Monday, 7 September 2015

பாடல் - 60

பலன்: மெய்யுணர்வு பெறுவோம்

பாலினும் சொல் இனியாய், பனி மா மலர்ப் பாதம் வைக்க
மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும், கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ - அடியேன் முடை நாய்த் தலையே

பொருள்:
இங்கு பட்டர், தம்மீது அம்பாள் கருணைக்கொண்டு அவள் பாதங்களை வைத்தமைக்கு நன்றி தெரிவிக்கிறார். அதோடு தான் மிகவும் சிறியவன் என்று அடக்கத்தோடு கூறுகிறார். அந்த அடக்கம் நமக்கும் கிடைக்கட்டும்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கின்படி, நாம் அடக்கத்தோடு இருந்தால், உயர்ந்த நிலை கிடைக்கப் பெறுவோம். இல்லாவிட்டால், இருளில் தள்ளப்படுவோம்.

அம்பாள், இனிய சொல் உடையவள். முன்பே மதுரபாஷினி, தேனார்மொழிவல்லி என்றெல்லாம் அம்பாளை பற்றி பார்த்தோம். இங்கும், பட்டர், பாலினை காட்டிலும் இனிய சொல் உடையவள் என்று அன்னையை புகழ்கிறார்.

அத்தகு இனியவளின் தாமரை (பனி மா மலர் - தாமரை) போன்ற பாதங்களை, திருமால் மீதும், தேவர்களின் தலைவனான இந்திரன் மீதும், மாலும், இந்திரனும் வணங்கும் கொன்றைபூக்கள் சூடிய சடையுடைய சிவபெருமான் மீதும் அன்னை வைத்துள்ளாள்.

மேலும் உயர்ந்த வேதங்கள் நான்கின் மீதும் அம்பாள் தன் பாதங்களை  வைத்துள்ளாள்.

இவைகளைத்தவிர சிறியோனான தன் மீதும் (பட்டர்) அம்பாள் கருணைக்கொண்டு வைத்துள்ளாள். அவர்களை விட எந்த விதத்திலும் தான் சிறந்தவன் அல்ல. எனினும் தன்மீது அம்பாள் அவள் பாதத்தை வைத்தது, அவள் அவ்யாஜ கருணா மூர்த்தி என்பதை நிரூபிக்கிறது.

அவ்யாஜ கருணா மூர்த்தி - எவ்வித காரணமும் இன்றி கருணை காட்டுபவள்.

பாடல் (ராகம்-குந்தளவராளி, தாளம் - விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment