Thursday, 30 July 2015

பாடல் - 48

பலன்: உடல் மீதுள்ள பற்று விலகும்

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமள பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.

பொருள்:

சுடரும் கலைமதி - ஒளிவீசுகின்ற பிறை சந்திரனை,
சடைமுடிக் குன்றில் - தன் குன்றினை ஒத்த சடைமுடியில் அணிந்தவரான சிவபெருமானின் நெஞ்சில் நிறைந்த,
பரிமள பச்சைக்கொடி - வாசமிகுந்த பச்சைக்கொடியே,
உன்னை தன் நெஞ்சில் வைத்து, எப்போதும் வழிபடும் அடியார்கள், துன்பத்தை தவிர்த்து, மீண்டும் குருதி, தோல், குடல் நிறைந்த இப்பிறவியைபெறாமல் என்றும் மகிழ்வாய் இருப்பார்கள்.

பாடல் (ராகம் - காபி, தாளம் - --விருத்தம்--) கேட்க:


Check this out on Chirbit

Tuesday, 28 July 2015

பாடல் - 47

பலன்: யோக நிலை அளிக்கும்

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
ஏழும் பருவரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே

பொருள்:
இரவு பகல் சூழும் சுடர்கள் - சந்திர, சூரியர்கள்.

உலகில் இரவும், பகலும் உருவாக காரணமாக இருக்கும் சூரியன், சந்திரன் இவைகளுக்கு நடுவே இருந்து பிரகாசிப்பவள் - அன்னை அபிராமி.

வேலை நிலம் ஏழும் பருவரை எட்டும், எட்டாமல் -
அவள், ஏழு நிலங்கள், எட்டு உயர்ந்த மலைகள் ஆகியவைக்கும் எட்டதவள்.

ஆனால், மனத்தினால் ஒருவர் தியானித்தால் அவர்களுக்கு எளிதில் எட்டுபவள். அன்னையை வணங்குவதே வாழ்வதற்கு வழி.

பாடல் (ராகம்: வசந்தா, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

Tuesday, 21 July 2015

பாடல் - 46

பலன்: நல்ல நடத்தையோடு வாழ்வோம்

வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே, புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே

பொருள்:

விடத்தை உண்டதால், கருத்த நிறமான கழுத்தை உடைய நீலகண்டனின் இடப்பக்கத்தில் கலந்த பொன் போன்றவளே, தகாத செயல்களை அறிவிற் சிறியோர்கள் செய்தால், அதை ஞானிகள் பொறுத்து அருள்வது வழக்கமான ஒன்று. அது ஒன்றும் புதியது அல்ல. அதுபோல உன் அடியவனாகிய நான், உனக்கு விருப்பம் இல்லாத செயல்களில் ஈடுபட்டாலும், இறுதியில் உன்னை சரணடைந்தால், அதை மன்னித்து விடுவாய். அத்தோடு, உன்னை வாழ்த்தி பாடவும் வைப்பாய். என்னே உனது கருணை!

பாடல் (ராகம் - ரேவதி, தாளம் - -- விருத்தம் -- ) கேட்க:

Check this out on Chirbit

Saturday, 18 July 2015

பாடல் - 45

பலன்: உலகத்தோர் பழியிலிருந்து விடுபடுவோம்

தொண்டு செய்யாது, நின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றி செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே.

பொருள்:

அன்னை அபிராமியே, உனக்கு தொண்டு செய்யாமலும், உன் பாதம் தொழாமலும் இருந்துக்கொண்டு, தன் விருப்பப்படியே கடமைகளை மட்டுமே செய்து வாழ்ந்த ஞானிகள் இருந்தனர். அவ்வாறு நானும் இருந்தால் அது உனக்கு மகிழ்ச்சி அளிக்குமா இல்லையா என்பது தெரியவில்லை. எனினும் என்னை வெறுக்காது பொறுத்தருள வேண்டும்.

இங்கு பூர்வ மீமாம்சர்களை குறிக்கிறார். கர்மமே பிரம்மம் என்ற நம்பிக்கையினை உடையவர்கள் பூர்வ மீமாம்சர்கள். குமரில பட்டர், மண்டன மிஸ்ரர் போன்றோர். பிறகு, ஆதி சங்கரரால் வாதத்தில் வெல்லப்பட்டு கர்மம், பக்தி, ஞானம் இம்மூன்றுமே அவசியம். கர்மம் மட்டும் போதாது என்று அத்வைத சித்தாந்தத்தினை ஒப்புக்கொண்டனர். கர்மத்தை செய்து, நம் உடலையும் மனத்தினையும் தூய்மை செய்து கொள்ள வேண்டும். பின் இறைவனிடம் பக்தி செலுத்தி  ஞானத்தினை பெற வேண்டும். ஞானத்தினை அடைந்தால், பிரம்மமும் நாமும் ஒன்று. அதன்பின் த்வைதமே (இருமை) இருக்காது. அஹம் ப்ரஹ்ம்மாஸ்மி என்ற மஹா வாக்யமே அத்வைத சாரம்.

  1. ப்ரஞானம் பர பிரம்ம (ஞானமே பிரம்மம் - ஐதரேய உபநிடதம், ரிக் வேதம்)
  2. தத் த்வம் அஸி (அதுவே நீ - மாண்டூக்ய உபநிடதம் - அதர்வ வேதம்)
  3. அயம் ஆத்மா பர பிரம்மம் (இந்த ஆத்மாவே பிரம்மம் - சாந்தோக்ய உபநிடதம் - வேதம்)
  4. அஹம் ப்ரஹ்ம்மாஸ்மி (பிரம்மமே நான், நானே பிரம்மம் - ப்ரஹதாரன்யக உபநிடதம் - யஜுர் வேதம்)

இவையே உபநிடதங்கள் கூறும் மஹா வாக்யங்கள்.

பாடல் (ராகம் - கீரவாணி, தாளம் - -- விருத்தம்-- ) கேட்க:


Check this out on Chirbit

Monday, 13 July 2015

பாடல் - 44

பலன்: பிரிவுணர்ச்சி அகலும்

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் 
அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினாள், ஆகையினால் 
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம் 
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த்  தொண்டு செய்தே.

பொருள்:
அபிராமி அன்னை, நம் தலைவரான சங்கரரின் (சிவனின்) இல்லத்தரசி. அவரது இல்லத்தில் மங்களம் விளங்க வைப்பவள். அவளே, சிவனின் தாய். மற்றவர்களுக்கும் அன்னையே தலைவி, இறைவி. ஆகையினால், அவளுக்கு மட்டுமே தொண்டு செய்து இன்பம் பெறுவேன். தொண்டு செய்யாமல் துன்பத்தில் துவள மாட்டேன்.

பாடல் (ராகம்: சரஸ்வதி, தாளம்: விருத்தம் ) கேட்க:


Check this out on Chirbit

Thursday, 9 July 2015

பாடல் - 43

பலன்: தீமைகள் ஒழியும்

பரிபுர சீரடி, பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்தூர மேனியள், தீமை நெஞ்சில்
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக் கை,
எரி புரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

பொருள்:
முந்திய பாடல் 42 ல் கூறியது போல, சிலம்பணிந்த சிவந்த திருவடிகளை உடையவளும், கரங்களில் பாசம் மற்றும் அங்குசம் உடையவளும், இனிய சொற்களை உரைப்பவளும், சிவந்த மேனியினை உடையவளும், தீய எண்ணம் கொண்ட வஞ்சனை நிறைந்த அரக்கன் புரனையும் அவன் இருப்பிடமான திரிபுரத்தினையும் அழித்தவரான சிவபெருமானின் இட பாகத்தில் இருப்பவளும் அன்னை அபிராமியே.

பாடல் (ராகம்-கேதார கௌளை, தாளம் - --விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

Thursday, 2 July 2015

பாடல் - 42

பலன்: உலகம் நம் வசமாகும்

இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை, மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல்லரவின்
படம் கொண்ட அல்குல், பனிமொழி, வேத பரிபுரையே

பொருள்:
அபிராமி அம்மையின் ஸ்தனங்கள் [மார்பகங்கள்] கருணை ததும்புவது, பெரியது போன்றெல்லாம் முந்திய பாடல்கள் சிலவற்றில் பார்த்துள்ளோம். அவை ஒன்றொடு ஒன்று போட்டியிட்டுக்கொண்டு கருணை சுரப்பதால் இடமின்றி மோதிக்கொண்டு விம்முகிறது. பின்னர் இரண்டும் சற்றே இளகி மேலும் கருணை சுரக்க வழிவகுக்கின்றன.

அப்படிப்பட்ட ஸ்தனங்களின் மேல் படுமாறு, முத்து மாலைகளை அணிந்துக்கொண்டிருக்கிறாள். இந்த ஸ்தனங்கள் , வலிமையான நெஞ்சினை உடையவரும், கயிலை மலை மேல் வாழ்பவருமான சிவபெருமானின் மனத்தினையும் ஆட்டிவைக்கிறது.

அம்பாளின் இடையானது நல்ல பாம்பின் படம் போல், மெல்லியதாகவும், ஒளி வீசுவதாகவும் உள்ளது. அம்பாள், மனதினை குளிர்விக்கும் வார்த்தைகள் பேசுபவள். வேதங்களை தன் பாத சிலம்பாக அணிந்தவள்.

மதுரபாஷினி என்று அம்பாளுக்கு பெயர் உண்டு. பெரியசாமி தூரன் என்னும் சாஹித்ய கர்த்தா, தாயே திரிபுர சுந்தரி என்ற பா (சுத்த சாவேரி ராகம்) பாடலில்,  "தேனார் மொழி வல்லி ஜகமெல்லாம் படைத்தாள்" என்று அம்பாளை பாடியுள்ளார்.

இதேபோல், சங்கீத கலாநிதி திரு G.N.பாலசுப்ரமணியன் (GNB) அவர்கள், பரம அம்பாள் உபாசகர். ராஜராஜேஸ்வரி பூஜை செய்பவர். அவரும் அம்பாள் பேரில் பல பாடல்கள் பாடியுள்ளார். அவற்றிலெல்லாம், "சுதா மாதுர்ய பாஷிணி", "சுதா மதுர வாக்விலாசினி" என்று பாடியுள்ளார்.

மேலும் லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில், "நிஜ சல்லாப மாதுர்ய விநிர் பர்த்சித கச்சபி" என்று வரும். அதாவது கச்சபி = சரஸ்வதியின் வீணை. அந்த வீனா காணத்தை அம்பாள் ரசிக்கும் போது, "ஆஹா" என்று உரைத்தாள். அது வீணையின் சப்தத்தை விட மதுரமாக (இனிமையாக) இருந்தது என்று பொருள்.

சௌந்தர்ய லஹரி - 66 ஆம் ஸ்லோகத்தில், தேவியின் குரல், வீணையினும் இனிது என்று சங்கரர் கூறியுள்ளார்.

விபஞ்ச்யா காயந்தீ விவிதம் அபதானம் பசுபதேஸ்
த்வயாரப்தே வக்தும் சலிதசிரஸா ஸாது வசனே
ததீயை: மாதுர்யை: அபலபித தந்த்ரீ கலரவாம்
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம்

பசுபதியான பரமசிவனின் லீலைகளை அழகாக வீணை மீட்டி சரஸ்வதி பாடுகிறாள். அதை அம்பாள் ரசிக்கிறாள். அப்போது "ஆஹா" என்று அதை பாராட்டி தேவி  கூறுகையில், அந்த சப்தம், தனது வீணையை காட்டிலும் இனிமையாக இருந்ததால், சரஸ்வதி, வெட்கப்பட்டுக்கொண்டு தன் வீணையினை உரை போட்டு யாருக்கும் தெரியாதவாறு மூடி மறைத்து விடுகிறாள்.

பாடல் (ராகம் - சாரங்கா, தாளம் - --விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit