Monday, 23 March 2015

பாடல் - 21

பலன்: அம்பிகையை வழிபடாது நாத்திகமாய் இருந்த பாவம் தொலையும்.

மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருண
சங்கலை செங்கை, சகலகலா மயில், தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்,
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே

பொருள்:

மங்கலை - சுமங்கலி - மங்கள வடிவினள்.

செங்கலசம் முலையாள் - செம்மையான கலசம் போன்ற முலைகளை உடையவள்.

மலையாள் - மலையரசன் ஈன்ற பெண்.

வருண சங்கலை செங்கை - சங்குகளால் ஆன வளையல்களை தன் சென்னிற கைகளில் அணிந்தவள்.

சகல கலா மயில் - அனைத்து கலைகளுக்கும் மயில் (அரசி)

தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் - துள்ளி
திரிந்து வரும் கங்கையையும் அதனால் உண்டாகும் நுரை அலையினயும் தன் சடையில் தங்க வைத்துக்கொள்ளும் சிவபெருமானின் மனையாள்

உடையாள் - என்றும் பக்தர்களுக்கு உடையவள்

பிங்கலை - மஞ்சள் வண்ணத்தினாள்.

நீலி - நீல நிறமுடையாள்

செய்யாள் - சிவந்த நிறமுடையாள்

வெளியாள் - இவ்வாறெல்லாம் விளங்குபவள்.

பசும் பெண்கொடியே - பசுமையான கொடி போன்றவள் - இதனால் தான் அம்பாளுக்கு அபர்ணா என்று பெயர். பர்ணா - இலை. அபர்ணா - இலையில்லாதது. அது ஒரு கொடி.

சிவன் கட்டமரம் - அசைவற்றவர். அம்பாள் - சக்தி - அவரை கொடி போல் சுற்றிக்கொண்டிருப்பவள். காய்ந்த கொடி இல்லை. அவள் பசுங்கொடி. இவர்கள் இருவரின் புதல்வர் - முருகன் - விசாகன். சாகை - கிளை. விசாகை - கிளை அற்றது. கிளை இல்லாத செடி. இதுவே சோமாஸ்கந்த வடிவம்.


பாடல் (ராகம் - நவரச கானடா, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

பாடல் - 20

பலன்: அசையா சொத்துக்கள் (வீடு, நிலம்) போன்றவை கிட்டும்.

உறைகின்ற நின் திருக்கோவில் - நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ ,
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே

பொருள்:

பூரணாசல - நிறைந்த குன்று
மங்கலை - மங்களம் நிறைந்தவள்

அன்னையே, நீ என்றும் நிறைந்தவள். மங்களமே வடிவானவள் (பவானி, சிவானி என்ற பெயர்கள் மங்கள வடிவை குறிக்கின்றன). நீ எங்கு இருக்கிறாய்? நின் கணவர் (கேள்வர்) சிவனின் ஒரு பாகத்திலா? அல்லது நான் மறையின் ஆதியில் அல்லது முடிவில்? அமுதம் பொழியும் வெண்மையான சந்திரனிலா? அல்லது (கஞ்சம் - தாமரை) தாமரையிலா? அல்லது எனது நெஞ்சத்திலா? அல்லது செல்வமெல்லாம் மறைந்திருக்கும் பாற்கடலிலா?  எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கிறாய். அதனால், எதில் என்று குறிப்பாக சொல்ல முடியாது.

பாபநாசம் சிவன், தனது உன்னை அல்லால் வேறே கதி இல்லை அம்மா என்ற கல்யாணி ராக பாடலில், சரணத்தில் எங்கும் நிறைந்தவள் என் மனக்கோவிலில் எழுந்தருளிய தாயே. என்று கற்பகாம்பாளை பாடியுள்ளார்.

பாடல் (ராகம் - ஜயமனோஹரி, தாளம் - மிஸ்ர சாபு) கேட்க:


Check this out on Chirbit

Wednesday, 18 March 2015

பாடல் - 19

பலன்: பேரின்பம் அளிக்கும்

வெளிநின்ற நின் திருமேனியை பார்த்து, என் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரைகண்டது இல்லை, கருத்தின் உள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுள்ளமோ ,
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே

பொருள்:

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே - ஒளி நிறைந்த ஸ்ரீ சக்ரம் (மேரு என்று சொல்லப்படும் வடிவம் (3 Dimension ) ஒன்பது நிலைகள் (படிகள்) கொண்டது. அதனை மேலிருந்து பார்க்கும்போது (Top view ) நமக்கு கிடைக்கக்கூடிய வடிவம் ஸ்ரீ சக்ரம் (2 dimension )). அந்த மேருவின் மேல் (ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில்) உள்ள பிந்து மண்டலத்தில் இருக்கக்கூடியவளே, முந்திய பாடலில் சொல்லப்பட்ட உனது மூன்று கோலங்களை (திருமண, அர்த்தநாரீஸ்வர, திருபாதம்) கண்டவுடன் என் மனதில் எழுந்த மகிழ்ச்சி வெள்ளமானது கரைபுரண்டு கட்டுப்பாடின்றி ஓடுகிறது. என் சிந்தையுள் ஒரு தெளிவு திகழ்கின்றது. இவை அனைத்தும் உன் திருவுள்ளத்தில் நீ நினைத்ததால் தான்.

ஸ்ரீ சக்ர நிலைகள் (ஆவரணங்கள்):
1. த்ரைலோக்ய மோகனம் (பூபுரம் (அ) சதுரஸ்ரம்)  - 4 மூலை கொண்ட சதுரம்
2. ஸர்வாச பரிபூரகம் (சோடஷதளம்) - 16 இதழ்கள் கொண்ட தாமரை
3. ஸர்வ சம்க்ஷோபனம் (அஷ்டதளம்) - 8 இதழ்கள் கொண்ட தாமரை
4.  ஸர்வ  சௌபாக்யதாயகம் (சதுர்தசாரம்) - 14 முக்கோணங்கள்
5.  ஸர்வார்த்த சாதகம் (பஹிர் தசாரம்) - 10 வெளி முக்கோணங்கள்
6.  ஸர்வ  ரக்ஷாகரம் (அந்தர் தசாரம்) - 10 உள் முக்கோணங்கள்
7.  ஸர்வ  ரோகஹரம் (அஷ்ட கோணம்) - 8 முக்கோணங்கள்
8.  ஸர்வ சித்தி ப்ரதாயகம் (த்ரிகோணம்) - 1 முக்கோணம்
9.  ஸர்வானந்தமயம் - பிந்து - 1 புள்ளி

பாடல் (ராகம் - நாககாந்தாரி, தாளம் - மிஸ்ர சாபு) கேட்க:


Check this out on Chirbit

Monday, 16 March 2015

பாடல் - 18

பலன்: மரண பயம் நீங்கும்

வவ்விய பாகத்து இறைவனும் நீயும் மகிழ்ந்திருக்கும்,
செவ்வியும் உங்கள் திருமண கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆட்கொண்ட பொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே.

பொருள்:
வவ்விய பாகம் - எஞ்சிய பாகம் - வலது பக்கம் - சிவன், உமையம்மை இருவரும் மகிழ்ந்திருக்கும் கோலம் - அர்த்தநாரீஸ்வர கோலம். அம்மையப்பர் கோலம் என்றும் சொல்வர்.

கொடிய காலன் என் மேல் பாசக்கயிற்றை விடும்போது, நம் சிந்தனையுள் இருக்கவேண்டியவை:

1. அர்த்தநாரீஸ்வர திருக்கோலம் (திருச்செங்கோடு என்னும் ஸ்தலத்தில் இக்கோலம் ப்ரசித்தி)
2. சிவன் - பார்வதி கல்யாண கோலம் (திருமணஞ்சேரி, திருவீழிமிழலை போன்ற ஸ்தலங்களில் இக்கோலம் ப்ரசித்தி)
3. நம் அறியாமையினை அகற்றும் அம்பாளின் பொற்பாதம்

இம்மூன்றும் தன் முன்னே நிற்க வேண்டும் என்று பட்டர் வேண்டுகிறார்.

மேலே கூறப்பட்டுள்ள அர்த்தநாரீச்வர கோலம், திருமண கோலம் ஆகியவை சிவனின் 64 வடிவங்களில் இரண்டு. சிவனின் 64 கோலங்கள் படங்களுடன் பார்க்க வலைத்தளம் இங்கு.

அம்பாளின் பாதம் விழுந்த இடம் - 51 சக்தி பீடங்களில், சின்னமஸ்திகா  சக்தி பீடம், உணா மாவட்டம்,ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ளது. அம்பாளின் பெயர் சின்னமஸ்திகா தேவி.

ஆதி சங்கரர் அருளிய அஷ்டாதச சக்தி பீட ஸ்தோத்திரத்தில், பீடபுரம் என்னும் இடத்தில்( ஆந்திர மாநிலம்) அம்பாளின் பாதம் விழுந்ததாக துதிக்கிறார். அம்பாள் பெயர் புருஹுதிகா தேவி.

ஒருவன் இறக்கும் தருவாயில் எதை நினைத்துக்கொண்டு இறக்கிறானோ, அதுவாகவே பிறக்கிறான் என்று நாம் புராணங்களில் காண்கிறோம். பாகவதத்தில் ஜடபரதர் கதை இதை நன்கு தெளிவு படுத்துகிறது. பரதர் முற்றும் உணர்ந்த ஞானியாய் இருந்த போதிலும், இறக்கும் தருவாயில் ஒரு மானை நினைத்து இறந்ததால் மானாகவே அடுத்த பிறவியில் பிறந்தார். பின் அடுத்து  மீண்டும் மனித பிறவி எடுத்து பகவானை வணங்கி, "ஆத்மாவே நிரந்தரம். உடல் பொய்" என்று வாழ்ந்து வந்தார். ரகுகணன் என்ற மன்னனுக்கும் இந்த தத்வத்தை போதித்தார். பின் முக்தி அடைந்தார்.

அதுபோல் நாமும் அம்பாளை நினைத்துக்கொண்டிருந்தால் இறக்கும் தருவாயில் அவள் நினைவு வரும். "நாமே அவள். அவளே நாம்" என்றாகும். சாயுஜ்ய (அவளுக்குள் ஒடுங்குவது) , சாலோக்ய (அவள்  லோகத்தில்) , சாமீப்ய (அவளுக்கு அருகில்), சாரூப்ய (அவளுக்கு அருகில்)  என்னும் நான்கு முக்திகளில் ஒன்று நமக்கு கிட்டும்.

பாடல் (ராகம் - பகுதாரி, தாளம் - மிஸ்ர சாபு) கேட்க:


Check this out on Chirbit


Wednesday, 11 March 2015

பாடல் - 17

பலன்: கன்னிகைகள் நல்வரன் அமையப்பெறுவர்

அதிசயமான வடிவுடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சயானன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயமாக, முன் பார்த்தவர் தம்
மதி சயமானதன்றோ, வாமபாகத்தை வவ்வியதே

பொருள்:
அபிராமி அனைவரும் அதிசயம் அடையும்படியான அழகு வாய்ந்தவள். அரவிந்தம் - தாமரை - முதலிய மலர்கள் எல்லாம் துதிக்கத்தக்க, வெற்றி நிறைந்த முகம் உடையவள். (சயானன - ஜயம் (வெற்றி) முகம். ஹயக்ரீவருக்கு குதிரை முகம். ஹய - குதிரை. ஹயானனன், அச்வானனன் என்றும் அவரை அழைப்பதுண்டு. அஸ்வம் - குதிரை. அதுபோல் சயானன என்றால் வெற்றி முகம்)

"கமலாகோடி சேவிதா" என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம், அம்பாளை கோடி தாமரை மலர்கள் வணங்குகின்றன என்று கூறப்பட்டுள்ளது. இங்கு தாமரை - லக்ஷ்மி தேவி அல்லது அழகிய வஸ்துக்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். அம்பாளை அழகிய வஸ்துக்கள் வணங்குகின்றனவா? அல்லது அம்பாளை வணங்குவதால் அவை அழகாக இருக்கின்றனவா? முடிவு நம்மிடத்தில். எதுவாக இருந்தாலும் அம்பாளை வணங்குவதால் நமக்கு நன்மையே என்று உறுதி கொள்ளவேண்டும்.

இரதி பதி - மன்மதன். இவனது அம்பிற்கு அடிபணியாதவர் ஒருவரும் இல்லை. அப்படிப்பட்ட காமனின் வெற்றியை )சயம் - ஜயம்) தோல்வியாக (அபசயம் - அபஜயம்) மாற்றியவர் சிவபெருமான். அவர் தன் நெற்றிக்கண்ணை திறந்து காமனை எரித்தார். அதோடு அவன் வெற்றிச்செருக்கும் அழிந்தது. அப்படிப்பட்ட சிவபெருமானின் மனதினையும் நீ (அபிராமி) வெற்றிக்கொண்டாய். அதோடு சிவனின் இடபாகத்தையும் நீ உணதாக்கிகொண்டாய்.

பாடல் (ராகம் - அஸாவேரி , தாளம் - மிஸ்ர சாபு) கேட்க:

Check this out on Chirbit

பாடல் - 16

பலன்: முக்காலமும் உணரும் திறன் கிடைக்கும்

கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் 
ஒளியே, ஒளிரும் ஒளிக்கிடமே, எண்ணில் ஒன்றுமில்லா 
வெளியே, வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே,
அளியேன் அறிவளவிர்க்கு அளவானது அதிசயமே 

பொருள்:

முந்திய பாடலில், பட்டர் , அன்னையை பைங்கிளியே என்று அழைத்தார். இந்த பாடலிலும் கிளியே என்று அழைக்கிறார். பொதுவாக ஒரு பெண் அழகாய் இருக்கிறாள் என்றால், நாம், கிளி போல இருக்கிறாள் என்று சொல்வோம் அல்லவா? அதுபோல், அன்னை பேரழகி. அதனால் கிளியே என்று வர்ணிக்கிறார். 

மேலும் மீனாக்ஷி அம்மையின் கையில் உள்ளது கிளி. ஆண்டாளின் கையில் உள்ளது கிளி. பல பறவைகள் இருப்பினும், கிளிக்கு அம்பளிடத்தில் தனி இடம் உண்டு. லலிதா சஹஸ்ரநாமத்தில் "சுககரி" என்று கையில் கிளியை வைத்துள்ளாள் என்று ஒரு நாமம் வருகிறது. (சுமங்கலி சுககரி சுவேஷாட்யா சுவாசினி)

ஆதலால் அன்னையே, கிளி போன்ற அழகு கொண்டவளே, உன்னை வணங்குவோரின் மனதில் குடிகொண்டு பிரகாசிக்கும் சுடர் ஒளியே, அந்த ஒளிக்கு ஆதாரமே, வெற்றிடமான வெளியே (vacuum - space - ether) - ஆகாசம், ஆகாசம், காற்று, தீ, நீர், மண் முதலிய பூதங்களாகி விரிந்த அன்னையே, எளியவனான என் மனதிற்கும் புலப்படுமாறு நீ இருப்பது அதிசயம் தான்.

இவ்வாறு பட்டர் துதிக்கிறார். நாமும் துதிப்போம்.

பாடல் (ராகம் - அம்ருதவர்ஷினி, தாளம் - மிஸ்ர சாபு) கேட்க:

Check this out on Chirbit


Monday, 9 March 2015

பாடல் - 15

பலன் - பெருஞ்செல்வமும் பேரின்பமும் நல்கும்

தண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? - மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும், அழியா முக்தி வீடும் அன்றோ?
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளை பைங்கிளியே

பொருள்:
அன்னை அபிராமி - இனிய இசையினை எழுப்பக்கூடிய பசுங்கிளி (பச்சை கிளி - பைங்கிளி)
பண் - இசை , பண்ணளிக்கும் - இசை தரக்கூடிய , சொல் - இனிமை. எப்படிப்பட்ட இனிமை ? நல்ல வாசனை போன்ற இனிமை (பரிமள)

அன்னையின் அருளுக்காக முற்பிறவியில் பலகோடி தவங்கள் செய்பவர்களுக்கு கிடைக்கக்கூடியது இவ்வுலகில் இருப்பதற்க்கான செல்வமா? இல்லை இல்லை. தேவர்களுக்கு இணையான தேவப்பதவி. பின்னர் என்றும் அழியாத வீடு பேறு - முக்தி. இவையே தலை சிறந்த செல்வங்கள் ஆகும்.

பாடல் (ராகம் - பேகடா, தாளம் - கண்ட சாபு) கேட்க:

Check this out on Chirbit

Tuesday, 3 March 2015

பாடல் - 14

பலன்: தலைமை பதவி கிடைக்கும்

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியா பரமானந்தர், பாரில் உன்னை
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே.

பொருள்:
என் அன்னை அபிராமியே, தேவர்கள், அசுரர்கள் மற்றும் உன் அடியார்கள் உன்னை வணங்குகின்றனர்.

நல்திசைமுகர் - 4 திசைகளிலும் முகம் உள்ளவர் - நான்முகர் - பிரம்மா.
நாரணர் - நாராயணன் - விஷ்ணு
பிரம்மா, விஷ்ணு இவர்கள் இருவரும் எப்போதும் அபிராமி அன்னையை நினைதுக்கொண்டிருக்கிறார்கள்.

அன்னையை தன் மனத்தின் உள்ளேயே கட்டுப்படுத்தியவர், என்றும் அழியா ஆனந்தமே வடிவான பரமசிவன்.

இவர்களை காட்டிலும் அன்னையே, நீ பாரில் உன்னை கோவிலில் தரிசனம் செய்வோர்க்கு எளிதாய் அருள் புரிகிறாய். உனது உள்ளத்தை எப்படி புகழ்வது?

பாடல் (ராகம் - ஹிந்தோளம், தாளம் - கண்ட சாபு) கேட்க:


Check this out on Chirbit

Monday, 2 March 2015

பாடல் - 13

பலன்: வைராக்கியம் தரும்

பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே,  கறை கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உனை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

பொருள்:
ஈரேழு = பதினான்கு உலகங்களை படைத்தவளே (14 உலகம் - பூலோகம் (பூமி), பூமிக்கு மேல் 6 லோகங்கள் - புவர் லோகம், சுவர் லோகம் (சுவர்க்கம்), மஹர் லோகம், ஜன லோகம், தப லோகம், சத்ய லோகம் (பிரம்மா இருப்பிடம்) மற்றும் பூமிக்கு கீழ் உள்ள 7 லோகங்கள் - அதள , விதள, சுதள, தளாதள, ரசாதள, மகாதள, பாதாள (ஆதி சேஷன் இங்கு இருந்துக்கொண்டு அண்டத்தை தன தலையில் தாங்குகிறார்.) லோகங்கள்.),
படைத்த வண்ணம் அவற்றை காப்பவளே, பிரளயத்தின் போது அனைத்துலகினையும் தன்னுள் ஈர்த்துக்கொள்பவளே (இதுவே அழித்தல் எனப்படும்),
கறை கண்டன் - விஷம் அருந்தியதால் நீல நிற கறை உடைய கழுத்து கொண்ட சிவா பெருமான் - கண்டம் - கழுத்து
சிவ பெருமானுக்கு மூத்தவளே - ஆதி சக்தியிடமிருந்து மும்மூர்த்திகள் தோன்றினர்.
விஷ்ணு என்றும் இளமை வடிவானவர். அவருக்கு அம்பாள் தங்கை.
மாத்தவளே - மலையத்வஜன், மதங்க முனி, காத்யாயன மஹரிஷி முதலியோர் பெருந்தவம் செய்து அம்பாளை தங்கள் மகளாய் பெற்றெடுத்தனர்.
உன்னை விட வேறு தெய்வத்தை நான் வணங்குவேனோ? என்று பட்டர் பாடுகிறார்.

இந்த மூன்று தொழில்களை ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - ஸ்ருஷ்டிகர்த்ரீ பிரம்ம ரூபா, கோப்த்ரீ கோவிந்த ரூபிணி, சம்ஹாரினீ ருத்ரரூபா என்று வர்ணிக்கிறது.

அதாவது படைக்கும் பொருட்டு பிரம்மாவாகவும், காக்கும் பொருட்டு விஷ்ணுவாகவும், அழிக்கும் பொருட்டு ருத்ரனாகவும் அம்பாள் வடிவெடுக்கிறாள்.

பாடல் (ராகம் - நாட்டகுறிஞ்சி, தாளம் - கண்ட சாபு) கேட்க:


Check this out on Chirbit