Sunday, 27 September 2015

பாடல் - 69

பலன்: சகல சௌபாக்யங்களையும் பெறலாம்

தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே

பொருள்:
67-வது பாடலில், அன்னையை நினைக்காமல் இருப்போர் படும் துன்பத்தை, பட்டர் கூறினார். இங்கே, அம்பாளின் கடைக்கண்கள் தரக்கூடிய நன்மைகளை கூறுகிறார்.

கார்மேகம் போல், கருமையான, கனமான கூந்தலினை கொண்ட அபிராமி அம்மையின் கடைக்கண்கள், அன்னையின் மேல் அன்பு கொண்டவர்களுக்கு:
1. தனம் - செல்வம்
2. கல்வி - அறிவு
3. ஒரு நாளும் தளர்வறியா மனம் - தைரியமான மனம்
4. தெய்வ வடிவம் - தெய்வீகமான அழகு ததும்பும் வடிவம் (ஸாரூப்யம் என்று ஒருவகை முக்தி)
5. நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் - வஞ்சனை இல்லா உறவினர்கள்
6. நல்லன எல்லாம் - நல்லவை அனைத்தும்

ஆகிய 6 செல்வங்களையும் தரும்.

பாடல் (ராகம்-பௌளி, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

Friday, 25 September 2015

பாடல் - 68

பலன்: நிலம், வீடு போன்ற செல்வங்கள் கிடைக்கும்

பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர் விசும்பும்
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் அடையாத தனம் இல்லையே

பொருள்:

பார் - நிலம்
புனல் - நீர்
கனல் - நெருப்பு
வெங்கால் - காற்று
படர் விசும்பு - பரந்த ஆகாயம்

ஊரும் முருகு - தொடு உணர்வு
சுவை
ஒளி - வெளிச்சம்
ஊறு - வாசனை
ஒலி - சத்தம்

5 பூதங்களாகவும்  - அவற்றை சார்ந்த 5 உணர்வுகளாகவும் (சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம்) இருக்கக்கூடியவள் அன்னை அபிராமி. அவளின் சிறந்த திருவடிகளை சேர்பவர்கள் அடையக்கூடிய தவம் சிறந்த தவமாகும்.
அவர்களால் பெற இயலாத செல்வம் ஏதும் இல்லை. அதாவது எல்லா செல்வங்களையும் பெறுவார்கள்.

பாடல் (ராகம் - ஹம்சநாதம், தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

Thursday, 24 September 2015

பாடல் - 67

பலன்: பகையுணர்வு அழியும்

தோத்திரம் செய்து தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனதில் வையாதவர், வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம் குன்றி நாளும் குடில்கள் தோறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாய் நிற்பார், பாரெங்குமே

பொருள்:

அன்னை அபிராமியை தொழுது, அவள் புகழ் பாடாது, ஒரு மாத்திரைப் பொழுது கூட அவளின் மின்னல் போன்ற பிரகாசமான தோற்றத்தை மனதில் நினைக்காதவர் அடையும் கதி என்ன?

1. வள்ளல் குணம் - வண்மை
2. குலம் - பிள்ளைகள்
3. கோத்திரம் - சந்ததி
4. கல்வி - அறிவு
5. குணம் - நற்குணங்கள்

ஆகியவற்றில் குறைவடைந்து, பாரெங்கும் திரிந்து வீடு வீடாக சென்று பாத்திரம் ஏந்தி பிச்சை எடுப்பார். தரித்ரத்தினால் பீடிக்கப்பட்டு துன்புறுவர்.

இந்த குணங்களுக்கு ஏற்றாற்போல், லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் நாமங்கள்:

குலம், கோத்திரம் - குலயோகினி, குல ரூபிணி, குலாங்கனா
கல்வி - ப்ரக்ஞான கணரூபிணி, ஞான விக்ரஹா, ஞான சக்தி, சிவ ஞான ப்ரதாயினி, சத்ய ஞான ஆனந்த ரூபா, விக்ஞான கலனா, ஞான முத்ரா, ஞான கம்யா, ஞானக்ஞேய ஸ்வரூபிணி,
குணம் - ஷாட்குண்ய பரிபூரிதா, குண நிதி, த்ரிகுணாத்மிகா

பாடல் (ராகம்-ஹம்சநாதம், தாளம் - ஆதி)  கேட்க:

Check this out on Chirbit

Tuesday, 22 September 2015

பாடல் - 66

பலன்: கவி பாடும் திறன் பெறுவோம்

வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடி செய் 
பல்லவம் அல்லது பற்று ஒன்றிலேன், பசும் பொன் பொருப்பு 
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய், வினையேன் தொடுத்த 
சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே 

பொருள்: 

அன்னையே, எதையும் அறியாதவன் நான். மிக சிறியவன். உன் மலர் பாதத்தின் துணை தவிர வேறெதிலும் பற்றில்லாதவன். பொன்னால் ஆன மலையினை வில்லாக ஏந்திய சிவபெருமானுடன் வீற்றிருப்பவளே, வினைகள் பல செய்தவனான நான் உன்னை போற்றி பாடிய பாடல்களில் சொல் குற்றம் ஏதும் இருந்தால் அதை நீ பொருத்தருள வேண்டும். ஏனென்றால் அவை உன் மீது செய்யப்பட்ட தோத்திரங்கள் ஆகும்.

இவ்வாறு பட்டர் வேண்டுகிறார். அடியேனும் அப்படியே வேண்டுகிறேன்!

பாடல் (ராகம் - கன்னட கௌளை, தாளம் - ஆதி) கேட்க:

Sunday, 20 September 2015

பாடல் - 65

பலன்: மகப்பேறு கிட்டும்

ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம் பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இரு மூன்று என தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே

பொருள்:

ககனம் - அண்டம் (universe ), வான் - வானம் (sky) , புவனம் - பூமி (உலகம், earth).

விற் காமன் - வில் ஏந்திய மன்மதன்

தடக்கையும் செம் முகனும் முந்நான்கு இரு மூன்று -

தடக்கை முந்நான்கு -> கைகள் 3 x  4 = 12
செம்முகம் இரு மூன்று -> முகம் 2 x 3 = 6

அண்டமும், வானமும், உலகமும் காணும் வண்ணம், கரும்பு வில் ஏந்திய மன்மதனை சிவா பெருமான் எரித்தார். அந்த சிவபெருமானுக்கும் கூட அறிவில் சிறந்த, 12 கைகளும், 6 முகங்களும் கொண்ட அழகிய முருகனை பெற சக்தியினை அம்பாள் கொடுத்தாள். அவளின் கருணையினை என்ன என்று கூறுவது!

பாடல் (ராகம் - கன்னட கௌளை, தாளம் - ஆதி) கேட்க:


Check this out on Chirbit

Friday, 18 September 2015

பாடல் - 64

பலன்: பக்தி பெருகும்

வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டு கொண்டேன், நின் புகழ்ச்சி அன்றி
பேணேன், ஒரு பொழுதும் திருமேனி பிரகாசம் அன்றி
காணேன் இருநிலமும், திசை நான்கும் ககனமுமே

பொருள்:
வீணாக பலி கொடுத்து வழிபடும் சமயங்கள் பக்கம் சென்று அத்தெய்வங்களை ஆராதிக்க மாட்டேன். அன்னையான உன்னிடம் மட்டுமே அன்பு கொள்வேன். உன் புகழை அன்றி வேறு புகழை பேச மாட்டேன். எப்பொழுதும்அன்னையின்
திருமேனி பிரகாசத்தை அன்றி மற்றொன்றினை காண மாட்டேன். எங்கிருந்தாலும், இவ்வுலகிலும், வேறுலகிலும் (இம்மை மறுமை இவற்றில் என்று பொருள் கொள்ள வேண்டும்), நான்கு திசைகளில் எங்கு இருந்தாலும் மற்றும் வானில் இருந்தாலும் - எங்கும் எப்போதும் அன்னையின் புகழையே பாடுவேன் என்கிறார் பட்டர்.

பாடல் (ராகம் - கல்யாணி, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 16 September 2015

பாடல் - 63

பலன்: அறிவு தெளிவு கிடைக்கும்

தேறும் படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்கு
கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறி குறிக்கும் - சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே

பொருள்:
ஆறு சமயங்களுக்கும் தலைவி அன்னை அபிராமியே. ஆறு சமயங்கள் - ஆதி சங்கரர், வைதீக மதமான சனாதன தர்மத்தினை ப்ரதான தெய்வ வழிபாடினை வைத்து வகுத்துக்கொடுத்த காணபத்யம் (கணபதி), கௌமாரம் (முருகன்), சைவம் (சிவன்), வைணவம் (விஷ்ணு), சாக்தம் (அம்பாள்), சௌரம் (சூரியன்) ஆகும்.

சாக்த மதத்தின் ப்ரதான தேவதை அம்பாளாயினும், பட்டர், இங்கு அம்பாளே 6 மதங்களுக்கும் தலைவி என்று கூறுகிறார். இது அம்பாள் மீது அவர் கொண்டுள்ள ஈடுபாட்டினை காட்டுகிறது.

சாமானியர்கள் முன்னேறுவதற்கு வழிகளை காட்டக்கூடியவள் அன்னையே. அவளே ஆறு மதங்களுக்கும் தலைவி. இப்படி இருக்க வேறு சமயங்களும் உண்டு என்று சில வீணர்கள் வாதம் செய்கின்றனர். இது எப்படி இருக்கு என்றால், பெரிய மலையை சிறிய தடியை வைத்துக்கொண்டு தகர்த்துவிடலாம் என்பது போல். விதண்டா வாதம் என்கிறார் பட்டர்.

வேறு சமயம் என்று பட்டர் இங்கு கூறுவது, சங்கரர்அவதரிப்பதற்கு முன், பாட்ட மதம் (பூர்வ மீமாம்சம் - குமாரில பட்டர் நிறுவியது), சாங்க்ய மதம், காபாலிக மதம் (நர பலி ப்ரதானமான மதம்) என்று பல வகை இருந்தன. அவை நம்மை பாவம் செய்ய தூண்டுபவை. அத்வைத தத்வமே சாலச்சிறந்தது என்று சங்கரர் மற்ற மதங்களை வாதம் செய்து வென்றார்.



பாடல் (ராகம் - கல்யாணி, தாளம் - ஆதி) கேட்க:


Check this out on Chirbit


Tuesday, 15 September 2015

பாடல் - 62

பலன்: எல்லாவிதமான அச்சங்களும் அகலும்

தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பை குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கை கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே

பொருள்:
பொன்னால் ஆன மலையினை வில்லாக ஏந்தி, சிவ பெருமான், தானவர்களை (அசுரர்கள்), அவர்கள் இருப்பிடமான திரிபுரத்தில் சென்று போரிட்டு அழித்தார். மதம் கொண்ட யானையின் கண்கள் சிவந்து காணப்படும். அப்படிப்பட்ட சிவந்த கண்களுடைய யானையின் தோலினை (கரி உரி - யானைத் தோல்)  போர்த்திக்கொண்டு காவல் புரியும் சிறந்த காவலன், சிவபெருமான்.

[செஞ்சேவகன் = செம்மை + சேவகன் (சிறந்த = செம்மை)]

அந்த காவலனின் உடலில் ஒரு பகுதியை (இடபாகத்தை) தனக்கென்று வைத்துக்கொண்ட நாயகி அன்னை அபிராமி. அவளின் பொன்போன்ற சிவந்த கைகளில் (கோ கனகச் செங்கை) உள்ள கரும்பு வில்லும், ஐந்து மலர் அம்புகளும் (கரும்பும் மலரும்) எப்போதும் நம் சிந்தனையில் நிலைத்திருக்கட்டும்.

சிவபெருமான், புலித்தோலினை உடையாக உடுத்திருப்பது நமக்கு தெரிந்த ஒன்று. யானைத்தோல், மான்தோல் கூட  உடுத்திருப்பார்.
புலி - காம விகாரங்களை குறிக்கும்.
யானை - பெருமையினால் ஏற்பட்ட கர்வத்தை குறிக்கும்.
மான் - கட்டுப்பாடின்றி திரியும் மனதினைக் குறிக்கும்.

இவ்வாறு யானைத்தோல் உடுத்திருப்பதால், கர்வத்தை அடக்கி தன்வயம் வைத்திருப்பவர் என்று பொருள்படும்.

பாடல் (ராகம் - கர்நாடக தேவகாந்தாரி, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

Thursday, 10 September 2015

பாடல் - 61

பலன்: மாயை விலகும்

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய், நின்னை உள்ளவண்ணம்,
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்!
தாயே! மலைமகளே! செங்கண் மால் திரு தங்கச்சியே

பொருள்:
நாயேன் - மிகவும் தாழ்ந்தவன்

பட்டர் தன்னை ஒரு நாயை போல தாழ்த்திக்கொண்டு பாடுகிறார். ஒருவர் தன்னை மிகவும் சிறியவன் என்று அடக்கத்தோடு குறைத்துக்கொண்டு பேசினால், அவர் பலமடங்கு உயர்ந்தவாராகிறார்.

மிகவும் சிறியவனான தன்னையும் ஒரு பொருளாக கருதி, அம்பாளே தன்னையறியாமல் ஆட்கொண்டாள். அதுமட்டும் இல்லாமல், அம்பாளை உள்ளாது உள்ளபடி பேயேனான தான் (பட்டர்) அறியும் படி அறிவு தந்தாள். இது எவ்வளவு பெரிய பேறு? அன்னையே, மலையரசன் மகளே, சிவந்த கண்கள் கொண்ட விஷ்ணுவின் தங்கையே என்று அன்போடு அழைக்கிறார்.

மலையத்வஜ பாண்டியன் மகளாக, மதுரையில் மீனாக்ஷி அம்மன் அவதரித்தாள். பர்வத ராஜ குமாரி பார்வதி. இமயவானின் புதல்வி ஹைமவதி. ஹிமகிரி புத்ரி, ஹிமாத்ரி சுதே, ஹிமாச்சல தனயா என்றெல்லாம் அம்பாளை அழைப்பார்கள். அவளே மலைமகள். கைலையம்பதியான பரமேஸ்வரனின் பத்னி.

விஷ்ணு, சதாசர்வகாலமும் உலகை காத்துக்கொண்டிருப்பதால், கண் அயராது இருப்பார். அதனால் என்னவோ அவர் கண் சிவந்தே இருக்கும் போல.
ஆண்டாளும் திருப்பாவையில் 30 -ஆம் பாசுரத்தில்,

செங்கண் திருமுகத்து செல்வ திருமாலால்,
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

என்று பாடியுள்ளார். சிவந்த தாமரை போன்ற அழகு வாய்ந்த கண்கள் என்பதாலும் பெருமாளை, செங்கண் மால் என்று அழைக்கிறார்கள்.

பாடல் (ராகம்-சுருட்டி, தாளம்-சதுஸ்ர ஏகம்) கேட்க:


Check this out on Chirbit

Monday, 7 September 2015

பாடல் - 60

பலன்: மெய்யுணர்வு பெறுவோம்

பாலினும் சொல் இனியாய், பனி மா மலர்ப் பாதம் வைக்க
மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும், கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ - அடியேன் முடை நாய்த் தலையே

பொருள்:
இங்கு பட்டர், தம்மீது அம்பாள் கருணைக்கொண்டு அவள் பாதங்களை வைத்தமைக்கு நன்றி தெரிவிக்கிறார். அதோடு தான் மிகவும் சிறியவன் என்று அடக்கத்தோடு கூறுகிறார். அந்த அடக்கம் நமக்கும் கிடைக்கட்டும்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கின்படி, நாம் அடக்கத்தோடு இருந்தால், உயர்ந்த நிலை கிடைக்கப் பெறுவோம். இல்லாவிட்டால், இருளில் தள்ளப்படுவோம்.

அம்பாள், இனிய சொல் உடையவள். முன்பே மதுரபாஷினி, தேனார்மொழிவல்லி என்றெல்லாம் அம்பாளை பற்றி பார்த்தோம். இங்கும், பட்டர், பாலினை காட்டிலும் இனிய சொல் உடையவள் என்று அன்னையை புகழ்கிறார்.

அத்தகு இனியவளின் தாமரை (பனி மா மலர் - தாமரை) போன்ற பாதங்களை, திருமால் மீதும், தேவர்களின் தலைவனான இந்திரன் மீதும், மாலும், இந்திரனும் வணங்கும் கொன்றைபூக்கள் சூடிய சடையுடைய சிவபெருமான் மீதும் அன்னை வைத்துள்ளாள்.

மேலும் உயர்ந்த வேதங்கள் நான்கின் மீதும் அம்பாள் தன் பாதங்களை  வைத்துள்ளாள்.

இவைகளைத்தவிர சிறியோனான தன் மீதும் (பட்டர்) அம்பாள் கருணைக்கொண்டு வைத்துள்ளாள். அவர்களை விட எந்த விதத்திலும் தான் சிறந்தவன் அல்ல. எனினும் தன்மீது அம்பாள் அவள் பாதத்தை வைத்தது, அவள் அவ்யாஜ கருணா மூர்த்தி என்பதை நிரூபிக்கிறது.

அவ்யாஜ கருணா மூர்த்தி - எவ்வித காரணமும் இன்றி கருணை காட்டுபவள்.

பாடல் (ராகம்-குந்தளவராளி, தாளம் - விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

பாடல் - 59

பலன்: குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்கள் வளரும்

தஞ்சம் பிறிது இல்லை, ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள் சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார் , அடியார் பெற்ற பாலரையே

பொருள்:

ஒற்றைச்சிலை போன்ற அழகுடையவளும், கைகளில் கரும்பு வில் (இக்கு - கரும்பு), 5 மலர் அம்புகள் ஆகியவற்றை உடையவளுமான அன்னை அபிராமியே தஞ்சம் என்று தெரிந்தபின்னரும், அவளை எண்ணாது, பிற வழியில் நாம் செல்லினும், நம்மை அன்னை தண்டிக்க மாட்டாள். ஏனென்றால், உலகில் உள்ள சாமானிய பெண்களே, தங்கள் குழந்தைகள் தவறு செய்தால், தண்டிக்காமல் மன்னித்து விடுகிறார்கள். அப்போது அன்னை நிச்சியம் மன்னிப்பாள் அல்லவா?

இங்கே பெண்கள், மெல்லிய அடி உடையவர்கள், அதாவது, பஞ்சும் நாணும் வண்ணம் மெல்லிய நடை உள்ளவர்கள் என்று பட்டர் கூறியுள்ளார்.

"அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார் , அடியார் பெற்ற பாலரையே " -
  1. அறியார் - அறியாதவர் (பேதை பெண்கள் - அக்காலத்தில் பெண்கள் ஒன்றும் அறியாதவர்கள், இல்லத்தையும், கணவனையும், குழந்தைகளையும் தவிர மற்றொன்றையும் அறியாதவர்கள் என்று கொள்ள வேண்டும்) 
  2. எனினும் - ஆகினும், 
  3. பஞ்சு அஞ்சு மெல் அடியார் (மெல்லிய அடிகள் உடைய பெண்கள்), 
  4. அடியார் (அடிக்க மாட்டார்கள்).
  5. பெற்ற பாலரையே - பெற்ற பாலர்களை(குழந்தைகளை) 
வள்ளுவரும், திருக்குறளில் பெண்களை பற்றி கூறும் போது:
தற்காத்து தற்கொண்டான் பேணி தகைசான்ற
சொற்காத்து சோர்விலாள் பெண்

என்று கூறியுள்ளார். அதாவது, பெண் என்பவள், தன்னையும், தன்னை கொண்டவனையும் (கணவன், குடும்பம்),  தனக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளை செய்து சொல்லை காத்து, சோர்வற்று சுறுசுறுப்பாக இருப்பவள் என்று பொருள் படும். சோர்விற்கு சோர்வு கொடுப்பதே பெண்ணிற்கு அழகு.

சதா சிவ பதிவ்ரதா, சதா சிவ குடும்பினி என்றே அம்பாளுக்கு இரு சிறப்பு பெயர்கள்  உண்டு.

பாடல் (ராகம் - சிம்மேந்திர மத்யமம், தாளம் - --விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

Friday, 4 September 2015

பாடல் - 58

பலன்: மன அமைதி கிட்டும்

அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும் 
தருணாம்புய முலைத் தையல், நல்லாள், தகை சேர் நயனக் 
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும், 
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே 

பொருள்:
  • காலையில் மலரும் இளஞ்சிவப்பு நிற தாமரையிலும் (அருண அம்புயம் (அம்புஜம் திரிதல் அம்புயம்), என் மனத்தாமரையிலும் வீற்றிருப்பவள் அன்னை அபிராமி. 
  • அவள் தாமரை மொட்டு போன்ற குவிந்த முலைகளை உடையவள். என்றும் இளம் பெண்ணாக காட்சி தருபவள் (தையல்). [பாலாம்பிகை (அ) தையல்நாயகி என்று வைத்தீஸ்வரன் கோவிலில் அம்பாளுக்கு பெயர்].
  • மிகவும் நல்லவள். 
  • அன்னையின் பெருமை வாய்ந்த, கருணை ததும்பும் கண்களாகிய தாமரைகள், முகமாகிய தாமரை, கரங்களாகிய தாமரைகள், திருவடிகளான தாமரைகள் இவற்றை தவிர வேறொரு தஞ்சம் தனக்கில்லை என்று பட்டர் கூறுகிறார். 
பாடல்(ராகம் - மாயாமாளவகௌளை, தாளம்--விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

Thursday, 3 September 2015

பாடல் - 57

பலன்: வறுமை ஒழியும்

அய்யன் அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம் செய்யும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே?

பொருள்:
சிவபெருமான், அளந்த 2 நாழி நெல்லைக்கொண்டு, அண்டமெல்லாம் 32 அறங்களை செய்தவள் அன்னை.

காஞ்சி ஏகாம்பரநாதர் நெல்லை அளந்ததாகவும், அதைக்கொண்டு காமாக்ஷி அறங்களை செய்ததாகவும் புராணம் கூறுகிறது. அதனாலேயே காஞ்சிபுரம் பஞ்ச பூத ஸ்தலங்களுள் ப்ரிதிவி ஸ்தலம், நிலத்திற்கு உரிய க்ஷேத்ரம் என கருதப்படுகிறது.

இதேபோல், அய்யன், அடியவனின் நிலத்தை வேலி இட்டு காத்த இடம் இன்று திருநெல்வேலி என அழைக்கப்படுகிறது. அம்மையும், திருவையாற்றில் தர்மசம்வர்தனி, அறம்வளர்த்தநாயகி என்று அழைக்கப்படுகிறாள்.

இவ்வாறு அறம் செய்யும் அன்னையை போற்றி பாட தனக்கு தமிழினை கொடுத்தமைக்கு பட்டர் நன்றி செலுத்துகிறார்.

மேலும், நிலத்தை ஆளும் மன்னர்களை மகிழ்விக்கவும் (பொய்யும், மெய்யும் கலந்து போற்றும் நிலை) அந்த தமிழ் பயன்படுகிறதே என்று வருத்தமும் படுகிறார். இதுவும் அன்னையின் திருவிளையாடலே. இதுவா உனது மெய்யருள்? என்று கேட்கிறார்.

பாடல் (ராகம்-சங்கராபரணம், தாளம் -- விருத்தம்--) கேட்க:


Check this out on Chirbit