Tuesday, 6 October 2015

பாடல் - 72

பலன்: பிறவிப் பிணி தீரும்

என் குறை தீர நின்று ஏற்றுகிறேன். இனி யான் பிறக்கில்
நின் குறையே, அன்றி யார் குறை காண்? இரு நீள் விசும்பின்
மின், குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்,
தன் குறை தீர, என் கோன் சடை மேல், வைத்த தாமரையே

பொருள்:

அன்னை அபிராமியே, எனது குறைகளை தீர்த்துக்கொள்ள உன்னை போற்றுகின்றேன். இனி எனக்கு பிறவிக் கொடுப்பாய் என்றால், அது என் குறை அல்ல. உன் குறையே ஆகும். ஏனென்றால், நான் உன்னை வணங்கிவிட்டேன். அதனால் எனக்கு பிறவி என்பது இருக்கக்கூடாது.

இரு நீள் விசும்பின் மின் - அகண்ட நீண்ட ஆகாயத்தில் தோன்றும் மின்னல், வெட்கப்படும் அளவிற்கு அதை விட மெலிந்த இடை உடையவள் நம் அன்னை அபிராமி. மின்னல் கொடியாள் என்று அம்பாளை பாடுவார்.

திரு G.N.பாலசுப்ரமணியன் என்னும் இசை வல்லுனர், தான் இயற்றிய "உன்னடியே கதி என்றடைந்தேன் தாயே" என்ற பகுதாரி ராக பாடலில், சரணத்தில், மின்னல் கொடியாளே இன்னல்கள் தீர்ப்பாளே என்று பாடியுள்ளார்.

இன்னும் பல துதிகளில், அம்பாளின் இடை மிகவும் மெல்லியது என்றே வர்ணிக்கப்படுகிறது.

சிவ பெருமான், தனது குறையினை போக்கிக்கொள்ள, அன்னையின் திருவடிகளில் தன் தலையினை வைத்து வணங்குகிறார்.

என் கோன் சடை மேல் வாய்த்த தாமரை - என் தலைவன் சிவனின் (சடை) தலை மேல் வைக்கப்பட்ட தாமரை (அம்பாளின் பாதம்).

பாடல் (ராகம் - ஸாவேரி, தாளம் - ஆதி - திஸ்ர நடை) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment