில்லை. இது அவரின் அடக்கத்தை (வினயத்தை) காட்டுகிறது.

பாடல் (ராகம் - யதுகுல காம்போஜி, தாளம் - ஆதி [திஸ்ர நடை]) கேட்க:

Check this out on Chirbit


No comments:

Post a Comment