Thursday 2 July 2015

பாடல் - 42

பலன்: உலகம் நம் வசமாகும்

இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை, மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல்லரவின்
படம் கொண்ட அல்குல், பனிமொழி, வேத பரிபுரையே

பொருள்:
அபிராமி அம்மையின் ஸ்தனங்கள் [மார்பகங்கள்] கருணை ததும்புவது, பெரியது போன்றெல்லாம் முந்திய பாடல்கள் சிலவற்றில் பார்த்துள்ளோம். அவை ஒன்றொடு ஒன்று போட்டியிட்டுக்கொண்டு கருணை சுரப்பதால் இடமின்றி மோதிக்கொண்டு விம்முகிறது. பின்னர் இரண்டும் சற்றே இளகி மேலும் கருணை சுரக்க வழிவகுக்கின்றன.

அப்படிப்பட்ட ஸ்தனங்களின் மேல் படுமாறு, முத்து மாலைகளை அணிந்துக்கொண்டிருக்கிறாள். இந்த ஸ்தனங்கள் , வலிமையான நெஞ்சினை உடையவரும், கயிலை மலை மேல் வாழ்பவருமான சிவபெருமானின் மனத்தினையும் ஆட்டிவைக்கிறது.

அம்பாளின் இடையானது நல்ல பாம்பின் படம் போல், மெல்லியதாகவும், ஒளி வீசுவதாகவும் உள்ளது. அம்பாள், மனதினை குளிர்விக்கும் வார்த்தைகள் பேசுபவள். வேதங்களை தன் பாத சிலம்பாக அணிந்தவள்.

மதுரபாஷினி என்று அம்பாளுக்கு பெயர் உண்டு. பெரியசாமி தூரன் என்னும் சாஹித்ய கர்த்தா, தாயே திரிபுர சுந்தரி என்ற பா (சுத்த சாவேரி ராகம்) பாடலில்,  "தேனார் மொழி வல்லி ஜகமெல்லாம் படைத்தாள்" என்று அம்பாளை பாடியுள்ளார்.

இதேபோல், சங்கீத கலாநிதி திரு G.N.பாலசுப்ரமணியன் (GNB) அவர்கள், பரம அம்பாள் உபாசகர். ராஜராஜேஸ்வரி பூஜை செய்பவர். அவரும் அம்பாள் பேரில் பல பாடல்கள் பாடியுள்ளார். அவற்றிலெல்லாம், "சுதா மாதுர்ய பாஷிணி", "சுதா மதுர வாக்விலாசினி" என்று பாடியுள்ளார்.

மேலும் லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில், "நிஜ சல்லாப மாதுர்ய விநிர் பர்த்சித கச்சபி" என்று வரும். அதாவது கச்சபி = சரஸ்வதியின் வீணை. அந்த வீனா காணத்தை அம்பாள் ரசிக்கும் போது, "ஆஹா" என்று உரைத்தாள். அது வீணையின் சப்தத்தை விட மதுரமாக (இனிமையாக) இருந்தது என்று பொருள்.

சௌந்தர்ய லஹரி - 66 ஆம் ஸ்லோகத்தில், தேவியின் குரல், வீணையினும் இனிது என்று சங்கரர் கூறியுள்ளார்.

விபஞ்ச்யா காயந்தீ விவிதம் அபதானம் பசுபதேஸ்
த்வயாரப்தே வக்தும் சலிதசிரஸா ஸாது வசனே
ததீயை: மாதுர்யை: அபலபித தந்த்ரீ கலரவாம்
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம்

பசுபதியான பரமசிவனின் லீலைகளை அழகாக வீணை மீட்டி சரஸ்வதி பாடுகிறாள். அதை அம்பாள் ரசிக்கிறாள். அப்போது "ஆஹா" என்று அதை பாராட்டி தேவி  கூறுகையில், அந்த சப்தம், தனது வீணையை காட்டிலும் இனிமையாக இருந்ததால், சரஸ்வதி, வெட்கப்பட்டுக்கொண்டு தன் வீணையினை உரை போட்டு யாருக்கும் தெரியாதவாறு மூடி மறைத்து விடுகிறாள்.

பாடல் (ராகம் - சாரங்கா, தாளம் - --விருத்தம்--) கேட்க:

Check this out on Chirbit

2 comments:

  1. அருமை. எனக்கு அதிகம் ஏது தெரியாது. சின்ன எழுத்துப் பிழை நெருடலாய் இருந்ததது. பனி மொழி (பாடலில் "பணி" என்று உள்ளது. அப்புறன் நல்லரவின் படம் (வடம் என்று உள்ளது). நீங்கள் நல்லன எல்லாம பெற்று நீடூடி வாழ வாத்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. மாற்றிவிட்டேன்.

      Delete