Monday, 30 November 2015

பாடல் - 95

பலன்: நன்றும் தீதும் ஒன்றே என்று கருதும் மனோபாவம் பெறுவோம். சமதர்ஷனம் (equanimity) கிடைக்கும்

நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம், எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன், அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே

பொருள்:
அபிராமி, அழியா குணக்குன்று. த்ரிகுணாம்பா என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அழைக்கிறது. மூன்று குணங்களுக்கும் (சத்வம், ரஜஸ், தமஸ்) தலைவி என்று பொருள். குணத்ரய விபாவினி என்று தேவி மாஹத்மியத்தில், முதல் அத்தியாயம் மது கைடப வத வர்ணனையில், அம்பாளை பிரம்மா புகழ்கிறார்.

இமவான் பெற்ற கோமளம் - மலையரசன் ஹிமவான் பெற்ற அழகிய செல்வம். ஹைமவதி என்று அம்பாளுக்கு ஒரு நாமம். ஹேமம், ஹைமம் என்றால் தங்கம். இமயம் - தங்கம் போன்ற உயர்ந்த மலை.

அருட்கடல் - அருள் நிறைந்த கடல் அம்பாள்.

அன்னையே, அழியா குணக்குன்றே, அருட்கடலே, மலையரசன் பெற்ற அழகிய செல்வமே, எனக்கென்று ஒன்றும் வைத்துக்கொள்ளாது, எல்லாம் உன்னுடையது என்று ஆக்கிவிட்டேன். அதனால், நன்மையோ தீமையோ எதுவும் என்னை ஒன்றும் செய்யாது. இரண்டிற்கும் வேறுபாடு அறியாதவனாகி விட்டேன். விருப்பு வெறுப்பு அற்றவனானேன். உனக்கே பரம் என்று என்னை ஆக்கினேன். என்று பட்டர் பாடுகிறார்.

நமக்கும் இப்படி பட்ட சம தரிசனம் கிடைக்கட்டும்.

பகவத் கீதையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "எவன் என்னுள் அனைத்தையும், அனைத்திலும் என்னையும் காண்கிறானோ, அவன் எப்போதும் என் அருகிலேயே இருக்கிறான். என்னை விட்டு விலகுவதே இல்லை." என்று கூறுகிறார். அதுபோல் அனைத்தும் இறைவனுடையது என்ற எண்ணம் நமக்கு இருந்தால், உலகத்தில் துன்பம் என்பதே கிடையாது. என்றும் இன்பமே. ஆனந்தமே.

பாடல் (ராகம்-நாதநாமக்ரியா, தாளம் - --விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment