Monday, 26 October 2015

பாடல் - 84

பலன்: அனைத்தும் கிடைக்கப்பெறுவோம்.

உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை, ஒளிர்மதி செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே

பொருள்:

உடையாளை - அனைத்தையும் தன் வயம் உடையவள். உடையவர் என்று சிவபெருமானுக்கு பெயர். அவரின் சக்திக்கு உடையாள் என்று ஒரு பெயர்.

ஒல்கு செம் பட்டு உடையாளை - தனது மெல்லிய இடையில், அழகிய சிவப்பு நிற பட்டாடையினை உடுத்தியுள்ளாள்.

ஒளிர்மதி செஞ்சடையாளை - ஒளி வீசும் பிறைச் சந்திரனை தன் செஞ்சடையில் அணிந்துள்ளாள். இன்னொரு விதமாக பொருள் கொண்டால், பிறையணி செஞ்சடையன், சிவனின் மனைவி. அதனால் செஞ்சடையாள் என்றும் கொள்ளலாம்.

வஞ்சகர் நெஞ்சு அடையாளை - வஞ்சனை நிறைந்த நெஞ்சத்தில் வசிக்க மாட்டாள்.

தயங்கு நுண்ணூல் இடையாளை - மெல்லிய, நூல் போன்ற இடையினை உடையவள்.

எங்கள் பெம்மான் இடையாளை - எம்பெருமான் சிவனின் இடபாகத்தில் இருப்பவள்.

இங்கு என்னை இனிப் படையாளை - இவ்வுலகில், நான் மீண்டும் பிறவாமல் என்னை பார்துக்கொள்பவள்.

உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே - நீங்களும் அவளை வணங்கினால், உங்களையும் மீண்டும் பிறவாமல் பார்த்துக்கொள்வாள்.

பாடல்(ராகம் - தேஷ், தாளம் - -- விருத்தம் ---) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment