Sunday 25 October 2015

பாடல் - 83

பலன்: அனைத்தும் கிடைக்கப்பெறுவோம்.

விரவும் புதுமலர் இட்டு நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், ஐராவதமும், பகீரதியும்
உரவும், குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.

பொருள்:

தேன்சிந்தும், புதிய மலர்களைக் கொண்டு (அன்று மலர்ந்த மலர்) அன்னையின் பாதத் தாமரையினை, இரவும் பகலும் (எந்நேரமும்) பூஜை செய்பவர்கள்,

1. தேவர்கள் யாவரும் விரும்பும் இந்திரப்பதவி

2. ஐராவதம் என்கிற வெள்ளை நிற யானை (இந்திரனின் வாஹனம்)

3. பகீரதி - ஆகாய கங்கை. விஷ்ணு வாமனனாக அவதாரம் செய்து, மஹா பலி சக்ரவர்த்தியிடமிருந்து, 3 அடி மண் கேட்டப்பின், முதல் அடியாக, த்ரிவிக்ரம அவதாரம் செய்து (விஸ்வரூபம்) வான் நோக்கி தன் காலைத் தூக்கினார். அப்போது, பிரம்மா இருக்கும் சத்யலோகம் வரை, இந்த அண்டத்தை பிளந்து அந்த திருவடி சென்றது. அப்போது, அந்த பாதத்திற்கு, பிரம்மா, தன் கமண்டலத்திலிருந்து, நீரை ஊற்றி, அபிஷேகம் செய்தார். அந்த நீரே ஆகாய கங்கையாக தோன்றியது. அதனை பூமிக்கு கொண்டு வர பகீரதன் கடினமாக முயற்சி செய்தான். அதனால், கங்கை, பகீரதி என்ற பெயரால் அழைக்கப்பட்டாள். பகீரதன் கொண்டு வந்த நதியினை, நேரே பூமிக்கு விட்டால், பூமி தாங்காது என்பதால், சிவபெருமான், தன் சடையினை அவிழ்த்து, கங்கையை தன் தலையில் தாங்கி, பின் மெதுவாக பூமிக்கு விட்டார்.

4. உரவும் குலிசம் - வலிமையான வஜ்ராயுதம் (இந்திரனின் ஆயுதம்). உர - வலிமை.

5. கற்பக விருட்சம்

ஆகியவற்றை பெறுவார்கள்.

(இமையோர் - தேவர்கள் - அவர்கள் கண்களை ஒரு பொழுதும் இமைக்க மாட்டார்கள். நளன் கதையில், தமயந்தி இவ்வாறுதான் உண்மையான நளனை மற்ற தேவர்களிடமிருந்து, தன் சுயம்வரத்தில் கண்டு பிடித்தாள்).

பாடல் (ராகம் - கமாஸ், தாளம் ----விருத்தம்---) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment