Monday, 31 August 2015

பாடல் - 56

பலன்: எல்லாவற்றையும் வசீகரிக்கும் திறன் பெறலாம்

ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள், எந்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா, இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.

பொருள்:
அன்னை அபிராமியிடமிருந்து தோன்றியதே இவ்வுலகமும் உயிர்களும். அவ்வாறு அவள் ஒருவளே. அனால் பலவாக பிரிந்து காணப்படுகிறாள். தோன்றிய பொருட்களிலிருந்தும் நீங்கி நிற்பாள். அடியார்களின் நெஞ்சினுள் நீங்காது இருந்து ஆட்சி புரிவாள். அவளை பற்றிய முழு உண்மையினை அறிந்தவர்கள் இருவரே - ஆலிலையில் துயின்ற கிருஷ்ணன் (விஷ்ணு) மற்றும் சிவன்.

பாடல்(ராகம்-தர்பாரிகானடா, தாளம் - --விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

Sunday, 30 August 2015

பாடல் - 55

பலன்: மோன நிலை பெறலாம்

மின் ஆயிரம் ஒரு மெய் வடிவாகி விளங்குகின்றது
அன்னாள், அகம் மகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடுவெங்குமாய் முடிவாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே

பொருள்:
ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தால் போன்ற பிரகாசம் உடைய வடிவமாக உள்ளது அன்னையின் திருவடிவம். அவள், அடியவர்களின் மனதிற்கு மகிழ்ச்சி தரும் ஆனந்தமே வடிவானவள். அருமையான வேதத்திற்கு தொடக்கம், இடை, முடிவு என்னும் மூன்று பகுதிகளும் அவளே. அன்னையே முழு முதற்பொருள். அவளை நினைப்பதினாலோ, நினைக்காமல் இருப்பதினாலோ அதனால் ஆகவேண்டியது அவளுக்கு ஒன்றும் இல்லை. நினைத்தால் நன்மை நமக்கு. நினைக்காவிட்டால் தீமையும் நமக்கே.

1. வேதம் (முதல்) - அம்பாளின் முடி / க்ரீடம்
2. உபநிஷத் - வேதாந்தம் முடிவு), பல உபநிஷத்கள் (108) இருக்கின்றன. முக்யமாக 10 உபநிஷத்களுக்குஆதி சங்கரர் பாஷ்யம் (commentary/meaning) செய்திருக்கிறார். தசோபனிஷத் என்று அவை அழைக்கப்படும். அவை ஈசாவச்ய உபநிஷத், கடோபநிஷத், கேனோபநிஷத், சாந்தோக்ய உபநிஷத், முண்டக உபநிஷத், மாண்டூக்ய உபநிஷத், ப்ருஹதாரண்யக உபநிஷத், ஐதரேய உபநிஷத், ப்ரஷ்ன உபநிஷத், தைத்ரீய உபநிஷத்.
3. வேதாங்கம் (இடை) - வேதத்தின் 6 அங்கங்கள். அவை சிக்ஷா (வாய்), நிருக்தம்(மூக்கு), ஜோதிஷம்(கண்), சந்தஸ்(பாதம்), வியாகரணம்(காது), கல்பம்(கை).

இவை யாவும் அன்னையின் வடிவம், என்றே பல நூல்கள் கூறுகின்றன.


Check this out on Chirbit

Thursday, 27 August 2015

பாடல் - 54

பலன்: கடன் தீரும்

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒருகாலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மீன்களே

பொருள்:

கையில் பொருள் எதுவும் இல்லாத காரணத்தால், நாம் ஒருவரிடம் சென்று நின்று கையேந்தினால், அவர்களும் நம் இல்லாமையை சொல்லிக்காட்டி இழிவு படுத்துவார்கள். அவ்வாறு நாம் இழிவு படாமல் இருக்கவேண்டும் என்றால், திரிபுரையான அம்பாளிடம் செல்லுங்கள். ஏனென்றால் என்னை (அபிராமி பட்டரை) ஒருகாலத்தில், தவம் எதுவும் செய்யாத, நல்லனவற்றை கல்லாத கயவர்களோடு சேரவிடாமல் காத்தவள் அவளே.

பாடல் (ராகம் - ஷண்முகப்ரியா, தாளம் -- விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 26 August 2015

பாடல் - 53

பலன்: பொய்யுணர்வு நீங்கும்

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யப்பட்டும்
பென்னம்பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும், கண்மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு இதுபோலும் தவம் இல்லையே

பொருள்:

அன்னையின் சிறிய மெலிந்த இடை, அதில் சாத்தப்பட்ட சிறந்த பட்டு, பெரிய முலை, மார்பில் திகழும் முத்துமாலை, பிச்சிப் பூ சூடிய கருங்கூந்தல், மூன்று கண்கள் இவற்றை ஒருவர் தன் மனதில் வைத்து தியானித்தால், அதுபோன்ற பெருந்தவம் வேறொன்றும் இல்லை.

பாடல்(ராகம் - ஹம்சானந்தி, தாளம் - --விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

Sunday, 23 August 2015

பாடல் - 52

பலன்: பெருஞ்செல்வம் கிடைக்கும்

வையம், துரகம், மதகரி, மா மகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம் - பிறை முடித்த
அய்யன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

பொருள்:
பிறையினை தலையில் வைத்திருக்கும் பெருமானின் மனைவியான அன்னையே, உன்னை நினைத்து தவம் புரியும் அடியார்களுக்கு, உன் திருவடி தரிசனம் நிச்சியம் கிடைக்கும். உன் திருவடி என்று அவர்கள் எப்படி கண்டுபிடிப்பர்?

1. இவ்வுலகம் - உலகமே அன்னையின் திருவடியில் இருக்கிறது.

2. குதிரைகள் - அன்னையை சுற்றி இருக்கும் குதிரை படைகள். அஷ்வாரூடா என்ற அன்னையின் ஒரு சக்தி, கோடானுகோடி குதிரைகளை கட்டி காப்பவள். அஷ்வாரூடா திஷ்டிதா அஷ்வ கோடி கோடி பிராவ்ருதா என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு ஸ்லோகம்.

3. மதமிகு யானைகள் - அன்னையை சுற்றி இருக்கும் யானை படைகள். சம்பத்கரீ என்ற தேவி பல யானைகளை தன் கட்டுப்பாடில் வைத்திருப்பாள். இவளும் அன்னையின் ஒரு சக்தியே. சம்பத்கரீ சமாரூட சிந்தூர வ்ரஜ சேவிதா  என்று மற்றொரு ஸ்லோகம் இதனை விளக்குகிறது.

4. பெரிய மகுடங்கள் - சௌந்தர்ய லஹரி வர்ணிப்பது போல், மும்மூர்த்திகள், தேவர்கள் யாவரும், அன்னையின் திருவடியை தங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகிறார்கள். அதனால் என்னவோ, அவர்களின் மா மகுடங்கள், அன்னையின் பாதத்தில் காணப்படுகின்றன.

5. பல்லக்குகள் - பல தேசாதிபதிகள் அன்னையை வந்து வணங்குவதால், அவர்களின் பல்லக்குகள் அன்னையின் பாதத்தில் காணப்படுகின்றன.

6. பொழியும் பொன் மழை - அம்மன்னர்கள் செலுத்திய காணிக்கைகள் அன்னையின் பாதத்திலிருந்து பொன்மழையாக பொழிகின்றன. ஆதி சங்கரர், ஒரு ஏழைப்பெண்ணின் தரித்ரம் நீங்க, அன்னையிடம் கனகதாரா ஸ்துதி என்ற ஸ்லோகத்தை பாடினார். அதனால், அன்னை தன் பாததில்லிருக்கும் கனகங்களை நெல்லிக்கனி வடிவில் பொழிய வைத்தாள் என்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

7. உயர்ந்த மணிமாலைகள் - மன்னர்களும், மகாராணிகளும் அன்னையின் பாதத்தில் நமஸ்கரிப்பதால், அவர்களின் விலை உயர்ந்த மணி மாலைகள், அன்னையின் காலடியில் விழுந்து கிடக்கின்றன.

இவ்வனைத்தும் அன்னையின் திருவடிகளில் எல்லாரும் செலுத்திய காணிக்கைகள். அதனால் இவை நிறைந்து காணப்பட்டால், இவற்றிற்கு மத்தியில் அன்னையின் திருவடி இருக்கும் என்று பட்டர் பாடுகிறார்.

பாடல் (ராகம் - நீலாம்பரி, தாளம் - --விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

Thursday, 20 August 2015

பாடல் - 51

பலன்: மோகம் நீங்கும்

அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இல்லாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே

பொருள்:
அருள் ஒன்று இல்லாத அசுரர் - க்ரோதமே உருவான, அன்பு என்பது தங்களிடத்தே ஓரு சிறிதளவும் இல்லாத அரக்கர்கள், தங்களின் திரிபுரமே என்றும் நிலையானது என்று இருந்துவந்தனர். அந்த திரிபுரத்தை தனது அம்புகளால் எரித்து அழித்த சிவபெருமானும், முகுந்தனான விஷ்ணுவும், தொழும் அன்னையே,  உன் பாதமே துணை என்று எந்நாளும் தொழும் உன் அடியார்களின் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியை அறுத்து, அவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறாவத வரத்தை தந்தருள்வாய்.

பாபநாசம் சிவன் என்னும் மகான், தனது லதாங்கி ராக பாடலில்,
பிறவா வரம் தாரும் பெம்மானே
பிறவா வரம் தாரும் - பிறந்தாலும் நின் திருவடி
மறவா வரம் தாரும் - மாநிலமீதில்
பிறவா வரம் தாரும்.

என்று உருகி பாடியிருப்பார்.

அப்பர் சுவாமிகள், நடராஜ பெருமானின் குனித்த புருவத்தினையும், கொவ்வை செவ்வாயில் திகழும் குமிழ் சிரிப்பினையும், பனித்த சடையினையும், பவழம் போன்ற மேனியில் பூசப்பட்ட திருநீறினையும், தூக்கிய திருவடியினையும் ஒருவர் காணலாம் என்றால் மனித பிறவி எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று பாடியுள்ளார்.

ஆனால் ஒருமுறை இறைவனின் திருக்கோலத்தை நாம் பார்த்துவிட்டால், பிறகு பிறவிப்பெருங்கடலை நாம் கடந்துவிடலாம்.

திருவள்ளுவர் கூறியது போல்,
பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தாதார்
இறைவனடி சேரா தார் . (அதிகாரம் 1- குறள் 10)

இறைவனிடம் சரணடயாதவர்கள் பிறப்பு இறப்பு சுழலில் சிக்கித்தவிப்பார். இறைவனிடம் சரணடைந்தவர்கள் சுழலிலிருந்து விடுபட்டு இன்பம் பெறுவார்.

பாடல் (ராகம் - தேவகாந்தாரி, தாளம் - --விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 5 August 2015

பாடல் - 50

பலன்: அம்பிகை தரிசனம் கிடைக்கும்

நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாயகி, மாலினி, வாராஹி, சூலினி, மாதங்கி, என்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே

பொருள்:

அம்பாளை நேரில் காணவேண்டும் என்றால், அவள் நாமத்தை கூறவேண்டும். இதுவே கலியுகத்தில் சாலச்சிறந்தது. இதை உணர்த்தும் வகையில், ஸ்ரீ அபிராமி பட்டர், இந்த 50-வது பாடலில், அம்பாளின் நாமங்களை கூறியுள்ளார்.


  • நாயகி - அம்பாளே அனைத்திற்கும் தலைவி. லோகநாயகி, அகிலாண்டேஸ்வரி, ஜகதீஸ்வரி என்று அவளை வணங்குகிறோம்.
  • நான்முகி - நான்கு முகங்களை கொண்ட பிரம்மாவின் சக்தி. பிராம்மணி, ப்ராம்மி என்று சப்த கன்னிகைகளில் மூத்தவள் அம்பாளின் ஒரு வடிவம்.
  • நாராயணி - சங்கு. சக்ரம், கதை, கத்தி, வில் ஏந்திய, மகாவிஷ்ணுவின் சக்தி - வைஷ்ணவி.
  • கையில் 5 மலர்களை வைத்துள்ளவள் - (சம்பக அசோக புன்னாக சௌகந்திக லசத் கசா  - லலிதா சஹஸ்ரநாமம் )
  • சாம்பவி - சம்பு - சிவனின் சக்தி 
  • சங்கரி - சங்கரனின் சக்தி  
  • சாமளை - ஷ்யாமளா தேவி 
  • சாதி நச்சு வாயகி - நஞ்சுடைய நாகத்தை தன் கையில் வைத்திருப்பவள் 
  • மாலினி - மலர், மணி மாலைகளை அணிந்தவள் 
  • வாராஹி - வராஹ மூர்த்தியின்  சக்தி. பூமியை காப்பாற்றிய வராஹ மூர்த்தியின் சக்தி - வாராஹி. இவளே தண்டினி, பஞ்சமி என்றெல்லாம் பெயர் பெற்றவள்.
  • சூலினி - சூலத்தை ஏந்திய மாஹேஸ்வரி என்னும் வடிவினள்.
  • மாதங்கி - மதங்க முனிவரின் பெண்ணாக அவதரித்தவள். ஞானமே வடிவானவள்.



இவ்வாறு பல வடிவும், பெயர்களும் கொண்டவள் அன்னை அபிராமியே. அவளே ஆதி சக்தியும் ஆவாள். அவளது பாதங்களே, நமக்கு பாதுகாப்பு.

பாடல் (ராகம் - நளினகாந்தி, தாளம் - --விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

Tuesday, 4 August 2015

பாடல் - 49

பலன்: மரணத்துன்பம் அகலும்

குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்து இசை வடிவாய்  நின்ற நாயகியே

பொருள்:
குரம்பு - உடல். ஆவி - உயிர்.

நரம்புக்கருவிகள் (யாழ், வீணை போன்ற கருவிகள் - string instruments) எழுப்பும் இனிய இசை வடிவான தலைவியே, எனது ஆயுட்காலம் முடிவுறும்போது, இந்த உடலிலிருந்து உயிரை பிரிக்க, எமன் வருவான். அப்போது நான் மிகவும் பயமுறுவேன். நீ தேவமகளிரோடு என்னிடம் வந்து, உனது வளையல்கள் அணிந்த கரங்களை எனக்கு காட்டி, "பயப்படாதே" என்று கூறவேண்டும்.

பாடல் (ராகம் - காம்போதி, தாளம் - --விருத்தம் --) கேட்க:


Check this out on Chirbit