Wednesday, 28 October 2015

பாடல் - 85

பலன்: நல்வழி கிடைக்கும்

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும், சிற்றிடையும்,
வாரக் குங்கும முலையும்,  முலைமேல் முத்து மாலையுமே

பொருள்:

நான் பார்க்கும் திசைகளில் எல்லாம், என் அல்லல் தீர்க்கும் திரிபுரையான, அபிராமியின் கையில் இருக்கும் பாசம், அங்குசம், கரும்பு வில், வண்டுகளை கவர்ந்து, தன்னுள் சிறைபிடித்து வைத்திருக்கும், என்றும் புதியதாய் இருக்கும் 5 மலர்கள், மற்றும் அவள் திருமேனி, சிறிய இடை, குங்குமம் பூசப்பட்ட மார்பகங்கள், அந்த திரு மார்பில் தவழும் முத்துமாலை ஆகியவற்றையே காண்கிறேன்.

பாடல் (ராகம் - ஹுசேனி, தாளம் - ஆதி, திஸ்ர நடை) கேட்க:

Check this out on Chirbit

Monday, 26 October 2015

பாடல் - 84

பலன்: அனைத்தும் கிடைக்கப்பெறுவோம்.

உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை, ஒளிர்மதி செஞ்
சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்
இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே

பொருள்:

உடையாளை - அனைத்தையும் தன் வயம் உடையவள். உடையவர் என்று சிவபெருமானுக்கு பெயர். அவரின் சக்திக்கு உடையாள் என்று ஒரு பெயர்.

ஒல்கு செம் பட்டு உடையாளை - தனது மெல்லிய இடையில், அழகிய சிவப்பு நிற பட்டாடையினை உடுத்தியுள்ளாள்.

ஒளிர்மதி செஞ்சடையாளை - ஒளி வீசும் பிறைச் சந்திரனை தன் செஞ்சடையில் அணிந்துள்ளாள். இன்னொரு விதமாக பொருள் கொண்டால், பிறையணி செஞ்சடையன், சிவனின் மனைவி. அதனால் செஞ்சடையாள் என்றும் கொள்ளலாம்.

வஞ்சகர் நெஞ்சு அடையாளை - வஞ்சனை நிறைந்த நெஞ்சத்தில் வசிக்க மாட்டாள்.

தயங்கு நுண்ணூல் இடையாளை - மெல்லிய, நூல் போன்ற இடையினை உடையவள்.

எங்கள் பெம்மான் இடையாளை - எம்பெருமான் சிவனின் இடபாகத்தில் இருப்பவள்.

இங்கு என்னை இனிப் படையாளை - இவ்வுலகில், நான் மீண்டும் பிறவாமல் என்னை பார்துக்கொள்பவள்.

உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே - நீங்களும் அவளை வணங்கினால், உங்களையும் மீண்டும் பிறவாமல் பார்த்துக்கொள்வாள்.

பாடல்(ராகம் - தேஷ், தாளம் - -- விருத்தம் ---) கேட்க:

Check this out on Chirbit

Sunday, 25 October 2015

பாடல் - 83

பலன்: அனைத்தும் கிடைக்கப்பெறுவோம்.

விரவும் புதுமலர் இட்டு நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், ஐராவதமும், பகீரதியும்
உரவும், குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.

பொருள்:

தேன்சிந்தும், புதிய மலர்களைக் கொண்டு (அன்று மலர்ந்த மலர்) அன்னையின் பாதத் தாமரையினை, இரவும் பகலும் (எந்நேரமும்) பூஜை செய்பவர்கள்,

1. தேவர்கள் யாவரும் விரும்பும் இந்திரப்பதவி

2. ஐராவதம் என்கிற வெள்ளை நிற யானை (இந்திரனின் வாஹனம்)

