Tuesday, 30 June 2015

பாடல் - 41

பலன்: நல்லடியார்களின் நட்பு கிடைக்கும்

புண்ணியம் செய்தனமே மனமே - புது பூங்குவளை
கண்ணியும் செய்ய கணவரும் கூடி - நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்க
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே

பொருள்:
புதிதாக மலர்ந்த குவளைப்பூ போன்ற அழகிய கண்கள் உடைய அபிராமியும், சிவந்த கண்களை உடைய அவளது கணவரான சிவபெருமானும் ஒன்றுகூடி, அடியார்களான நம்மையும் ஒன்றாக திரள வைத்து, நம் யாவரையும் (நமது தலைகளை) தங்கள் தாமரை போன்ற பாதங்களில்  சேர்த்துக்கொண்டது நாம் செய்த புண்ணியமே என்று நம் மனம் அறிந்து கொள்ளவேண்டும்.

பாடல் (ராகம் - மோகனம், தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

Thursday, 25 June 2015

பாடல் - 40

பலன்: பூர்வ புண்ணியத்தின்  பலன் கிடைக்கும்

வாள் நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ - முன் செய் புண்ணியமே

பொருள்:
  1. வாள் போன்று - மின்னும் நெற்றியை உடையவள் அன்னை அபிராமி.
  2. தேவர்களுக்கு, அன்னையான அவளை  வணங்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டுபண்ணக்கூடியவள். 
  3. அறியாமை உள்ள நெஞ்சத்திற்கு புலப்படாதவள். 
  4. என்றும் கன்னியானவள்.
இப்படிப்பட்டவளை நான் வணங்குவதே பூர்வஜன்மத்தில் நான் செய்த புண்ணியம் என்கிறார் பட்டர்.

சௌந்தர்ய லஹரி "சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி..." என்கிற முதல் ஸ்லோகத்தில், ஆதி சங்கரர்,

சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும் 
நசேத் ஏவம் தேவோ நகலு குசல ஸ்பந்திதும் அபி 
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதி பிரபி 
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருத புண்ய: ப்ரபவதி

 என்கிறார். 

அதாவது புண்ணியம் செய்யாதவர்கள் உன்னை வணங்க முடியாது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரும் பூர்வத்தில் புண்ணியம் செய்ததால் தான் உன்னை (தேவியை) வணங்குகிறார்கள்.

பாடல் (ராகம் - குறிஞ்சி, தாளம் - --- விருத்தம்---) கேட்க:


Check this out on Chirbit

Monday, 22 June 2015

பாடல் - 39

பலன்: கருவிகளை நன்றாக கையாளும் திறன் கிடைக்கும்

ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியன் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று - முப்புரங்கள்
மாளுகைக்கு, அம்புதொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே.

பொருள்:
அபிராமி பட்டர் கூறுகிறார்:
1. அம்பாளின் திருவடிகள்அவளை தொழுபவரை ஆளும்
2. அம்பாளின் கடைக்கண் பார்வையானது  அவளை வணங்குபவரை  யமனிடமிருந்து மீட்கும்.

இவ்விரண்டும் அம்பாளை தொழுதால், கிடைக்கும். தொழாவிட்டால் கிடைக்காது. இது தன்னுடைய குறையே. அம்பாளின் குறையல்ல.

அம்பாள்அழகிய நெற்றியினை  உடையவள். முப்புரங்கள் - திரிபுரம் என்னும் அரக்கர்களின் ஊர். அந்த திரிபுரத்தை அழிக்க சிவபெருமான் வில் ஏந்தி அம்பு தொடுத்தார். அவரின் ஒரு பாகத்தில் அம்பாள் உள்ளாள். திரிபுரம் எரித்த விரிசடை பெருமான் என்று சிவபெருமானை நூல்கள் கூறுகின்றன.

பாடல் (ராகம் - பெஹாக், தாளம் - --விருத்தம்---) கேட்க:


Check this out on Chirbit

Thursday, 18 June 2015

பாடல் - 38

பலன்: வேண்டியவற்றை வேண்டியவாறு அருளும்

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும், துணையா, எங்கள் சங்கரனை
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே

பொருள்:
அம்பாள் எப்படிப்பட்டவள் என்று இங்கு கூறுகிறார் பட்டர்.

1. பவளம் போன்ற சிவந்த திருவாய் உடையவள்
2. பனிமுறுவல் - குளிரூட்டும் இதமான சிரிப்பு உடையவள்
3. இவ்வளவுதானா? இல்லை. ஒருவராலும் குலைக்கமுடியாத தவம் உடைய சிவபெருமானின் தவத்தினை களைத்தவள். எப்படி? தனது மெல்லிய இடை, மற்றும் உடுக்கை போன்ற முலைகளால். முன்பு பார்த்தவாறே, அம்பாளின் முலைகள் கருணை நிறைந்து பருத்து இருப்பதால், இடை நோகும்படி மெல்லியதாக உள்ளது. அதனால், மார்பகங்கள், இருபுறம் பருத்து, நடுவில் சிறிதாகி ஒரு உடுக்கை போல் இருக்கிறது என்று பாடுகிறார்.

அம்பாளை பணிந்தால், தேவலோகத்தையும் நாம் ஆள முடியும்.

பாடல் (ராகம் - ஆந்தோளிகா, தாளம் - ஆதி[திஸ்ர நடை]) கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 17 June 2015

பாடல் - 37

பலன்: நவமணிகளை பெற்று தரும்

கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே

பொருள்:
இங்கே அம்பாள் என்னென்னவெல்லாம் அணிகிறாள் என்பது கூறப்பட்டுள்ளது.
கைகளில் - கரும்பு வில், மலர் அம்பு  [கன்னல் - கரும்பு]
கமலம் [தாமரை] மற்றும் அன்னப்பறவை போன்ற மெல்லிய உடலில் வெண்முத்து மாலை.
விடம்கொண்ட நாகம் போன்ற மெல்லிய இடையில் - பலமணிகளால் கோர்க்கப்பட்ட மாலை, மற்றும் பட்டு.
இவ்வாறு அணிகலன்களை அணியும் அம்பிகை, யாரிடம் சென்று இடது பாகத்தில் சேர்கிறாள்? எட்டுத்திக்குகளையுமே ஆடையாய் அணிந்திருக்கும் திகம்பரனான சிவபெருமானிடம்.

நித்யாய சுத்தாய திகம்பராய - என்று சிவனை ஆதி சங்கரர் சிவபஞ்சாக்ஷர ஸ்தோத்திரத்தில் வர்ணித்துள்ளார்.

பாடல் (ராகம்: சுத்த தன்யாசி, தாளம்: ஆதி) கேட்க:


Check this out on Chirbit