Monday, 16 March 2015

பாடல் - 18

பலன்: மரண பயம் நீங்கும்

வவ்விய பாகத்து இறைவனும் நீயும் மகிழ்ந்திருக்கும்,
செவ்வியும் உங்கள் திருமண கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆட்கொண்ட பொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே.

பொருள்:
வவ்விய பாகம் - எஞ்சிய பாகம் - வலது பக்கம் - சிவன், உமையம்மை இருவரும் மகிழ்ந்திருக்கும் கோலம் - அர்த்தநாரீஸ்வர கோலம். அம்மையப்பர் கோலம் என்றும் சொல்வர்.

கொடிய காலன் என் மேல் பாசக்கயிற்றை விடும்போது, நம் சிந்தனையுள் இருக்கவேண்டியவை:

1. அர்த்தநாரீஸ்வர திருக்கோலம் (திருச்செங்கோடு என்னும் ஸ்தலத்தில் இக்கோலம் ப்ரசித்தி)
2. சிவன் - பார்வதி கல்யாண கோலம் (திருமணஞ்சேரி, திருவீழிமிழலை போன்ற ஸ்தலங்களில் இக்கோலம் ப்ரசித்தி)
3. நம் அறியாமையினை அகற்றும் அம்பாளின் பொற்பாதம்

இம்மூன்றும் தன் முன்னே நிற்க வேண்டும் என்று பட்டர் வேண்டுகிறார்.

மேலே கூறப்பட்டுள்ள அர்த்தநாரீச்வர கோலம், திருமண கோலம் ஆகியவை சிவனின் 64 வடிவங்களில் இரண்டு. சிவனின் 64 கோலங்கள் படங்களுடன் பார்க்க வலைத்தளம் இங்கு.

அம்பாளின் பாதம் விழுந்த இடம் - 51 சக்தி பீடங்களில், சின்னமஸ்திகா  சக்தி பீடம், உணா மாவட்டம்,ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ளது. அம்பாளின் பெயர் சின்னமஸ்திகா தேவி.

ஆதி சங்கரர் அருளிய அஷ்டாதச சக்தி பீட ஸ்தோத்திரத்தில், பீடபுரம் என்னும் இடத்தில்( ஆந்திர மாநிலம்) அம்பாளின் பாதம் விழுந்ததாக துதிக்கிறார். அம்பாள் பெயர் புருஹுதிகா தேவி.

ஒருவன் இறக்கும் தருவாயில் எதை நினைத்துக்கொண்டு இறக்கிறானோ, அதுவாகவே பிறக்கிறான் என்று நாம் புராணங்களில் காண்கிறோம். பாகவதத்தில் ஜடபரதர் கதை இதை நன்கு தெளிவு படுத்துகிறது. பரதர் முற்றும் உணர்ந்த ஞானியாய் இருந்த போதிலும், இறக்கும் தருவாயில் ஒரு மானை நினைத்து இறந்ததால் மானாகவே அடுத்த பிறவியில் பிறந்தார். பின் அடுத்து  மீண்டும் மனித பிறவி எடுத்து பகவானை வணங்கி, "ஆத்மாவே நிரந்தரம். உடல் பொய்" என்று வாழ்ந்து வந்தார். ரகுகணன் என்ற மன்னனுக்கும் இந்த தத்வத்தை போதித்தார். பின் முக்தி அடைந்தார்.

அதுபோல் நாமும் அம்பாளை நினைத்துக்கொண்டிருந்தால் இறக்கும் தருவாயில் அவள் நினைவு வரும். "நாமே அவள். அவளே நாம்" என்றாகும். சாயுஜ்ய (அவளுக்குள் ஒடுங்குவது) , சாலோக்ய (அவள்  லோகத்தில்) , சாமீப்ய (அவளுக்கு அருகில்), சாரூப்ய (அவளுக்கு அருகில்)  என்னும் நான்கு முக்திகளில் ஒன்று நமக்கு கிட்டும்.

பாடல் (ராகம் - பகுதாரி, தாளம் - மிஸ்ர சாபு) கேட்க:


Check this out on Chirbit


No comments:

Post a Comment