3. பகீரதி - ஆகாய கங்கை. விஷ்ணு வாமனனாக அவதாரம் செய்து, மஹா பலி சக்ரவர்த்தியிடமிருந்து, 3 அடி மண் கேட்டப்பின், முதல் அடியாக, த்ரிவிக்ரம அவதாரம் செய்து (விஸ்வரூபம்) வான் நோக்கி தன் காலைத் தூக்கினார். அப்போது, பிரம்மா இருக்கும் சத்யலோகம் வரை, இந்த அண்டத்தை பிளந்து அந்த திருவடி சென்றது. அப்போது, அந்த பாதத்திற்கு, பிரம்மா, தன் கமண்டலத்திலிருந்து, நீரை ஊற்றி, அபிஷேகம் செய்தார். அந்த நீரே ஆகாய கங்கையாக தோன்றியது. அதனை பூமிக்கு கொண்டு வர பகீரதன் கடினமாக முயற்சி செய்தான். அதனால், கங்கை, பகீரதி என்ற பெயரால் அழைக்கப்பட்டாள். பகீரதன் கொண்டு வந்த நதியினை, நேரே பூமிக்கு விட்டால், பூமி தாங்காது என்பதால், சிவபெருமான், தன் சடையினை அவிழ்த்து, கங்கையை தன் தலையில் தாங்கி, பின் மெதுவாக பூமிக்கு விட்டார்.

4. உரவும் குலிசம் - வலிமையான வஜ்ராயுதம் (இந்திரனின் ஆயுதம்). உர - வலிமை.

5. கற்பக விருட்சம்

ஆகியவற்றை பெறுவார்கள்.

(இமையோர் - தேவர்கள் - அவர்கள் கண்களை ஒரு பொழுதும் இமைக்க மாட்டார்கள். நளன் கதையில், தமயந்தி இவ்வாறுதான் உண்மையான நளனை மற்ற தேவர்களிடமிருந்து, தன் சுயம்வரத்தில் கண்டு பிடித்தாள்).

பாடல் (ராகம் - கமாஸ், தாளம் ----விருத்தம்---) கேட்க:

Check this out on Chirbit

Friday, 23 October 2015

பாடல் - 82

பலன்: ஞாபக சக்தி அதிகரிக்கும்

அளியார் கமலத்தில் ஆரணங்கே, அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை, உள்ளுந்தொறும்
களியாகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைப்புரண்டு,
வெளியாய் விடின், எங்ஙனே மறப்பேன், நின் விரகினையே!

பொருள்:

தேன்ததும்புவதால், வண்டுகள் மொய்க்கும், அழகிய தாமரையில் வீற்றிருக்கும் அழகிய பெண்ணே,  இந்த அண்டம் முழுவதிலும் ஒளியாக, உனது ஒளிவீசும் திருமேனி பரவியுள்ளது. அத்திருமேனியை நான் என் உள்ளத்துள் நினைத்து வருவதால், என் உள்ளத்தில், மகிழ்ச்சி பெருகி, பொங்குகிறது. அந்த களிப்பானது, விம்மி, கரைப்புரண்டு ஆகாயத்திற்கு சென்று அதில் கலந்துவிடுகிறது. இப்படிப்பட்ட பேரானந்தத்தில் என்னை மிதக்க செய்த உன் அருளை எப்படி மறப்பேன்? ஒரு போதும் அது மறக்க முடியாதது.

அம்பாளுக்கு அவ்யாஜ கருணா மூர்த்தி என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம். கரை இல்லா கருணைக்கடல் அவள். பக்தர்களுக்கு என்றால், அவள் கணக்கே பார்க்காமல் கருணைப்பொழிவாள்.

பக்த விஸ்வாசினி என்று ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் தனது "பரதேவதா ப்ரஹத் குசாம்பா" (திருவிடைமருதூர், ப்ரஹத் குசாம்பாள் மீது பாடிய பாடல்) என்ற தன்யாசி ராக பாடலில் பாடியுள்ளார். பக்தர்களிடம் அப்படி ஒரு விஸ்வாசம் அம்பாளுக்கு. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவாள் அன்னை. அதானாலோ என்னவோ, இப்பாடல், அம்பாள் எழுந்தோடி வருவாள் என்பதால் தோடி ராகத்தில் அமைந்தது.

பாடல் (ராகம்-தோடி, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

Thursday, 22 October 2015

பாடல் - 81

பலன்: நன்னடத்தை உண்டாகும்

அணங்கே, அணங்குகள் நின் பரிவாரங்கள். ஆகையினால்
வணங்கேன், ஒருவரையும் வாழ்த்துகிலேன், நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரோடும்,
பிணங்கேன், அறிவு ஒன்றிலேன், என் கண் நீ வைத்த பேரளியே.

பொருள்:

அழகிய பெண்ணே, அபிராமியே, மற்ற சக்திகள் யாவரும் உனது பரிவார தேவதைகள் தான். அதனால் அவர்களை வணங்க மாட்டேன். வேறொருவரையும் வாழ்த்த மாட்டேன். நெஞ்சில் வஞ்சனை நிறைந்தவரோடு சேர மாட்டேன். தன்னுடையது என்று கருதாமல், எல்லாம் அன்னையான உன்னுடையது என்று கருதும் சில அடியார்களோடு மட்டும் சேர்ந்திருப்பேன். அவர்களிடமிருந்து அகலமாட்டேன். அறிவற்றவன் நான். ஆனாலும் என் மீது பெருங்கருணை வைத்துள்ளாய் நீ.

என்று பட்டர் பாடுகிறார்.

பாடல்( ராகம்-ஆனந்த பைரவி, தாளம் - மிஸ்ர சாபு) கேட்க:

Check this out on Chirbit

Tuesday, 20 October 2015

பாடல் - 80

பலன்: எல்லை இல்லா ஆனந்தம் அடைவோம்

அன்னையை கண்ட பின் பட்டர் பாடிய பாடல் அல்லவா? அதன் பின் ஆனந்தமயமே! வேறொன்றுமில்லை.

கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஒட்டியவா, என் கண் ஓடியவா, தன்னை உள்ள வண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம், ஆடகத் தாமரை ஆரணங்கே!

ஆடகத் தாமரை ஆரணங்கே - தடாகத்தில் பூத்திருக்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் அழகிய பெண்ணே! அபிராமியே!

என்னை உன் அடியார் கூட்டத்தில் சேர்த்தவளே! எனது கொடிய வினைகளை அழித்தவளே! எனது கண்ணின் முன் வந்தவளே! உன்னை உள்ளவண்ணம், ஒன்றுமே அறியாத எனக்கு காட்டியவளே! உன்னை கண்ட என் கண்களும், அனுபவித்த மனமும் மகிழ்ச்சியில் மிதக்கின்றன. என்னிடம் இப்படி நாடகமாடி, பின் நல்ல விதமான முடிவு ஒன்று வரவழைத்தவளே! உன் கருணையை என்னவென்று சொல்வது?!

இவ்வாறு உணர்ச்சி பொங்க, அபிராமி பட்டர், அன்னையை கண்டதும் பாடி பரவசம் அடைகிறார். நாமும் நம் மனக்கன்ணினால் அன்னையை காண்போம். களிப்புறுவோம்!

பாடல் (ராகம்-கௌரி மனோஹரி, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

Monday, 19 October 2015

பாடல் - 79

பலன்: நல்ல சங்கம் (சத்சங்கம்) கிடைக்கும்

விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு, எமக்கு அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுத்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே?

பொருள்:

இப்பாடல் பாடும் போது, அன்னை பட்டருக்கு காட்சி கொடுத்து, தன் காதணி ஒன்றினை கழற்றி வானில் எரிந்து, தை அமாவாஸ்யை தினத்தன்று பூரண நிலவுலாவும் பௌர்ணமியாக ஒரு க்ஷணம் மாற்றி அனைவருக்கும் அவளின் மகிமையினையும், பட்டரின் பக்தியின் பெருமையினையும் உலகுக்கு காண்பித்தாள். நமக்கும் அவளின் காட்சி கிடைக்கட்டும்.

அபிராமியின் கண்களில் இயற்கையாகவே அருள் நிறைந்து இருக்கும். வேதம் சொன்னவாறு அவளை வழிபட தனக்கும் (பட்டருக்கும்) மனம் உண்டு. இவ்வாறு ஒரு வழி இருக்க, அதில் செல்லாமல், பழி, பாவம் சேரும் வழியில் சென்று, தீய செயல்கள் செய்து, மீள முடியாத நரகத்தினுள் தள்ளப்பட்டு துன்பப்படும் கயவர்களோடு எதற்காக சேர வேண்டும்? அன்னையின் துணையே சாலச்சிறந்தது.

பாடல் (ராகம்-மோகன கல்யாணி, தாளம் - ஆதி) கேட்க:


Check this out on Chirbit

Saturday, 17 October 2015

பாடல் - 78

பலன்: தீர்க்க சுமங்கலியாக பெண்கள் விளங்குவார்கள்

செப்பும் கனக கலசமும் போலும் திருமுலை மேல்
அப்பும் களப, அபிராம வல்லி, அணிதரளக்
கொப்பும், வைரக் குழையும், விழியன் கொழுங்கடையும்,
துப்பும் நிலவும் எழுதி வைத்தேன் என் துணை விழிக்கே

பொருள்:

சிவந்த மாணிக்கங்கள் (செப்பும்) நிறைந்த பொன்னால் (கனக) ஆன குன்று (கலசம்) போல் விளங்கும் அபிராமி அன்னையின் திருமுலைகளின் மேல், வாசனை நிறைந்த சந்தனம் (களப) பூசப்பட்டுள்ளது. அந்த திருமார்பில் பல அணிகலன்கள் திரளாக சூடப்பட்டுள்ளன. முத்து கொப்பும், வைரத் தோடும் (குழை - தோடு) அணிந்துள்ளாள் நம் அன்னை. அன்னையின் கடைக்கண் பார்வையும் அவளுக்கு ஒரு அணிகலனாக உள்ளது. அன்னையின் திருமுகமோ, குளிர்ச்சியினை உமிழும் பூர்ண சந்திரன் போல் உள்ளது.இவற்றை நம் மனக்கண்களில் இருத்தி நினைத்தால், நமக்கு எப்போதும் அன்னை துணையாக இருப்பாள்.

பாடல் (ராகம் - ரவி சந்திரிகா, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

இப்பாடல் அபிராமி பட்டர் பாடிய பின், அடுத்து வரும் பாட்டின் போது அன்னையின் தரிசனம்  கிடைத்தது. விரைவில் அடுத்த பாடலினை அனுபவிப்போம்.

Friday, 16 October 2015

பாடல் - 77

பலன்: பகை நீங்கும்

பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி - என்றே
செயிர் அவி நான் மறை சேர் திருநாமங்கள் செப்புவரெ

பொருள்:

இப்பாடலில், மறைகள் எவ்வாறெல்லாம் அம்பாளை அழைக்கின்றன என்று பட்டர் பாடுகிறார்.

பைரவி - பைரவரின் தேவி - பைரவி பகமாலினி என்கிறது லலிதா சஹஸ்ரநாமம்.

பஞ்சமி - திதி தேவிகள் 16 பேரில் (பிரதமை முதல் சதுர்தசி 14 + அமாவாஸ்யை, பௌர்ணமாஸ்யை =16) , பஞ்சமி என்ற திதிக்கு தனி சிறப்பு உண்டு. அம்பாளின் திருநாமங்களில் அதுவும் ஒன்று. அம்பாளின் சேனாதிபதி தண்டநாதை என்கிற வாராஹியின் பெயர் பஞ்சமி. பஞ்சமி பஞ்ச பூதேசி பஞ்ச சங்க்யோபசாரிணி என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர் ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், அம்பாளுக்கு 5 என்னும் எண் மிகவும் பிடித்த எண் என்று கூறியுள்ளார். அவளின் கணவன் நமசிவாய என்ற பஞ்சாக்ஷரன் என்பதாலோ என்னவோ!

பஞ்ச சங்க்யோபசாரம் என்று அம்பாளை வழிபடும் முறையை பற்றி கூறியுள்ளார். வெள்ளி முதல் செவ்வாய் வரை 5 நாட்களுக்கு தொடர்ந்து அம்பாள் சன்னிதிக்கு சென்று 5 முறை வலம் வந்து 5 முறை நமஸ்காரம் செய்தால் அம்பாள் த்ருப்தி அடைந்து வேண்டிய வரங்களை அளிப்பாள் என்று கூறியுள்ளார்.

பாசாங்குசை - பாசம், அங்குசம் ஆகியவற்றை கையில் தரிப்பவள். ராக ஸ்வரூப பாஷாட்யா - க்ரோத -ஆங்கார - அங்குஷோஜ்வலா என்கிறது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்.

பஞ்சபாணி - 5 மலர்களால் ஆன 5 அம்புகளை வைத்துள்ளவள். - பஞ்ச தன்மாத்ர சாயகா என்கிறது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்.

வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சண்டி - வஞ்சனை உடையவர்களின் உயிரினை பறித்து ரத்தத்தினை குடிக்கும் பெருமை மிகு சண்டி. சண்டிகை என்று கூறுவார்.

காளி - மஹா காளி.

ஒளிரும் கலா வைரவி - பிறை சந்திரனை சூடிய வைரவி. கலை (art) என்பது வளர்ந்துக்கொண்டே இருக்க வேண்டிய ஒன்று. அதை குறிக்கும் வண்ணமாக கலைமகளான சரஸ்வதி தேவி, குருவான தக்ஷிணா மூர்த்தி ஆகியோர் மூன்றாம் பிறையினை, சந்திர கலையினை தலையில் அணிந்திருப்பார்கள்.

மண்டலி - சந்திர, சூர்ய, அக்னி மண்டலங்களில் வசிப்பவள். சந்திர மண்டல மத்யகா, பானு மண்டல மத்யஸ்தா, வன்னி மண்டல வாஸினி என்கிறது லலிதா சஹஸ்ரநாமம்.

மாலினி - மாலைகளை அணிந்தவள்.

சூலி - சூலத்தை ஏந்தியவள்

வராஹி - வாராஹி, வராஹ மூர்த்தியின் சக்தி.

இவ்வாறு உயர்ந்த வேதங்கள் கூறிய நாமங்களை, அம்பாளின் அடியவர்கள் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருப்பார்கள்.

பாடல் (ராகம் - பைரவி, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 14 October 2015

பாடல் - 76

பலன்: கணவன் மனைவி ஒற்றுமை பெருகும்

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பைரவியே

பொருள்:

5 பாணங்கள் (அம்புகள்) கொண்ட பைரவியே, அன்னை அபிராமியே, உனது வடிவங்கள் அனைத்தையும் என் மனத்தில் குறித்துக்கொண்டேன். அதனால், எனக்கு கிடைத்த உன் அருளின் துணைக்கொண்டு, யமன் (மறலி) வரும் வழி என்னவென்று கண்டுகொண்டேன். அதுமட்டும் அல்ல, அவ்வழியினை அடைத்தும் விட்டேன்.

வண்டுகள் மொய்க்கும் (வண்டு கிண்டி), தேன் நிரம்பிய (வெறித் தேன்), இனிய கொன்றை மலர்களை மாலையாக அணிந்த சிவபெருமானின் (அவிழ் கொன்றை வேணி பிரான்), உடலில் ஒரு பகுதியை (ஒரு கூற்றை), தனதாக்கிக்கொண்ட தாயே!

என்று உள்ளம் உருக அபிராமி பட்டர் பாடுகிறார். நாமும் சிவ-வாம-பாக-விஹாரிணி யான அம்பாளை பாடுவோம்.

பாடல் (ராகம் - கௌளிபந்து, தாளம்-ஆதி) கேட்க:

Check this out on Chirbit

Tuesday, 13 October 2015

பாடல் - 75

பலன்: விதியை வெல்வோம்

தங்குவார் கற்பக தருவின் நிழலில், தாயார் இன்றி
மங்குவார், மண்ணில் வழுவாப் பிறவியை, மால் வரையும் ,
பொங்குவார் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்
கொங்குவார் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே

பொருள்:

மால் வரையும் - பெரிய மலை
பொங்குவார் ஆழி - நுரை ததும்பும் அலைகள் உடைய கடல்
ஈரேழ் புவனம் - 2 x 7 = 14 உலகங்கள்

பெரிய மலை, அலை கடல், 14 லோகங்கள் ஆகியவற்றை பெற்ற தாய் அபிராமி.

பூத்த உந்திக் கொங்குவார் பூங்குழலாள் - அழகிய மலர்களை தன் தலையில் சூடியுள்ளாள். அதனால்அபிராமி அன்னை, பூங்குழலாள் என்று அழைக்கப்படுகிறாள். பூக்களை சூடியதால், வண்டுகள் அம்பாளின் தலையில் மேய்கின்றன. அம்பாளின் கூந்தலே வாசம் உள்ளதால் அந்த கூந்தலை வண்டுகள், மலர் என்று நினைத்துக்கொள்கின்றன போலும்.

மட்டுவார்க்குழலி (சுகந்தி குந்தலாம்பாள்) என்று திருச்சிராப்பள்ளியில் அம்பாளுக்கு பெயர்.

திருப்பாம்புரம் என்ற ஸ்தலத்தில், அம்பாளுக்கு வண்டார்க்குழலி என்று பெயர்.

மா மலைகள், அலைக்கடல்கள், 14 உலகங்கள் போன்றவற்றை படைத்தவளும், வாசம் மிகு மலர்களை கூந்தலில் சூடியவளுமான அன்னையின் திருமேனியை நினைப்போர், அடையும் இடம், கற்பக வ்ருக்ஷத்தின் நிழல். அவர்கள் பூமியில் மீண்டும் பிறவா வரம் பெறுவார்.

*(தாயார் இன்றி மங்குவார், மண்ணில் வழுவாப் பிறவியை) தேக மாதா அவர்களுக்கு இனி கிடையாது, மீண்டும் தாயின் வயிற்றில் பிறக்க மாட்டார்.

பாடல் (ராகம் - பிலஹரி, தாளம் -ஆதி திஸ்ர நடை) கேட்க:

Check this out on Chirbit

Monday, 12 October 2015

பாடல் - 74

பலன்: தொழிலில் மேன்மை அடைவோம்

நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப்
பயனென்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவாரே

பொருள்:

நயனங்கள் மூன்றுடை நாதன் - சிவன்
வேதம் - நான்கு வேதங்கள்
நாரணன் - நாராயணன், விஷ்ணு
அயன் - பிரம்மா

மும்மூர்த்திகளும், வேதங்களும் வணங்குவது அன்னை அபிராமயையே. அன்னையின் திருவடிகளை துணையாக கொண்ட அடியவர்கள், தேவ மகளீர் ஆடி, பாடி உல்லாசமாக களிக்கும் சுவர்க்க லோகம் கிடைத்தாலும், பொன் சிம்மாசனம் கிடைத்தாலும் அவற்றை விரும்ப மாட்டர்கள். அன்னையின் காலடியிலேயே தங்குவார்கள்.

அன்னையின் திருவடியை காட்டிலும் பெரியது ஒன்றும் இல்லை.

பாடல் (ராகம் - ஸ்ரீ ரஞ்சனி, தாளம் - ஆதி திஸ்ர நடை) கேட்க:

Check this out on Chirbit

Friday, 9 October 2015

பாடல் - 73

பலன்: குழந்தைப் பேறு கிடைக்கும்

தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு
யாமம் வைரவர் ஏத்தும் பொழுது, எமக்கென்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே

பொருள்:
தாமம் - மாலை - கடம்ப மாலை. கடம்ப வனத்தில் சஞ்சரிப்பவள். அணியும் மாலை கடம்ப மாலை.
படை - ஆயுதங்கள் - 5 மலர்கள் - தாமரை, அசோக மலர், மாம் பூ, செண்பகம், நாக லிங்கம் மலர். - இவ்வைந்து மலர்களை அம்புகளாக அம்பாள் கையில் வைத்துள்ளாள்.
தனு - வில் - கரும்பு வில்
வைரவர் - பைரவர்கள் / வைராகி என்றும் கூறுவார்.

அம்பாள் அணியும் மாலை - கடம்ப மாலை
அம்பாள் வைத்துள்ள அம்புகள் - 5 மலர் அம்புகள்
அம்பாளின் வில் - கரும்பு வில்
வைரவர்கள் அம்பாளை தொழும் பொழுது - நள்ளிரவு - யாமம்
அம்பாள் எனக்கென்று (பட்டர், பக்தர்களுக்கு என்றும் கொள்ளலாம்) அளித்த செல்வம் (சேமம்) அம்பாளின் திருவடி.
அம்பாளுக்கு 4 கைகள். அவை சிவந்த கைகள். வரங்கள் பல கொடுப்பதால், சிவந்தனவோ என்னவோ!?
அம்பாளின் ஒளி/நிறம் - இளஞ்சிவப்பு
அம்பாளின் நாமம் - திரிபுரை
நயனங்கள் - நெற்றிக்கண் ஒன்றோடு, இன்னும் இரண்டு - ஆக மூன்று கண்கள்

பாடல் (ராகம் - ஹம்ஸத்வனி, தாளம் - ஆதி திஸ்ர நடை) கேட்க:

Check this out on Chirbit

Tuesday, 6 October 2015

பாடல் - 72

பலன்: பிறவிப் பிணி தீரும்

என் குறை தீர நின்று ஏற்றுகிறேன். இனி யான் பிறக்கில்
நின் குறையே, அன்றி யார் குறை காண்? இரு நீள் விசும்பின்
மின், குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்,
தன் குறை தீர, என் கோன் சடை மேல், வைத்த தாமரையே

பொருள்:

அன்னை அபிராமியே, எனது குறைகளை தீர்த்துக்கொள்ள உன்னை போற்றுகின்றேன். இனி எனக்கு பிறவிக் கொடுப்பாய் என்றால், அது என் குறை அல்ல. உன் குறையே ஆகும். ஏனென்றால், நான் உன்னை வணங்கிவிட்டேன். அதனால் எனக்கு பிறவி என்பது இருக்கக்கூடாது.

இரு நீள் விசும்பின் மின் - அகண்ட நீண்ட ஆகாயத்தில் தோன்றும் மின்னல், வெட்கப்படும் அளவிற்கு அதை விட மெலிந்த இடை உடையவள் நம் அன்னை அபிராமி. மின்னல் கொடியாள் என்று அம்பாளை பாடுவார்.

திரு G.N.பாலசுப்ரமணியன் என்னும் இசை வல்லுனர், தான் இயற்றிய "உன்னடியே கதி என்றடைந்தேன் தாயே" என்ற பகுதாரி ராக பாடலில், சரணத்தில், மின்னல் கொடியாளே இன்னல்கள் தீர்ப்பாளே என்று பாடியுள்ளார்.

இன்னும் பல துதிகளில், அம்பாளின் இடை மிகவும் மெல்லியது என்றே வர்ணிக்கப்படுகிறது.

சிவ பெருமான், தனது குறையினை போக்கிக்கொள்ள, அன்னையின் திருவடிகளில் தன் தலையினை வைத்து வணங்குகிறார்.

என் கோன் சடை மேல் வாய்த்த தாமரை - என் தலைவன் சிவனின் (சடை) தலை மேல் வைக்கப்பட்ட தாமரை (அம்பாளின் பாதம்).

பாடல் (ராகம் - ஸாவேரி, தாளம் - ஆதி - திஸ்ர நடை) கேட்க:

Check this out on Chirbit

Monday, 5 October 2015

பாடல் - 71

பலன்: மனக்குறைகள் தீரும்

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அருமறைகள்
பழகித் திரிந்த பாதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளை கொம்பிருக்க,
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல், உனக்கு என் குறையே?

பொருள்:

  • அன்னையின் அழகுக்கு இணை ஒருவரும் இல்லை.
  • அருமையான மறைகள் பழகிய, தாமரைப் போன்ற பாதங்கள் உடையவள். வேதங்கள் யாவும் அன்னையின் பாதத்தில் வணங்கி நிற்கின்றன என்று முன்னமே பல பாடல்களில் பார்த்துள்ளோம். 
  • குளிர்ந்த சந்திரனை தன் கூந்தலில் சூடியுள்ளவள். 
  • அழகிய வடிவுடையவள்.
இப்படிப்பட்ட அன்னை நமக்கு ஊன்றுகோலாக துணை இருக்க, நாம் எதற்காக குறைப்பட வேண்டும்?

பாடல் (ராகம் - கேதாரம், தாளம் - ஆதி - திஸ்ர நடை) கேட்க:

Check this out on Chirbit

Friday, 2 October 2015

பாடல் - 70

பலன்: நுண்கலைகளில் தேர்ச்சி பெறுவோம்

கண்களிக்கும் படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல், வீணையும் கையும் பயோதரமும்,
மண்களிக்கும் பச்சைவண்ணமும் ஆகி, மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே

பொருள்:

கடம்பாடவியில் - கடம்ப (கதம்ப) வனத்தில்

கடம்ப வனம் என்னும் இடத்தில், அன்னை அபிராமியை கண் களிக்கும் வண்ணம் கண்டுகொண்டேன். (கதம்ப வன சஞ்சாரிணி என்று அம்பாளுக்கு ஒரு பெயர்). எவ்வாறு?
  • பண்கள் மகிழும் இனிய குரல் உடையவள் அம்பாள். அதனை கேட்டேன். 
  • கையில் வீணையினை அம்பாள் வைத்துள்ளாள். 
  • அவள் முலைகளை தாங்கிய திருமார்பு.
  • மண் மகிழும் பச்சை வண்ணம். 
ஆகியவற்றோடு மாதங்கியான அம்பாளை கண்டுகொண்டேன். அந்த பேரழகை கண்டுகொண்டேன் என்று பட்டர் கூறுகிறார்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில், மஹா பத்மாட வீசம்ஸ்தா - கதம்ப வன வாசினி என்று ஒரு ஸ்லோகம் வரும்.

மேலும் ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய காதம்பரி ப்ரியாயை என்ற மோகன ராக பாடலில், அம்பாளை அவர் கதம்ப கான நாயை நமஸ்தே  என்று குறிப்பிட்டுள்ளார். (கதம்ப கான நாயை நமஸ்தே - கதம்ப வன நாயகிக்கு நமஸ்காரம்).

ஸ்ரீ லலிதா தாசர் என்ற ஒரு மஹான், ஸ்ரீ காமகோடி பீடஸ்திதே என்ற சாவேரி ராக பாடலில், காமாக்ஷி அம்மனை கதம்ப வன நிலயே என்று பாடியுள்ளார்.

மதங்க முனியின் பெண்ணாக அம்பாள் அவதரித்தாள். அதனால், மதங்கர் குல பெண் என்று இங்கு குறிப்பிட்டுள்ளார். மதங்கரின் பெண் ஆதலால் மாதங்கி என்று பெயர் பெற்றாள். மீனாக்ஷி அம்மை, மாதங்கி ஸ்வரூபம் என்று நூல்கள் கூறுகின்றன. மீனாக்ஷியின் நிறம் மரகத பச்சை. மரகத சாயே என்று ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் தான் எழுதிய மீனாக்ஷி மேமுதம் என்ற பூர்வி கல்யாணி ராக பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

மண் செழிப்பானது என்றால், நிறைய பயிர்கள் விளையும். அதனால் எங்கும் பச்சையாக இருக்கும். அப்போது நாடெங்கும் மகிழ்ச்சி பொங்கும். அதனால் மண் களிக்கும் பச்சை வண்ணம் என்று பட்டர் பாடியுள்ளார்.

பாடல் (ராகம் - பௌளி, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit