Friday 2 October 2015

பாடல் - 70

பலன்: நுண்கலைகளில் தேர்ச்சி பெறுவோம்

கண்களிக்கும் படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல், வீணையும் கையும் பயோதரமும்,
மண்களிக்கும் பச்சைவண்ணமும் ஆகி, மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே

பொருள்:

கடம்பாடவியில் - கடம்ப (கதம்ப) வனத்தில்

கடம்ப வனம் என்னும் இடத்தில், அன்னை அபிராமியை கண் களிக்கும் வண்ணம் கண்டுகொண்டேன். (கதம்ப வன சஞ்சாரிணி என்று அம்பாளுக்கு ஒரு பெயர்). எவ்வாறு?
  • பண்கள் மகிழும் இனிய குரல் உடையவள் அம்பாள். அதனை கேட்டேன். 
  • கையில் வீணையினை அம்பாள் வைத்துள்ளாள். 
  • அவள் முலைகளை தாங்கிய திருமார்பு.
  • மண் மகிழும் பச்சை வண்ணம். 
ஆகியவற்றோடு மாதங்கியான அம்பாளை கண்டுகொண்டேன். அந்த பேரழகை கண்டுகொண்டேன் என்று பட்டர் கூறுகிறார்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில், மஹா பத்மாட வீசம்ஸ்தா - கதம்ப வன வாசினி என்று ஒரு ஸ்லோகம் வரும்.

மேலும் ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய காதம்பரி ப்ரியாயை என்ற மோகன ராக பாடலில், அம்பாளை அவர் கதம்ப கான நாயை நமஸ்தே  என்று குறிப்பிட்டுள்ளார். (கதம்ப கான நாயை நமஸ்தே - கதம்ப வன நாயகிக்கு நமஸ்காரம்).

ஸ்ரீ லலிதா தாசர் என்ற ஒரு மஹான், ஸ்ரீ காமகோடி பீடஸ்திதே என்ற சாவேரி ராக பாடலில், காமாக்ஷி அம்மனை கதம்ப வன நிலயே என்று பாடியுள்ளார்.

மதங்க முனியின் பெண்ணாக அம்பாள் அவதரித்தாள். அதனால், மதங்கர் குல பெண் என்று இங்கு குறிப்பிட்டுள்ளார். மதங்கரின் பெண் ஆதலால் மாதங்கி என்று பெயர் பெற்றாள். மீனாக்ஷி அம்மை, மாதங்கி ஸ்வரூபம் என்று நூல்கள் கூறுகின்றன. மீனாக்ஷியின் நிறம் மரகத பச்சை. மரகத சாயே என்று ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் தான் எழுதிய மீனாக்ஷி மேமுதம் என்ற பூர்வி கல்யாணி ராக பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

மண் செழிப்பானது என்றால், நிறைய பயிர்கள் விளையும். அதனால் எங்கும் பச்சையாக இருக்கும். அப்போது நாடெங்கும் மகிழ்ச்சி பொங்கும். அதனால் மண் களிக்கும் பச்சை வண்ணம் என்று பட்டர் பாடியுள்ளார்.

பாடல் (ராகம் - பௌளி, தாளம் - ஆதி) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment