Thursday 20 August 2015

பாடல் - 51

பலன்: மோகம் நீங்கும்

அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இல்லாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே

பொருள்:
அருள் ஒன்று இல்லாத அசுரர் - க்ரோதமே உருவான, அன்பு என்பது தங்களிடத்தே ஓரு சிறிதளவும் இல்லாத அரக்கர்கள், தங்களின் திரிபுரமே என்றும் நிலையானது என்று இருந்துவந்தனர். அந்த திரிபுரத்தை தனது அம்புகளால் எரித்து அழித்த சிவபெருமானும், முகுந்தனான விஷ்ணுவும், தொழும் அன்னையே,  உன் பாதமே துணை என்று எந்நாளும் தொழும் உன் அடியார்களின் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியை அறுத்து, அவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறாவத வரத்தை தந்தருள்வாய்.

பாபநாசம் சிவன் என்னும் மகான், தனது லதாங்கி ராக பாடலில்,
பிறவா வரம் தாரும் பெம்மானே
பிறவா வரம் தாரும் - பிறந்தாலும் நின் திருவடி
மறவா வரம் தாரும் - மாநிலமீதில்
பிறவா வரம் தாரும்.

என்று உருகி பாடியிருப்பார்.

அப்பர் சுவாமிகள், நடராஜ பெருமானின் குனித்த புருவத்தினையும், கொவ்வை செவ்வாயில் திகழும் குமிழ் சிரிப்பினையும், பனித்த சடையினையும், பவழம் போன்ற மேனியில் பூசப்பட்ட திருநீறினையும், தூக்கிய திருவடியினையும் ஒருவர் காணலாம் என்றால் மனித பிறவி எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று பாடியுள்ளார்.

ஆனால் ஒருமுறை இறைவனின் திருக்கோலத்தை நாம் பார்த்துவிட்டால், பிறகு பிறவிப்பெருங்கடலை நாம் கடந்துவிடலாம்.

திருவள்ளுவர் கூறியது போல்,
பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தாதார்
இறைவனடி சேரா தார் . (அதிகாரம் 1- குறள் 10)

இறைவனிடம் சரணடயாதவர்கள் பிறப்பு இறப்பு சுழலில் சிக்கித்தவிப்பார். இறைவனிடம் சரணடைந்தவர்கள் சுழலிலிருந்து விடுபட்டு இன்பம் பெறுவார்.

பாடல் (ராகம் - தேவகாந்தாரி, தாளம் - --விருத்தம் --) கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment