Sunday 30 August 2015

பாடல் - 55

பலன்: மோன நிலை பெறலாம்

மின் ஆயிரம் ஒரு மெய் வடிவாகி விளங்குகின்றது
அன்னாள், அகம் மகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடுவெங்குமாய் முடிவாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே

பொருள்:
ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தால் போன்ற பிரகாசம் உடைய வடிவமாக உள்ளது அன்னையின் திருவடிவம். அவள், அடியவர்களின் மனதிற்கு மகிழ்ச்சி தரும் ஆனந்தமே வடிவானவள். அருமையான வேதத்திற்கு தொடக்கம், இடை, முடிவு என்னும் மூன்று பகுதிகளும் அவளே. அன்னையே முழு முதற்பொருள். அவளை நினைப்பதினாலோ, நினைக்காமல் இருப்பதினாலோ அதனால் ஆகவேண்டியது அவளுக்கு ஒன்றும் இல்லை. நினைத்தால் நன்மை நமக்கு. நினைக்காவிட்டால் தீமையும் நமக்கே.

1. வேதம் (முதல்) - அம்பாளின் முடி / க்ரீடம்
2. உபநிஷத் - வேதாந்தம் முடிவு), பல உபநிஷத்கள் (108) இருக்கின்றன. முக்யமாக 10 உபநிஷத்களுக்குஆதி சங்கரர் பாஷ்யம் (commentary/meaning) செய்திருக்கிறார். தசோபனிஷத் என்று அவை அழைக்கப்படும். அவை ஈசாவச்ய உபநிஷத், கடோபநிஷத், கேனோபநிஷத், சாந்தோக்ய உபநிஷத், முண்டக உபநிஷத், மாண்டூக்ய உபநிஷத், ப்ருஹதாரண்யக உபநிஷத், ஐதரேய உபநிஷத், ப்ரஷ்ன உபநிஷத், தைத்ரீய உபநிஷத்.
3. வேதாங்கம் (இடை) - வேதத்தின் 6 அங்கங்கள். அவை சிக்ஷா (வாய்), நிருக்தம்(மூக்கு), ஜோதிஷம்(கண்), சந்தஸ்(பாதம்), வியாகரணம்(காது), கல்பம்(கை).

இவை யாவும் அன்னையின் வடிவம், என்றே பல நூல்கள் கூறுகின்றன.


Check this out on Chirbit

1 comment: