Friday, 16 October 2015

பாடல் - 77

பலன்: பகை நீங்கும்

பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி - என்றே
செயிர் அவி நான் மறை சேர் திருநாமங்கள் செப்புவரெ

பொருள்:

இப்பாடலில், மறைகள் எவ்வாறெல்லாம் அம்பாளை அழைக்கின்றன என்று பட்டர் பாடுகிறார்.

பைரவி - பைரவரின் தேவி - பைரவி பகமாலினி என்கிறது லலிதா சஹஸ்ரநாமம்.

பஞ்சமி - திதி தேவிகள் 16 பேரில் (பிரதமை முதல் சதுர்தசி 14 + அமாவாஸ்யை, பௌர்ணமாஸ்யை =16) , பஞ்சமி என்ற திதிக்கு தனி சிறப்பு உண்டு. அம்பாளின் திருநாமங்களில் அதுவும் ஒன்று. அம்பாளின் சேனாதிபதி தண்டநாதை என்கிற வாராஹியின் பெயர் பஞ்சமி. பஞ்சமி பஞ்ச பூதேசி பஞ்ச சங்க்யோபசாரிணி என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர் ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், அம்பாளுக்கு 5 என்னும் எண் மிகவும் பிடித்த எண் என்று கூறியுள்ளார். அவளின் கணவன் நமசிவாய என்ற பஞ்சாக்ஷரன் என்பதாலோ என்னவோ!

பஞ்ச சங்க்யோபசாரம் என்று அம்பாளை வழிபடும் முறையை பற்றி கூறியுள்ளார். வெள்ளி முதல் செவ்வாய் வரை 5 நாட்களுக்கு தொடர்ந்து அம்பாள் சன்னிதிக்கு சென்று 5 முறை வலம் வந்து 5 முறை நமஸ்காரம் செய்தால் அம்பாள் த்ருப்தி அடைந்து வேண்டிய வரங்களை அளிப்பாள் என்று கூறியுள்ளார்.

பாசாங்குசை - பாசம், அங்குசம் ஆகியவற்றை கையில் தரிப்பவள். ராக ஸ்வரூப பாஷாட்யா - க்ரோத -ஆங்கார - அங்குஷோஜ்வலா என்கிறது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்.

பஞ்சபாணி - 5 மலர்களால் ஆன 5 அம்புகளை வைத்துள்ளவள். - பஞ்ச தன்மாத்ர சாயகா என்கிறது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்.

வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி - வஞ்சனை உடையவர்களின் உயிரினை பறித்து ரத்தத்தினை குடிக்கும் பெருமை மிகு சண்டி. சண்டிகை என்று கூறுவார்.

காளி - மஹா காளி.

ஒளிரும் கலா வைரவி - பிறை சந்திரனை சூடிய வைரவி. கலை (art) என்பது வளர்ந்துக்கொண்டே இருக்க வேண்டிய ஒன்று. அதை குறிக்கும் வண்ணமாக கலைமகளான சரஸ்வதி தேவி, குருவான தக்ஷிணா மூர்த்தி ஆகியோர் மூன்றாம் பிறையினை, சந்திர கலையினை தலையில் அணிந்திருப்பார்கள்.

மண்டலி - சந்திர, சூர்ய, அக்னி மண்டலங்களில் வசிப்பவள். சந்திர மண்டல மத்யகா, பானு மண்டல மத்யஸ்தா, வன்னி மண்டல வாஸினி என்கிறது லலிதா சஹஸ்ரநாமம்.

மாலினி - மாலைகளை அணிந்தவள்.

சூலி - சூலத்தை ஏந்தியவள்

வராஹி - வாராஹி, வராஹ மூர்த்தியின் சக்தி.

இவ்வாறு உயர்ந்த வேதங்கள் கூறிய நாமங்களை, அம்பாளின் அடியவர்கள் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருப்பார்கள்.

பாடல் (ராகம் - பைரவி, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment