Sunday, 23 August 2015

பாடல் - 52

பலன்: பெருஞ்செல்வம் கிடைக்கும்

வையம், துரகம், மதகரி, மா மகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம் - பிறை முடித்த
அய்யன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

பொருள்:
பிறையினை தலையில் வைத்திருக்கும் பெருமானின் மனைவியான அன்னையே, உன்னை நினைத்து தவம் புரியும் அடியார்களுக்கு, உன் திருவடி தரிசனம் நிச்சியம் கிடைக்கும். உன் திருவடி என்று அவர்கள் எப்படி கண்டுபிடிப்பர்?

1. இவ்வுலகம் - உலகமே அன்னையின் திருவடியில் இருக்கிறது.

2. குதிரைகள் - அன்னையை சுற்றி இருக்கும் குதிரை படைகள். அஷ்வாரூடா என்ற அன்னையின் ஒரு சக்தி, கோடானுகோடி குதிரைகளை கட்டி காப்பவள். அஷ்வாரூடா திஷ்டிதா அஷ்வ கோடி கோடி பிராவ்ருதா என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு ஸ்லோகம்.

3. மதமிகு யானைகள் - அன்னையை சுற்றி இருக்கும் யானை படைகள். சம்பத்கரீ என்ற தேவி பல யானைகளை தன் கட்டுப்பாடில் வைத்திருப்பாள். இவளும் அன்னையின் ஒரு சக்தியே. சம்பத்கரீ சமாரூட சிந்தூர வ்ரஜ சேவிதா  என்று மற்றொரு ஸ்லோகம் இதனை விளக்குகிறது.

4. பெரிய மகுடங்கள் - சௌந்தர்ய லஹரி வர்ணிப்பது போல், மும்மூர்த்திகள், தேவர்கள் யாவரும், அன்னையின் திருவடியை தங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகிறார்கள். அதனால் என்னவோ, அவர்களின் மா மகுடங்கள், அன்னையின் பாதத்தில் காணப்படுகின்றன.

5. பல்லக்குகள் - பல தேசாதிபதிகள் அன்னையை வந்து வணங்குவதால், அவர்களின் பல்லக்குகள் அன்னையின் பாதத்தில் காணப்படுகின்றன.

6. பொழியும் பொன் மழை - அம்மன்னர்கள் செலுத்திய காணிக்கைகள் அன்னையின் பாதத்திலிருந்து பொன்மழையாக பொழிகின்றன. ஆதி சங்கரர், ஒரு ஏழைப்பெண்ணின் தரித்ரம் நீங்க, அன்னையிடம் கனகதாரா ஸ்துதி என்ற ஸ்லோகத்தை பாடினார். அதனால், அன்னை தன் பாததில்லிருக்கும் கனகங்களை நெல்லிக்கனி வடிவில் பொழிய வைத்தாள் என்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

7. உயர்ந்த மணிமாலைகள் - மன்னர்களும், மகாராணிகளும் அன்னையின் பாதத்தில் நமஸ்கரிப்பதால், அவர்களின் விலை உயர்ந்த மணி மாலைகள், அன்னையின் காலடியில் விழுந்து கிடக்கின்றன.

இவ்வனைத்தும் அன்னையின் திருவடிகளில் எல்லாரும் செலுத்திய காணிக்கைகள். அதனால் இவை நிறைந்து காணப்பட்டால், இவற்றிற்கு மத்தியில் அன்னையின் திருவடி இருக்கும் என்று பட்டர் பாடுகிறார்.

பாடல் (ராகம் - நீலாம்பரி, தாளம் - --விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment