Thursday, 30 April 2015

பாடல் - 28

பலன்: இம்மை, மறுமை இவைகளில் இன்பம் அளிக்கும்

சொல்லும் பொருளும் என, நடமாடும் துணைவருடன்
புல்லும், பரிமள பூங்கொடியே, நின் புது மலர் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்,
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே

பொருள்:

சொல்லையும்  பொருளையும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது. அதுபோல, சிவபெருமானோடு கூடி நடம் புரியும் அன்னையே, வாசம் வீசும் பூங்கொடி நீ. உன் பாதங்கள், அன்றலர்ந்த புது மலர்கள். இதனை இரவு பகல் பாராது யார் துதிக்கிறார்களோ, அவர்களுக்கு இப்பிறவி இன்பமாக அரச போகமும், இவ்வுலகை விட்டு நீங்கி முக்தி அடையும் வழியாக தவ நெறியும், பின் சிவலோகமும் கிடைக்கும்.

பாடல் (ராகம்: கானடா, தாளம் - மிஸ்ர சாபு) கேட்க:


Check this out on Chirbit

Tuesday, 28 April 2015

பாடல் - 27

பலன்: மனநோய் அகலும்

உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள் புனலால்
துடைத்தனை, சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே

பொருள்:
சுந்தரி - அழகி - அபிராமியே, உன் அருள் பெருமையை என்னவென்று சொல்வது?
முதலில், வஞ்சகம், கோபம் போன்ற அழுக்குகள் நிறைந்த பிறவியை அறுத்தாய்.
பின்னர் அன்பே ததும்பும் உள்ளம் கொடுத்தாய்.
பின்னர் உன் பாத கமலங்களை வணங்கும் பணியினை எனக்கே அளித்தாய். எல்லாவற்றிற்கும் மேலாக, என் நெஞ்சத்தின் அழுக்கை உன் அருள் வெள்ளத்தினால் துடைத்தாய்.

பாடல் (ராகம் - ரீதிகௌளை, தாளம் - மிஸ்ர சாபு) கேட்க:


Check this out on Chirbit

Saturday, 25 April 2015

பாடல் - 26

பலன்: செல்வாக்கு, சொல்வாக்கு அருளும்

ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம், கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே, மணம் நாறும் நின்தாளிணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே

பொருள்:
மணம் கமழ் கடம்ப மாலையினை கூந்தலில் அணிந்திருக்கும் ஆரணங்கு (அழகிய பெண்) அபிராமி. அவளை அவள் அடியவர்கள் மற்றும் 14 உலகினையும் முறையே படைத்து, காத்து, அழிக்கும் தொழில்கள் செய்யும் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தேவர்களும் வணங்குகின்றனர். அத்தகைய அன்னையின் மணம் கமழ் திருவடிகளை எளியவனான என் நாவலிருந்து தோன்றிய பாடல்கள் அவற்றை நன்றாக வர்ணிக்கின்றன. இவ்வாறு எண்ணும்போது சிறிய நகை உண்டாகிறது. ஏனென்றால், நீ கொடுத்த வாக்கு சக்தியால், உன்னையே தொழுகிறேன். அதை பெரிதாக கருதி சொல்வதால்.

இப்படியே, ஆதி சங்கரர் தனது சௌந்தர்ய லஹரி 100-வது ஸ்லோகத்தில், வினயத்தோடு கூறியுள்ளார்.

பிரதீப-ஜ்வாலாபி: திவஸகர-நீராஜன-விதி:
ஸுதா-ஸூதே: சந்த்ரோ-பல-ஜல-லவை: அர்க்ய-ரசனா
ஸ்வகீயை: அம்போபி: ஸலில-நிதி-ஸௌஹித்யகரணம்
த்வதீயாபி: வாக்பி: தவ ஜனனி வாசாம் ஸ்துதி: இயம்

அதாவது, அன்னையை இப்படி 100 ஸ்லோகங்களால் தாம் துதித்தது, ஒளியின் பிதாவான சூரியனுக்கு கற்பூரத்தால் ஆரத்தி எடுப்பது போன்றது. சந்திரகாந்த கல்லிற்கு சந்திரனால் தான் குளிர்ச்சியே. அந்த சந்திரனுக்கு சந்திரகாந்த கல்லிலிருந்து வடியும் நீரை எடுத்து அர்க்யம் அளிப்பது போல் ஆகும். மேலும் சமுத்திரத்தில் இருந்து நீரை எடுத்து சமுத்திரத்திற்கே அபிஷேகம் செய்வது போல் ஆகும்.

நாம் ஒரு ஸ்லோகம் ஸ்வயமாக எழுதினாலும் நான் செய்தேன் நான் செய்தேன் என்று இன்றெல்லாம் copy-rights பதிவு செய்கிறோம். சங்கரர், அபிராமி பட்டர் போன்ற மகான்கள், உலக நலனுக்காக பல ஸ்தோத்திரங்கள் செய்தாலும், தான் எதுவும் செய்யவில்லை. எல்லாம் அம்பாளின் அருள் என்று இருக்கிறார்கள். அவர்கள் மகான்கள்.

பாடல் (ராகம் - மலையமாருதம், தாளம் - மிஸ்ர சாபு) கேட்க:


Check this out on Chirbit

Monday, 20 April 2015

பாடல் - 25

பலன் - நினைத்த காரியம் கைக்கூடும்

பின்னே திரிந்து, உன் அடியாரை பேணி, பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன், முதல் மூவருக்கும்
அன்னே, உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே? இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே.

பொருள்:

மும்முர்த்திகளுக்கும் தாயே, உலகுக்கு அருமையான மருந்தே, அன்னை அபிராமியே, இனி பிறக்கக்கூடாது என்பதற்காக, தவங்கள் பல செய்தேன், செய்துக்கொண்டிருக்கிறேன். உன் அடியார்களுக்கு தொண்டு செய்கிறேன். எப்பொழுதும் உன்னை மட்டுமே மறவாமல் துதி செய்கின்றேன். இனியும் துதிப்பேன்.

பாடல் (ராகம் - சரஸ்வதி மனோஹரி, தாளம் - ஆதி ) கேட்க:



Check this out on Chirbit

Friday, 10 April 2015

பாடல் - 24

பலன்: நோய்கள் அகலும்

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புணைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவற்கு
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே,
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே.

பொருள்:

இப்பாடல், இதற்கு முந்திய பாடல் இரண்டிலும், பட்டர், அபிராமியை தவிர வேறொருவரை வணங்கமாட்டேன் என்கிறார். வேண்டுவனவற்றை அளிக்கும் சிந்தாமணி அன்னை அபிராமி. "தரித்ராணாம் சிந்தாமணி குண நிகா" என்று சௌந்தர்ய லஹரி 3-வது ஸ்லோகத்தில் (அவித்யனாம்...) அன்னையின் பாத தூளி கேட்பவர்களுக்கு கேட்டதை அளிக்கும் சிந்தாமணி குவியல் என்று சங்கரர் கூறியுள்ளார். ஒரு சிந்தாமணி இருந்தாலே எல்லாவற்றையும் அளித்துவிடும். இங்கே அன்னையின் பாத தூளியே, சிந்தாமணி குவியல். அப்போ அன்னை எப்படிப்பட்டவள்?

  1. அன்னை மணி போல் உயர்ந்தவள். 
  2. அந்த மணியாகிய ரத்தினத்தின் ஒளி அவளே. 
  3. ஒளிர்கின்ற ரத்தினங்கள் ஒன்றாய் தொடுத்த அணிகலன் அவளே. 
  4. அணிகின்ற அந்த அணிகலனின் அழகும் அன்னையே. 
  5. அவளை அணுகாமல் ஒருவர் இருந்தால், அவர் பிணியால் பீடிக்கப்பட்டவர் ஆவார். அந்த பிணியும் அவளே. 
  6. அவர்கள் திருந்தி அன்னையை அணுகினால், அவருக்கு பிணியை களைந்து அறுத்துவிடுபவள் அன்னையே. அதனால் அந்த பிணிக்கு மருந்தும் அவளே.
  7. தேவர்களுக்கு அன்னையே சிறந்த பரிசாவாள். தேவேந்த்ரனுக்காக பல சமயங்களில் அருள் செய்துள்ளாள்.

இப்படிபட்டவளான அபிராமியின் தாமரை பாதங்களை விடுத்து வேறொன்றையும் பணிய மாட்டேன்.

பாடல் (ராகம்-ஜெயந்தஸ்ரீ, தாளம்-ஆதி) கேட்க:

Check this out on Chirbit

Thursday, 9 April 2015

பாடல் - 23

பலன்: குறைவில்லா மகிழ்ச்சி நல்கும்

கொள்ளேன், மனத்தில் நின்கோலம் அல்லாது, அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்கும் களியே, அளியஎன் கண்மணியே.

பொருள்:

அன்னை அபிராமியே, உன் கோலம் அல்லாது மற்றொன்றை என் மனத்தில் நினைத்துக்கொள்ள மாட்டேன். உன் அடியார்களை பகைத்துக்கொள்ள மாட்டேன். உன்னைத்தவிர மற்றொரு தெய்வத்தை விரும்ப மாட்டேன். மேல் உலகம், பூமி, கீழ் உலகம் ஆகிய மூவுலகிற்கும் உள்ளேயும். இவற்றிற்கு வெளியேவும் நிறைந்திருக்கும் அன்னையே, நீ என்னுள்ளத்தில் என்றும் ஆனந்தத்தை தரும் தேன் போன்றவள். ஆனந்தத்திற்கு ஆனந்தம் தருபவள். என் கண்மணி நீ.

ஆனந்த லஹரி என்று அம்பாளுக்கு ஒரு பெயர். அதாவது ஆனந்ததினை பிரவாஹமாக அருள்பவள். சங்கரரின் சௌந்தர்ய லஹரியில் முதல் 41 ஸ்லோகங்கள் ஆனந்தலஹரி என்றுதான் அழைக்கப்படுகின்றன. அதாவது ஆனந்த வெள்ளம் என்று பொருள். பின் இருக்கக்கூடிய 59 ஸ்லோகங்கள் சௌந்தர்ய லஹரி - அழகு வெள்ளம்.

பாடல் (ராகம் - ஸாமா, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 1 April 2015

பாடல் - 22

பலன்: பிறவாமை அளிக்கும்

கொடியே, இளவஞ்சி கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே, மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரை பெற்ற அம்மே,
அடியேன் இறந்து இங்கு இனி பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளேன்

பொருள்:

கொடி போன்றவளே, இளங்கன்று போல் பசுமையான கொம்பே, தகுதியற்ற எனக்கு தானாகவே முன்வந்து அருள்புரிபவளே, வேதத்தின் ஆதாரமே, பனி மூடிய இமயத்தில் பிறந்த பெண் யானை போன்ற வீரம் நிறைந்தவளே, பிரம்மா முதலிய தேவர்களை பெற்றவளே, நான் இப்பிறவியில் இறந்த பின் மீண்டும் பிறவாமல் என்னை ஆட்கொள்வாயாக.

பாடல் (ராகம் - புஷ்பலதிகா, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit